Students and Stress - மாணவர்களை தாக்கும் மன அழுத்தம்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மாணவர்களை தாக்கும் மன அழுத்தம்!

பொதுவாகவே பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்கள் குறிப்பாக 10, 12ம் வகுப்பு எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வழக்கம். படிக்காவிட்டால் அவர்கள் எதிர்காலமே இருண்டு போய்விடுமே என்ற எண்ணத்தால்தான் இத்தனை எதிர்பார்ப்பும்.

ஆனால், இப்படி அவர்களை இடைவெளியில்லாமல், எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் கட்டாயப்படுத்தி படிக்க வைத்தால் நிச்சயம் மன அழுத்தம் ஏற்படும். இதனால், தேர்வில் தோல்வியடையவில்லை என்றாலும், வாழ்க்கையில் தோல்வியை தழுவுவார்கள் எனப் பல ஆராய்ச்சி முடிவுகள் உரைக்கின்றன.

நல்ல கல்லூரியில் சேர்க்கை... நல்ல அலுவலகத்தில் வேலை, கை நிறைய சம்பளம்... நிறைவான வாழ்க்கை... இப்படி எதிர்காலம் பிரகாசமாக அமைய வேண்டும் என்ற பெற்றோரின் ஆசைகள் மன அழுத்தம் காரணமாக நிராசையாகவே ஆகிவிடும். சில நேரங்களில் மன அழுத்தத்துடனே விருப்பமில்லாமல் படித்து நல்ல வேலை அமைந்தாலும் குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோரை பெரும்பாலும் மதிக்க மாட்டார்கள். பல தருணங்களில் குடி மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. மொத்தத் தில், அவர்களின் ஆளுமையே (Personality) பாதிக்கப்படலாம்.

இதற்காக மாணவர்களை படிக்க வேண்டாம் என கூறவில்லை. எந்தவொரு விஷயத்தையும் ரசித்து அதன் அர்த்தத்தை உணர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம். கட்டாயத்தால் பிடிக்காத பாடப்பிரிவை எடுப்பவர்கள், தங்கள் வாழ்க்கையை எந்த மகிழ்ச்சியும் இன்றி மற்றவர்களை குறை சொல்லியே காலத்தை கழிப்பார்கள்.

இப்படியொரு வாழ்க்கை அவசியம்தானா?மாணவர்களுக்கு மன அழுத்தம் வராமல் இருக்க பெற்றோரின் பங்கு மிகவும் அவசியம். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கல்வியின் சக்தியை சொல்லியே வளர்க்க வேண்டும். இதற்காக, ‘படித்தால்தான் நல்லா சம்பாதிக்கலாம்’, ‘படிக்கலைன்னா மாடுதான் மேய்க்கணும்’, ‘படி படி’ என்பது போன்ற வாசகங்களை தவிர்க்க வேண்டும்.

மாறாக, கல்வியினால் என்னென்ன நன்மைகள் என்பதை நாசுக்காக சிறுவயதிலேயே உணவோடு சேர்த்து புகட்ட வேண்டும். மதிப்பெண்களுக்காகப் படிப்பதைத் தவிர்த்து, எதிர்கால வாழ்க்கைக்காக படிக்க வேண்டும் என உணர்த்தினாலே அர்த்தம் புரிந்து ஆர்வத்துடன் படிப்பை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அடுத்ததாக... தங்களுடைய கனவு, ஆசைகளை பிள்ளைகள் மீது திணிப்பதையும் தவிர்க்க வேண்டும். அது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்காது... சுமையாகவே அமையும். இது உங்களுக்கு பொருந்துகிற உடையை, உங்கள் பிள்ளைகளை அணியச் செய்வதற்கு சமம்! உங்கள் குழந்தைகள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

தனிப்பட்ட ஆசை, கனவு, திறன் என பல விஷயம் சேர்ந்த ஆற்றல் மிக்க அற்புத கலவை. இவ்வுலகில் எல்லோருக்கும் தனித்தன்மை உள்ளது... ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடுவதே சாத்தியமில்லை.

பறவைக்கு எவ்வளவுதான் நீச்சல் சொல்லிக் கொடுத்தாலும் அதனால் நீந்த முடியாது. மீன் எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் பறவை போல பறக்க முடியாது. அதனால், குழந்தைகளின் ஆர்வம் மற்றும் தனித் திறமையையும் பலவீனத்தையும் நன்கு புரிந்து, அதற்கு தகுந்தவாறு ஊக்கமளிக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கக் கூடாது.

அதிக மதிப்பெண் வாங்க வைப்பதை விட பிள்ளைகளின் வாழ்க்கையை நிறைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குவதே உண்மையான வெற்றி என்பதை பெற்றோர் உணர வேண்டும். மாணவர்கள் வாழ்வில் படிப்பும், பொழுதுபோக்கும் சமமாக இருப்பின் மன அழுத்தம் இல்லாமல் தங்களின் முழுத் திறமையை வெளிக்காட்டி நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

பறவைகளும் விலங்குகளும் குறிப்பிட்ட காலகட்டம் வரையே குழந்தைகளை பாதுகாக்கும். அவற்றுக்குத் தனியே வாழும் பக்குவம் வந்தவுடன், அதன் சுதந்திரத்தில் தலையிடாமல் அடுத்த வேலையை பார்க்க போய்விடும். இந்த இயற்கை நியதி மனிதனுக்கும் பொருந்தும். நம் நாகரிகத்திலோ, பிள்ளைகளுக்கு எவ்வளவு வயதானாலும் பெற்றோரின் தலையீடு தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்படி எல்லா விஷயத்துக்கும் தங்களையே சார்ந்திருக்கும்படி பெற்றோர் வளர்த்துவிட்டு, 20 வயதானவுடன் திடீரென பிள்ளைகள் சுயமாக இருக்க வேண்டு மென எதிர்பார்ப்பார்கள்.

இது எப்படி சாத்தியம்?

பிள்ளைகளின் பிரச்னையை தீர்க்கும் திறனும், சுய அறிவும், முடிவு எடுக்கும் திறனும் வளராமல் ஆளுமை இவ்வித வளர்ப்பினால் பாதிக்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் தம் வாழ்நாள் முழுதும் பிறரைச் சார்ந்தே வாழ பழகிவிடுவார்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதைப் புரிய வைத்து போதிய சுதந்திரம் கொடுத்தால் அவர்களின் ஆளுமை சிறப்பாக செதுக்கப்படும். பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே உற்சாகப்படுத்தி, ஊக்கமளித்து அவர்கள் ஏதேனும் லட்சியத்தைத் தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

லட்சியமுள்ள பிள்ளைகளை படிக்க சொல்லி வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அவரவரின் வாழ்க்கையைத் தானே ரசித்து தேர்ந்தெடுப்பார்கள். வாழ்வின் முக்கிய முடிவு களை தாமாகவே எடுப்பதால் அவர்களுக்கு பொறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறன் ஏற்படும்.

தங்கள் வாழ்க்கைக்கும் அவர்களே பொறுப்பேற்று மற்றவர்களை குறை சொல்லாமல் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறுவர். இப்படிப்பட்ட ஆரோக்கியமான மாணவர்களே நம் நாட்டுக்கு மிகவும் அவசியம். மன அழுத்தம் ஒரு மனிதனின் அலுவலக வாழ்க்கையில் எவ்வகை பாதிப்புகளை ஏற்படுத்தும்? வரும் இதழில் பார்ப்போம்! பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகள்

1.அறிவுத்திறனை பாதிக்கும். கவனம் செலுத்த முடியாது. மறதி ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை உண்டாகும்.
2.உறவுகளை பாதிக்கும். அம்மா, அப்பாவுடன் சண்டை, சக மாணவியருடன் தகராறு, ஆசிரியர்களிடம் பிரச்னை ஏற்படும்.
3.தற்கொலை எண்ணம் தோன்றக்கூடும்.
4.தன்னம்பிக்கை குறையும்.
5.குடி / சிகரெட் / போதைப் பழக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
6.தோல்வி அடைந்து விடுவோம்
என்கின்ற எதிர்மறை மனப்பான்மை ஏற்படும் (Fear of failure).
7.தன் திறமையை / அறிவுத்திறனை விட குறைவாக மதிப்பெண் எடுப்பது வழக்கமாகும் (underachievers).
8.உடல், மனநல பிரச்னைகள் (வலிகள், மனச்சோர்வு, மனப்பதற்றம், பயம் மற்றும் பல...)

அம்மாவின் ஆசை... அவதியில் மகன்!


நவீனுக்கு வயது 14. அவனது அப்பாவுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை. கணவனைப் பிரிந்து எல்லா குடும்ப பொறுப்புகளையும் கவனித்து வருகிறார் அவனது அம்மா. நவீனைப் பற்றி பள்ளியில் அடிக்கடி புகார் வருவதாகவும், கோபம் வந்தால் தன்னையே மறந்து விடுகிறான் என்றும் கூறினார்.

அவன் யாரிடமும் அதிகம் பழகுவதில்லையென்றும் தனிமையை அதிகம் நாடுவதாகவும் கூறினார். சமீபத்தில் பள்ளியில் சக மாணவன் கேலி செய்ததற்காக நவீன் அவனை அடித்து ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு போல படிப்பில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. ஏன் கவனம் செலுத்த முடியவில்லையென கேட்டதற்கு, அடிக்கடி அவனுக்கு கடும் வயிற்றுவலி ஏற்படுவதாகவும் கூறினார்.

‘உன் லட்சியம் என்ன’ என்று நவீனிடம் கேட்டேன். நீண்ட நேர மவுனத்துக்குப் பின் அவன் அம்மாதான் பதிலளித்தார். நவீனுக்கு ஏன் படிக்கிறோம், எதற்காக படிக்கிறோம் என துளிக்கூட தெரியவில்லை. இவ்வளவு நடந்தும், அவன் அம்மா அவனது மனநிலை குறித்து அதிக கவலை கொள்ளாமல், படிப்பில் ஆர்வம் ஏற்படுத்தும் குறிப்பு கேட்பதிலேயே அதிக
கவனம் காட்டினார்.

நவீனுக்கு அதிக அளவு மன அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்தேன். நவீனின் அம்மாவுக்கு, அவன் பொறியியல் கல்லூரியில் படித்து வெளிநாட்டில் வசதியாக வாழ வேண்டுமென ஆசை. இந்த பேராசையின் விளைவாக, நவீன் அதிகாலை எழுந்தது முதல் படுக்கச் செல்லும் வரை இடைவெளியின்றி படிக்க வேண்டுமென எதிர்பார்த்தார். அவன் வயதுக்குரிய எந்தவித நியாயமான ஆசையையும் (டி.வி. பார்ப்பது, விளையாடுவது...)

நிறைவேற்றாமல், கடிவாளம் கட்டிய குதிரை போல, படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டுமென எதிர்பார்த்தார். நவீன் படிக்க முரண்டு பிடிக்கும் போதெல்லாம், அவன் அப்பா அவனுக்காக கஷ்டப்பட்டு குடும்பத்தை பிரிந்து உழைப்பதையும் கோபத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், அப்பா குடும்பத்துடன் இல்லாததற்கும் தானே காரணமென நவீனுக்கு ஆழமாகப் பதிந்துவிட்டது.

நவீன் அவன் பெற்றோரை மிகவும் நேசித்தான், தன் தாயின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென நினைத்தான். ஆனால், தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் துவண்டு போனான். படிப்பு மீதான ஆர்வத்துக்குப் பதில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயமே அதிகம் ஆக்கிரமித்தது.

இந்தப் பதற்றத்தினால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பினால், அடிக்கடி கடும் வயிற்றுவலியும் (குறிப்பாக தேர்வு நேரத்தில்) ஏற்பட்டது. மதிப்பெண் குறைந்ததால், தாழ்வு மனப்பான்மையும் தலை தூக்கியது. நண்பர்கள் சாதாரணமாக கேலி செய்ததை கூட தாங்க முடியாமல், கோபத்தில் அவர்களை அடித்தும் இருக்கிறான்.

அம்மாவின் அதிகபட்ச சாத்தியமற்ற எதிர்பார்ப்பு, இடைவெளியில்லா படிப்பு, விளையாட்டுக்கு நேரமின்மை, தினசரி தேர்வு எல்லாம் சேர்ந்து அவனை அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாக்கின. இதைக் கண்டறிந்த பின், அவன் மன அழுத்தம் குறைக்க ஆலோசனை வழங்கப் பட்டது. அவன் கோபத்துக்கு ஆரோக்கிய வடிகாலாக ஏதேனும் வெளிப்புற விளையாட்டில் தினம் 30 நிமிடமாவது ஈடுபட சொன்னேன்.

சில மாதங்களுக்குப் பின், நவீன் சற்று தெளிவான உடனேயே, மீண்டும் அவனது அம்மா பழைய மாதிரியே அவனிடம் நடந்து கொள்ள ஆரம்பித்தார். அவனுக்கு திரும்பவும் அதிக மனப்பதற்றம் ஏற்பட்டு, உடல்நிலையும் பாதித்தது. இதனால் பள்ளி செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த முறைதான் அவன் அம்மா பயந்து போய், ‘அவன் ஆரோக்கியமாக இருந்தாலே போதும்... வேறு ஒன்றும் சாதிக்க வேண்டாம்’ எனக் கதறினார்.

அதன் பின் இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. வயிற்றுவலி, பதற்றம், பயம் குறைந்து, நல்ல முன்னேற்றம் அடைந்தான் நவீன். அவனது ஆளுமையை திடப்படுத்தும் முயற்சி தொடர்கிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதை சரியான நேரத்தில் உணர்ந்த அம்மா, மெல்ல மெல்ல மகனது தகுதி, திறன் அறிந்து அதற்கேற்ற படிப்பை அவனே தேர்வு செய்ய முழுமனதுடன் சம்மதித்தார். இருப்பினும், பல தாய்மார்களின் பேராசையால் பல நவீன்களை இழக்கத்தானே நேரிடுகிறது?

அதிக மதிப்பெண் வாங்க வைப்பதை விட பிள்ளைகளின் வாழ்க்கையை நிறைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குவதே உண்மையான வெற்றி! மாணவர்கள் வாழ்வில் படிப்பும் இருக்க வேண்டும்... பொழுதுபோக்கும் இருக்க வேண்டும்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.