Stress at Work - வேலையால் ஏற்படும் மன அழுத்தத்தால் நி&#299

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வேலையால் ஏற்படும் மன அழுத்தத்தால் நிறுவனத்துக்கே பிரச்னை!

சமாளிக்க முடியாத வேலைப்பளு, உடன் பணிபுரிவோர்/மேலாளரின் ஆதரவின்மை, சக பணியாளருடன் சுமுக உறவு இல்லாமை, மேலாளரின் காயப்படுத்தும் நடவடிக்கை, எந்நேரமும் பறிபோகும் வேலை, ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்வது, தகுதிக்குக் குறைந்த வேலை, சரிப்படாத வேலை நேரம், இரவு நேர வேலை,


வேலையின் தன்மையால் குடும்பம்/சொந்த வேலைகளைக் கூட பார்க்க முடியாத நிலை, அதிக நேர பயணம், விடுப்பு எடுக்க முடியாத வேலைத் தன்மை, மோசமான பணியிடச் சூழல், பணியாளர் நலனில் அக்கறை இல்லாத நிறுவனம், பிடிக்காத வேலை, குறைந்த சம்பளம், பணி உயர்வு கிடைக்காதது... இப்படி பல்வேறு காரணங்களால் அலுவலகப் பணியாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

சில நிறுவனங்களில் இரவு நேர வேலை செய்யும் கட்டாயத்தால், இயற்கைக்கு மாறாக தூக்கப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதனால், உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. பணியாளர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க பல நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.

மன அழுத்தம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் மட்டுமே அல்ல. பாதிக்கப்பட்டவரின் உடல்/மனம் மற்றும் அவரது குடும்பத்தை மட்டுமே அது பாதிப்பதில்லை. உண்மையில், அவர் பணிபுரியும் நிறுவனத்தின் லாபம் மற்றும் செயல்திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதே ஆராய்ச்சி முடிவுகளின் அதிர்ச்சி அளிக்கும் உண்மை.

திருமணமும் வேலையும் நன்றாக அமைந்து விட்டால் ஒருவரின் வாழ்வே மேன்மையடையும். இன்றைய சூழ்நிலையிலோ, ஒரு நிறுவனத்தில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வேலையை ஈடுபாடு இல்லாமல் செய்கின்றனர். ‘மகிழ்ச்சியான தொழிலாளர்களால்தான் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பது ஒரு கூற்று. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் முதலில் வேலையை வெறுப்பார்கள்.

அதனால் வேலையில் செயல்திறன் குறையும். அவர்களுக்கு ஏற்படும் உடல்/மனநலக் குறைவால் அடிக்கடி விடுப்பு எடுப்பார்கள். சிலர் குறை கூறிக்கொண்டே, பிறரையும் வேலை செய்ய விடாமல் செய்வார்கள். இவர்களால், பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வேலை பாதிக்கும்.

இன்னும் சிலர், வேறு வேலை தேடி செல்வார்கள். இப்படிச் செய்வதால், அந்நிறுவனம் அவர்களை வேலைக்கு சேர்க்கவும், பயிற்சி கொடுக்கவும் எடுத்துக்கொண்ட நேரம், பணம் என எல்லாமே வீண்தானே? அதுமட்டுமல்ல...

அந்த இடத்தை நிரப்ப சரியான நபரைத் தேர்வு செய்து, பயிற்சியளிக்க மீண்டும் பணமும் நேரமும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.அதிருப்தியான ஊழியர்கள் (உதாரணமாக... சேல்ஸ்மேன்) தங்கள் வேலையை சரிவர செய்யாமலிருத்தல், வாடிக்கையாளர்களை அதிருப்தி/கோபமடையச் செய்து வணிகத்தையே பாதிக்கும் ஆபத்தும் உண்டு. பேருந்து ஓட்டுநனருக்கு மன அழுத்தம் இருந்தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மொத்தத்தில் வேலையை வெறுத்தால், அதனால் ஏற்படும் தீமைகள் அதிகம்... அதே நேரம், வேலையை நேசித்துச் செய்தால், அதன் நன்மைகள் அளவில்லாதது.

மனிதன் தன் வாழ்நாளில் வெகுநேரம் கழிக்கும் வேலையில் மன அழுத்தம் ஏற்படாமல் அவர்களை பேணி காக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் தலையாயக் கடமை. இதற்கான ஆய்வு நடத்தி, மன அழுத்தக் காரணிகளை அறிந்து கொள்வது முதல் படி. ஆய்வின் முடிவுக்கேற்ப, தங்களால் முடிந்த சில மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

பாதிக்கப்பட்டோருக்கு மன அழுத்தத்தைச் சமாளிப்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். ஒவ்வொருவரும் அவரவர் வேலையை சரிவரப் பார்த்தாலே,பெரும்பாலான பிரச்னைகளுக்கு முடிவு கிடைத்துவிடும். நம்மைச் சுற்றி ஏற்படும் ஏதேனும் பிரச்னையை முழுவதுமாக ஆராய்ந்தால், எவரேனும் தன் கடமையை ஒழுங்காகச் செய்யாமல் இருத்தலே அடிப்படைக் காரணமாக இருக்கும்.

ஊழியர் ஒருவரிடம் சென்று, ‘ஏன் நீங்கள் இப்போதைய உத்தியோகத்தில் உள்ளீர்கள்’ என்ற கேள்வியைக் கேட்டால், பின்வரும் பதில்களையே பொதுவாக அளிக்கிறார்... “என் அம்மா/அப்பா சொன்னார்கள்...அதனால் செல்கிறேன்...’’ “இந்த வேலைதான் கிடைத்தது...” “என் குடும்பத்தை பராமரிக்க வேறு வழி தெரியவில்லை...” “பணத்துக்காக இங்கு வேலை பார்க்கிறேன்...”

இப்பதில்களைக் கூர்ந்து கவனித்தால் தன் வாழ்வில் பெரும்பகுதியைக் கழிக்கும் வேலையை, அவர் விருப்பமில்லாமலேயே தேர்ந்தெடுக்கிறார் என்பது புரியும். சூழ்நிலைக் காரணமாக பிடிக்காத வேலையைத் தேர்ந்தெடுத்தாலும் அந்த வேலையை நாளடைவில் ரசிக்கக் கற்றுக்கொள்வது அவசியம். எத்தனை பேர் தம் வேலையை ரசித்து மனநிறைவுடன் செய்கின்றனர்? இதை எப்படித் தவிர்த்து, வேலையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

வேலையைத் தேர்ந்தெடுக்கும் முன்னரே சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தொழிலையோ/வேலையையோ செய்வதற்கு ஆர்வம் மட்டுமே போதாது. அதற்கான திறமை தன்னிடம் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். ஆர்வம் இருப்பவர்களுக்கு எல்லாம் திறமையும் இருக்க வேண்டுமென அவசியமில்லை.

நண்பர்களைப் பார்த்தோ, ஊடகங்களை பார்த்தோ, பல விஷயங்களில் ஆர்வம் கொண்டு அதை மேற்கொள்ளலாம் என ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதைத் திறம்பட செய்வதற்கு தனக்கு திறமையுள்ளதா? அப்படி இல்லையெனில் அதனை வளர்த்துக் கொள்ள நம்மால் நேரம் செலவிட முடியுமா? இவற்றையும் கணிக்க வேண்டும். இதற்கு ஒருவர் தன்னுடைய பலம், பலவீனம் மற்றும் தனித்திறமை, ஆளுமை என எல்லாவற்றையும் தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

திறமையின்றி, ஆர்வம் மட்டும் கொண்டு என்னதான் வேலை தேடினாலும், அது அவருக்குக் கிட்டாமல், மனச்சோர்வே ஏற்படும். இப்படித்தான் பலர் தொழில் செய்யும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல், பல தொழில்களில் முதலீடு செய்து, நஷ்டமடைந்து, இறுதியில் மனம் உடைந்து போகின்றனர். சிலருக்கு ஆர்வம், திறமை என இரண்டும் இருந்தாலும் அந்த வேலையை செய்யும் சூழ்நிலைக்கேற்ற ஆளுமைத் திறன்கள் இருக்காது.

ஒருவருக்கு சேல்ஸ்மேனாக ஆர்வமும் அதற்குரிய திறமையும் உள்ளது என வைத்துக்கொள்வோம். அந்த வேலையைச் செய்யும்போது பல நேரங்களில் பொய் சொல்லவேண்டியிருக்கும். அப்படி பொய் சொல்ல முடியாத ஆளுமை கொண்டுள்ள ஒருவரால் தகுதி, ஆர்வம் இருந்தாலும், அங்கே மனநிறைவுடன், திறம்பட வேலை செய்ய இயலாது. அவருக்கும் மன அழுத்தம் ஏற்பட்டு, அந்த நிறுவனத்துக்கு நஷ்டமே ஏற்படும். இதையெல்லாம் ஆராய்ந்தபிறகு வேலையில் சேர்ந்தால், வெற்றி நிச்சயம்.

இதையெல்லாம் சரி பார்க்காமல், பொருந்தாத வேலையில் சூழ்நிலை காரணமாக பணியைத் தொடர வேண்டியிருந்தால், என்ன செய்ய வேண்டும்? உண்மையில் பலரும் இப்படிப்பட்ட பொருந்தாத வேலையிலேயே பிடித்தமில்லாமல் தொடர வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு ஒரே விடை அந்த சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதே! பனிப்பிரதேசத்தில் வாழும் கரடி, அது வாழும் தட்பவெட்ப சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது.

அது பொதுவாக அதிக பனி காலத்தில் தூங்கிவிடும். பனியைப் பொறுத்துக் கொள்ள அதன் உடல் முழுதும் அடர்ந்த முடிகள் முளைக்கும். இயற்கையிலேயே இப்படிப் பல உதாரணங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. இவை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடமென்ன? அடுத்தஇதழில் பார்ப்போம்!

அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்

1.வேலையை வெறுப்பது/அதிருப்தி(வேலையை விட்டு விடலாம் என முடிவெடுப்பது)
2.உடல்/மனநலக் குறைவால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை
3.விவாகரத்து
4.செயல்திறன் குறைந்து போவது (முன்பு திறம்பட செய்த வேலையை செய்ய முடியாமல்திணறுவது)
5.அலுவலகத்தில் விபத்து ஏற்படுதல்
6.வீட்டில் கணவன்/ மனைவியுடன் சண்டை, பிள்ளைகளை சரிவர பேண முடியாத நிலை
7.புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் அதிகரித்தல்
8.வேலையில் கவனம் செலுத்த இயலாமை, சோர்வு, கோபம்,
9.பணியிடத்தில் சண்டைச் சச்சரவு
10.உடல்/மனநலப் பிரச்னைகள்: வலிகள், தூக்கத்தில் இடையூறுகள், இதய நோய், நீரிழிவு, முதுகு மற்றும் தசைக்கட்டு பிரச்னைகள், தற்கொலை எண்ணம், எடை கூடுதல், மாதவிடாய் கோளாறுகள், கேன்சர், வயிற்றுப்புண், எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் பல நோய் தொற்றுகள்.

அழுத்தத்தால் வந்த கொதிப்பு

பிரபுவுக்கு வயது 35. திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். மனைவியும் வேலைக்கு செல்கிறார். கடந்த பதினைந்து வருடங்களாக ஒரே நிறுவனத்தில் வேலை. சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் வேலையிலிருந்து விடுபட்டு ஓய்வாக இருக்கிறார். பிரபு மாரடைப்புக்காக சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு ஆலோசனைக்காக சென்றிருந்தபோது பிரபுவை சந்தித்தேன். குடி/சிகரெட் பழக்கம் இல்லையென்றும், ஆரோக்கியமாக வீட்டு உணவு சாப்பிடுவதாகவும் குறிப்பிட்டார். தனக்கு இந்த வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார்.

தன் இரு பிள்ளைகளும் பள்ளியில் படிப்பதாகவும், அவர்களாலும் பிரச்னை ஒன்றுமில்லை என்றும் கூறினார். உங்களுக்கு வேலை பிடித்திருக்கின்றதா என்றதற்கு அவர் ரொம்ப நேரம் யோசித்துவிட்டு “இல்லை” என்றார். பணத்துக்காக, கட்டாயத்தின் பேரில் இந்த வேலையில் இருப்பதாகவும் சொன்னார்.

பிரபு சிறு வயதிலிருந்தே தன்னைப் பற்றி உயர்வாகவும், மற்றவர்களை பற்றி ஏளனமாகவும் கருதும் மனப்பான்மை கொண்டவர். எல்லோரிடத்தும் தற்பெருமை பேசும் பழக்கம் கொண்டவர். நிறுவனம் தொடங்கிய நாள் முதல் பிரபு அங்கு வேலைப் பார்த்து வந்துள்ளார். 5 வருடங்களுக்கு முன் அந்நிறுவனத்தை வேறொரு நிறுவனம் விலைக்கு வாங்கியதிலிருந்து ஆரம்பித்தது பிரச்னை. பிரபு செய்த வேலைகள் எல்லாம் கணினிமயமாக்கப்பட்டன.

மேலாளர்களாக கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் படித்த இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். மற்றவர் கீழ் வேலை பார்க்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். கணினியில் வேலை செய்ய தெரியாமல் மேலாளரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். பிரச்னையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையும் தன்மானமும் பிரபுவை வேலையை விட முடியாமல் தடுத்தன. இத்தருணத்தில் மனைவியின் சம்பளம் பிரபுவை விட உயர்ந்தது.

அது பிரபுவுக்கு மேலும் மன அழுத்தத்தை அதிகரித்தது. வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளின் மேல் எரிந்து விழுந்தார். அலுவலக வேலை தவிர பகுதிநேர வேலைக்கும் செல்ல ஆரம்பித்தார். மன உளைச்சலை சமாளிக்க, வீட்டில் நேரம் செலவழிக்காமல், தன் மனைவி, மக்களைத் தவிர்த்து வேறு வெளி வேலையிலேயே முழுநேரமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மேலும், மன அழுத்தத்தினால், ஞாபக மறதி மற்றும் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை வேறு. இதனால், மேலாளரிடம் தினமும் திட்டுவாங்கி, வேலை எந்நேரமும் பறி போகலாம் என்ற நிலையில் என்னவாகும் என நினைத்து நினைத்து மனமுடைந்தார்.

மனஅழுத்தத்தினால், தலைவலி, தூக்கமின்மை போன்ற உடல்ரீதியான பாதிப்பும் ஏற்பட்டது. ரத்த அழுத்தம் இருப்பதையும் பொருட்படுத்தாமல், மருந்தை சரியாக உட்கொள்ளாமல் ஆரோக்கியத்தை புறக்கணித்தார்.

இப்படியே 5 வருடம் கழிய, நாட்பட்ட மன அழுத்தத்தினால் அதிகரித்த ரத்தக் கொதிப்பினால் அவருக்கு ஒருநாள் மாரடைப்பு ஏற்பட்டது.பிரபு மன அழுத்தத்தின் காரணத்தை ஆராய்ந்து தன் கணினித் திறமையையும், மாறிவரும் அலுவலகச்சூழலுக்கு ஏற்ப தன் குணத்தையும் மாற்றி இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மருந்து உட்கொண்டிருக்க வேண்டும்.

சரியான நேரத்தில், மன அழுத்தத்தின் அறிகுறிகள் தெரிந்தவுடனே அவர் அதை அணுகி சரி செய்திருந்தால் இன்று மாரடைப்பு விளைவிக்கும் உயிருக்கு ஆபத்தான இதயநோய் அவரை தாக்கி இருக்காது. தன் மனப்பான்மை யால் ( Personality),, அதிக மன அழுத்தம் ஏற்பட்டு அது ரத்தக் கொதிப்பை அதிகரித்து அதன் மூலம் மாரடைப்புக்கு வித்திட்டதையறிந்து அதிர்ச்சியுற்றார்.

ஆலோசனைக்கு பின்னர் அவரின் ஆளுமையில் நல்ல மாற்றம் தெரிந்தது. உடல்/மன ஆரோக்கியத்தை மேலும் புறக்கணிக்காமல், தகுந்த நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள உதவும் மன அழுத்தத்தின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வும் பெற்றார். இனிமேல் எப்பேர்பட்ட சூழலிலும் தான் வேலை செய்ய தயார் என உறுதியுடன் சொல்லும் பிரபு, மனைவி, மக்களுடன் நேரம் செலவழித்து அன்புடன் வாழ்ந்து வருகிறார்.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#2
Re: Stress at Work - வேலையால் ஏற்படும் மன அழுத்தத்தால் நி&

nalla thagaval.nandri.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
Re: Stress at Work - வேலையால் ஏற்படும் மன அழுத்தத்தால் நி&

Useful sharing.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.