Tips for Breast feeding -பால் புகட்டுவது ஒரு விளக்கம்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,124
Likes
20,708
Location
Germany
#1
சந்தோஷம், இனம் புரியாத பயம், சோர்வு.. என ஒட்டுமொத்த எண்ணங்களின் கலவையாக, நடப்பதெல்லாமே புதுமையாகத் தோன்றும் தலை பிரசவம், பெண்களுக்கு புத்தம்புது அனுபவம் தான்! அதிலும் முதல் முறை குழந்தைக்கு பால் புகட்டுவது, தனி சுகானுபவம்.

குழந்தைக்கு பால் கொடுக்கும் அம்மாக்கள் தங்களை எப்படியெல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே ஒரு விளக்கம்

'பொதுவாக பிரசவத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள், ஏழாவது மாதத்திலேயே மார்பகங்களையும் பிறப்புறுப்பையும் சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏழாவது மாதத்தில் இருந்தே குளிக்கும்போது, மார்பகக் காம்புகளை சுத்தம் செய்து கொள்ளத் துவங்கி விட வேண்டும். அப்படி சுத்தம் செய்யா விட்டால், அங்கு அழுக்குகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும். இதை சரிவர கவனிக்காமல் விட்டுவிட்டால், குழந்தைக்கு பால் புகட்ட முடியாமல் போகலாம்.


குளித்த பிறகு காம்புப் பகுதியில் துளி எண்ணெய் தடவிக் கொண்டால், வறட்சியால் அங்கு வெடிப்பு விழாமல் இருக்கும்.


சிலருக்கு மார்பகக் காம்புகளில் ஏதேனும் புண் இருந்தால் அதன் மூலம் பாக்டீரியாக்கள் பெருகி விட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர்களாக ஏதாவது கை வைத்தியம் செய்வதைத் தவிர்த்து, டாக்டரின் ஆலோசனையின் பேரில் 'ஆன்ட்டி பயாடிக் க்ரீம்' வாங்கி அங்கே தடவிக் கொள்ள வேண்டும்.


சிலருக்கு சர்க்கரை நோயின் காரணமாகக்கூட மார்பகக் காம்புகளில் பூஞ்சை (ஃபங்கஸ்) ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 'ஆன்ட்டி ஃபங்கல் க்ரீம்' (Anti Fungal Cream) வாங்கி தடவி வந்தால், புண் சரியாகி விடும்.


இதுவரை குறிப்பிட்டதெல்லாமே பிரசவ காலத்துக்கு முன் வரை. பிரசவத்துக்குப் பிறகு எதிலெல்லாம் கவனம் தேவை என்று பார்க்கலாம்.
.

சுக பிரசவம் முடிந்த பெண்கள் அவர்களுடைய பிறப்புறுப்பில் போடப் பட்டிருக்கும் தையல் ஆறும்வரை சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கிருமித்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அறிவுரையை ஏற்று, அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.


சுக பிரசவம் என்றால் குழந்தை பிறந்து அரை மணி நேரத்துக்குள்ளாக பால் புகட்ட ஆரம்பித்து விடலாம். சிசேரியன் எனில் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு பால் புகட்டி விட வேண்டும். எக்காரணம் கொண்டும் முதலில் வரும் சீம்பாலை குழந்தைக்குத் தராமல் இருக்கக் கூடாது.. அதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் மட்டுமல்ல.. எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது.


எப்போதுமே குழந்தைக்குப் பால் கொடுப்பதற்கு முன், வெந்நீரில் பஞ்சை நனைத்து, மார்பகங்களை சுத்தமாக துடைத்து விட்டு கொடுக்க வேண்டும். வெளியில் போய் வந்தவுடன் அந்த வியர்வை, அழுக்கு டனேயே பால் கொடுக்காமல், மேலே சொன்னது போல சுத்தம் செய்த பிறகு பால் கொடுப்பதே சிறந்தது.


அதிகமாக பால் சுரப்பவர்கள் குழந்தைக்குப் பால் புகட்டும்போது இரண்டு விரல்களை கத்திரி போல மார்பக காம்புகளில் வைத்து, பால் கொடுக்க வேண்டும். விரல்களின் அழுத்தம் காரணமாக பால் சற்று நிதானித்து வரும். குழந்தைக்கும் மூச்சு முட்டாது.


குழந்தையின் பற்கள் அல்லது ஈறுகள் மார்பகக் காம்புகளை தொடர்ந்து அழுத்துவதால் அந்த இடங்கள் புண்ணாகலாம். அப்படி புண் ஏற்பட்டு பால் கொடுக்க முடியாத சூழ்நிலை வரும்போது, 'நிப்பிள் ஷீல்ட்' (டாக்டரிடம் கேட்டால் எழுதிக் கொடுப்பார்) வாங்கி பொருத்திக் கொண்டால் வலி ஏற்படாது, குழந்தையும் சௌகர்யமாகப் பால் அருந்தும்.


காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூண்டு, பால்சுறா, பிரெட், பால் போன்றவற்றை சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். குழந்தையும் போஷாக்கு பெற்று ஆரோக்கிய குழந்தையாக வளரும்.


எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம்.. பாலை சுரக்க வைப்பதில் அம்மாவின் எண்ண அலைகளுக்கும் பெரும் பங்குண்டு என்பதுதான்!


எனவே, அதை ஒரு கடமையாக செய்யாமல், ஒவ்வொரு முறை பால் கொடுக்கும்போதும் குழந்தையைப் பற்றிய சந்தோஷம் தாயின் மனதில் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கட்டும்.

குழந்தையை கண்ணோடு கண் பார்ப்பது, அதன் சின்ன சின்ன செய்கைகளை எல்லாம் உள்வாங்கி ரசிப்பது, தாயின் அரவணைப்பில் அது பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்து களிப்பது என்று

அந்த அற்புத பந்தத்தை அங்குலம் அங்குலமாக அனுபவித்தால் அந்த உணர்வே பால் சுரப்பை அதிகரிக்கும்!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.