Suggestions For a Happy Married life

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தம்பதியரின் கனிவான கவனத்திற்கு..!
‘கணவன் - மனைவிக்கு இடையிலான உறவு என்பது நெருங்கிய நண்பர்களுக்கு இடையிலான உறவு போல இருக்க வேண்டும்’. இதைச் சொன்னவர் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர். இந்தியச் சூழலில் பெரும்பான்மையான வீடுகளில் அப்படிப்பட்ட உறவு இருப்பதில்லை என்பதே உண்மை. அதிலும் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் தம்பதிகளுக்கு இடையில் சுமுகமான உறவு என்பது பிரமாண்டமான கேள்விக்குறியே!

வீடு திரும்பியதும் தொலைக்காட்சியும் மொபைல்போனும் மீதமிருக்கும் கொஞ்ச நேரத்தையும் பறித்துக் கொள்கின்றன. கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசிக்கொள்ளும் நேரம் குறைகிறது. இதனால் இருவருக்கும் இடையே புரிதல் குறைகிறது... சில நேரங்களில் சண்டை வரக்கூட அது காரணமாகிவிடுகிறது.

பணிபுரியும் மனைவிக்கு இரட்டைச் சுமை. வீட்டு வேலையையும் சேர்த்து சுமக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அதில் கணவரின் உதவி இல்லாமல் போவதுதான் இருவருக்கும் இடையில் விரிசல் வருவதற்கான முக்கியக் காரணம். அதை தவிர்க்க தம்பதியருக்கு சில யோசனைகள்... நீ பாதி நான் பாதி!

‘சமையல்... மனைவியின் வேலை. தனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது’ என்கிற எண்ணம் கணவர்களுக்கு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. காரணம், நம் நாட்டில் காலம் காலமாக சமையலறை பெண்களின் நிரந்தர வாசஸ்தலம்! அவ்வளவு சீக்கிரத்தில் அந்த நிலை மாறிவிடாதுதான். ஆனால், அது மாற்றப்பட வேண்டியது அவசியம்...

குறிப்பாக மனைவியும் வேலைக்குப் போகும் வீடுகளில்! ஒரு கணவன் சமையலில் ஈடுபட நன்கு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ‘என்னம்மா செய்யப் போறே? சப்பாத்திக்கு குருமாவா?’ என்று கேட்டுவிட்டு வெங்காயம், தக்காளி நறுக்கித் தரலாம். இது போல கீரை ஆய்ந்து தருவது, காய்கறிகள் நறுக்கிக் கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்யலாம்.

சமையலறையில் கணவனின் இருப்பு என்பதே மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் மனைவிக்குக் கொடுத்துவிடும். அந்த எண்ணமே பாதி சமையல் முடிந்த எண்ணத்தை ஏற்படுத்திவிடும். ‘ஆஹா! நமக்காக என்னவெல்லாம் செய்கிறார்?’ என்று நெகிழ்ந்து போவார் மனைவி. அப்புறம் என்ன... கூடுதல் அன்பை அள்ளலாம். ஓரளவு சமையல் தெரிந்த கணவர் என்றால் மனைவி டி.வி. பார்க்கும்போதோ, ஓய்வாக இருக்கும் போதோ பிரெட் ஆம்லெட், சாண்ட்விச் போன்ற எளிய சிற்றுண்டிகளை செய்து கொடுத்து அசத்தலாம்.

காலையில் மனைவி எழுந்திருக்கும் முன்பாக ஒரு டம்ளர் காபியோடு போய் கணவர் எழுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த வீட்டில் அன்றைய தினம் அற்புதமாகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். இதையெல்லாம் விட கணவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உண்டு. மனைவி செய்து தருகிற சமையல் நன்றாக இருக்கிறதா? தயங்காமல் பாராட்டுங்கள்!

வாட் எ கருவாட்...
வாட் எ கருவாட்!


கணவனுக்கும் மனைவிக்கும் ஒரு சேரக் கிடைக்கும் ஓய்வு நேரமா? வீட்டுக்குள் ஒரு ஆட்டம் போடலாமே! வேடிக்கைக்காக இல்லை. முயற்சி செய்து பார்க்கலாம். அறைக்குள் கணவனும் மனைவியும் சேர்ந்து நடனம் ஆடுவதாக கற்பனை செய்து பார்ப்பதே குதூகலத்தை வரவழைத்துவிடும் விஷயம் இல்லையா? ஏதோ ஓர் இசையை ஓடவிட்டு அதற்கேற்ப, கணவனும் மனைவியும் ஆடலாம். அது ஏ.ஆர்.ரகுமான் இசையாக இருக்கலாம்...

ஜெனிபர் லோபஸின் அதிர வைக்கும் பாப் பீட்டாக இருக்கலாம். கானா பாலாவின் குத்துப் பாடலாகவும் இருக்கலாம். எந்த இசை உங்களுக்கு உற்சாகம் தருகிறதோ அதற்கு ஸ்டெப்பை போடுங்கள். வீட்டுக்குள் ஆடுகிற நடனம்... முறைப்படி நடனம் கற்றுக்கொண்டுதான் ஆட வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லை.

உற்சாகமான நடன அசைவுகளை உங்கள் மனைவிக்கும் கற்றுக்கொடுத்து ஆடலாம். மனைவிக்கு நடனம் தெரிந்திருந்தால் வேலை சுலபம். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்... சோர்வு ஓடிப் போகும்... உற்சாக மனநிலை தொற்றிக் கொள்ளும்!வருந்தும் உயிர்க்கு இசைவரமாகும்!

இசை மனதை லேசாக்கி, வசியம் செய்யும் அருமருந்து. பெண் பார்க்கும்போது ‘பெண்ணுக்குப் பாடத் தெரியுமா?’ என்று கேட்கிற மாப்பிள்ளைகள் கூட, திருமணத்துக்குப் பின் மனைவியைப் பாடச் சொல்லி கேட்பதில்லை. பாடல் பாடுவதும் கேட்பதும் இறுக்கமான மனநிலையைக்கூட நெகிழ்த்திவிடும்.

உங்களுக்குப் பாடத் தெரிந்தால் மனைவியிடம் பாடிக் காட்டலாம். வயலின், கிதார், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்தால் வாசித்துக் காட்டலாம். எதிர்ப்புறமும் அப்படியே, இவற்றில் ஏதாவது உங்கள் மனைவிக்குத் தெரிந்திருந்தால் அடிக்கடி ஊக்கப்படுத்த வேண்டும். ‘ஏம்ப்பா... அன்னிக்கிப் பாடினியே...

அந்தப் பாட்டை எனக்காக ஒரு தடவை பாடேன்’... என்று எடுத்துக் கொடுக்கலாம். பாடி முடித்ததும் ‘அடடா... பிரமாதம்!’ என்ற உங்கள் பாராட்டுப் போதும். எப்பேர்ப்பட்ட மன பாரம் இருந்தாலும் உங்கள் இணை அதை மறந்துவிடுவார்.

உங்களுக்கோ, மனைவிக்கோ இசைக்கருவி வாசிக்கவோ, பாடவோ தெரியவில்லை என்றாலும் வருத்தம் தேவையில்லை. ‘செலின் டியோன் முதல் டிரம்ஸ் சிவமணி’ வரை இணையத்திலும் இசை சி.டி.களாகவும் கிடைக்கிறார்கள். சங்கீதத்தை மெய்மறந்து மனைவியுடன் சேர்ந்து கேளுங்கள். இசை எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் ஆற்றிவிடும்... கவலையைக் காற்றில் பறக்க வைத்துவிடும்.

சுத்தம்... சுகம்!


வீட்டை சுத்தம் செய்வதிலும் கணவரின் பங்களிப்பு அவசியம். ‘இன்னிக்கி கிளீனிங் ப்ராசஸா? நான் ஃப்ரெண்டு வீடு வரைக்கும் போயிட்டு வந்துர்றேன்’ என்று பின் வாங்கக் கூடாது. ‘எது எதை எங்கே எடுத்து வைக்கணும்னு சொல்லு!’ என்று களத்தில் இறங்கிவிட வேண்டும். மனைவி அப்படியே உருகிப் போய்விடுவார்.

ஓய்வு நேரத்தில் வீட்டில் இருக்கும் சிறிய இடத்தில் தோட்டம் அமைத்து பராமரிக்கலாம். ஒரு செடியை நட்டு வைத்து, அது மொட்டு விட்டு மலர்வது உங்களுக்கு மட்டுமல்ல... உங்கள் மனைவிக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்வுதானே! எல்லாவற்றுக்கும் கணவர் துணை இருக்கிறார் என்கிற நம்பிக்கையே உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் தனி ஈர்ப்பை ஏற்படுத்திவிடும்.

சேர்ந்து போ(பழ)கலாம்!

விடுமுறை நாட்களில் ஷாப்பிங், விருந்து-விழாக்களுக்குப் போவது, உறவினர், நண்பரைத் தேடிப் போவது போன்றவற்றை தம்பதிகள் சேர்ந்தே செய்ய வேண்டும். மனைவியின் தேவைகள் கணவனுக்கும் கணவனின் தேவைகள் மனைவிக்கும் தெரிய நல்ல வாய்ப்பு இது. வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி உட்கார்ந்திருக்காமல் எங்கேயாவது வெளியே போய் வருவதும் கூட மனதுக்கு இதம் தரும். கடற்கரையில் கைகோர்த்து காலாற நடக்கலாம். பூங்கா புல்வெளியில் அமர்ந்து எதையாவது பேசிக் களிக்கலாம். ஸ்பெஷலான ஒரு டின்னரை சேர்ந்து சாப்பிட்டு அந்த நாளை மறக்க முடியாத நாளாக
மாற்றலாம்!

மனைவி செய்து தருகிற
சமையல் நன்றாக
இருக்கிறதா? தயங்காமல்
பாராட்டுங்கள்...
அப்புறம் என்ன... கூடுதல்
அன்பை அள்ளலாம்!
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#3
Re: Attention Couples! - தம்பதியரின் கனிவான கவனத்திற்கு..!

மிகவும் அருமையான கருத்துக்கள், லெட்சுமி.:thumbsup
ஒரு குடும்பத்தின் குதூகலம், கணவன் மனைவி இருவர் கையிலும் தான் இருக்கிறது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.