Today's Business NEWS

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
இணைப்புகளால் ஏற்றம் பெறுமா வங்கித் துறை?

விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மூன்று வங்கிளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வாராக்கடன் மீட்பு நட வடிக்கையாகவும், கடன் வசதிகளை அதிகரிக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

இந்த இணைப்பின் மூலம் நாட்டின் 3-வது மிகப்பெரிய வங்கியாக புதிய வங்கி உருவாகும். குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிக்கு அடுத்து பெரிய, ஸ்திரமான வங்கியாக உருவாக உள்ளது.

தற்போது, வங்களின் கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கிறது, இதனால், கார்ப்பரேட் துறை முதலீடு பாதிக்கிறது. அதிகமான வராக்கடனை அளித்து, வங்கிகளின் சொத்துகள் குறைந்து வருகின்றன. இந்த மூன்று வங்கிகளையும் இணைப்பதன் மூலம் வங்கிச் செயல்பாடுகள் வலிமை அடையும் என அறிவிப்பின்போது குறிப்பிட்டார் ஜேட்லி.

இந்த இணைப்பினால் 3 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும், முக்கியமாக வங்கியின் பெரும்பாலான பங்குகள் அரசின் கைவசமே இருக்கும் என்கிற குறிப்பினையும் ஜேட்லி அளித்துள்ளார்.

இணைப்பு அவசியமா?

பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனால் தத்தளித்து வரும் நிலையில் அதிலிருந்து மீட்கும் நடவடிக்கையாக மூன்று வங்கிகளையும் இணைக்க அரசு திட்டமிடுகிறது. கடந்த ஆண்டில் இதே காரணத்தை முன்வைத்து பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்தாலும், இந்த இணைப்பின் மூலம் கிடைத்த ஆதாயத்தை விட, இழப்புகளே அதிகம் என்கின்றன விவரங்கள். இந்த நிலையில்தான் அடுத்த கட்டமாக விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மூன்றையும் இணைப்பதற்கு அரசு திட்டமிடுகிறது.

இந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு என தனித் தனியான கட்டமைப்பை கொண்டுள்ளன. இவற்றின் பணிக் கலாச்சாரத்தை ஒன்றாக இணைப்பது நிர்வாக ரீதியாக சவாலானது. பேங்க் ஆப் பரோடா வங்கி குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையான சந்தையை வைத்துள்ளது. தேனா வங்கிக்கு தெற்கிலும் வடக்கிலும் 1,557 கிளைகள்தான் உள்ளன. ஆனால் மேற்கு பகுதியில் மட்டும் 2,205 கிளைகளை வைத்துள்ளது. இந்த நிலையில் புதிதாக உருவாகும் வங்கி இந்த கட்டமைப்பு பலத்தை இழக்கும். விஜயா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர நாராயணன் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுமார் 500 வங்கி கிளைகளை மூடவேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்துள்ளார்.

முதலில் தேனா வங்கியும் விஜயா வங்கியும் இணைக்கப்பட்டு, அதன் பின்னர் பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த வங்கிகளின் கோர் பேங்கிங் மென்பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மென்பொருளை கையாளுகின்றன. இதனால் சிக்கல் உருவாகும் என்கிறது கோட்டக் இன்ஸ்ட்டியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம். வங்கிகளின் இணைப்பு குறித்து அரசு அறிவித்த இரண்டு நாட்களில் மும்பை பங்குச்சந்தையில் வங்கித்துறை பங்குகள் மிகப் பெரிய சரிவை கண்டுள்ளன.

குறிப்பாக பட்டியலிடப்பட்டுள்ள 22 வங்கிகளின் சந்தை மதிப்பில் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்புஏற்பட்டது. இதுபோன்ற இணைப்பு நடவடிக்கைகள் வரும் காலத்தில், இதர வங்கிகளிலும் நடக்கலாம் என்கிற அச்சம் முதலீட்டாளர்களிடம் உருவாகியுள்ளது. இணைக்கப்படும் வங்கியின் கடன் சுமை, தாங்கள் பங்கு வைத்துள்ள வங்கியின் கடன் சுமையோடு சேர்ந்தால் வங்கியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்பது முதலீட்டாளர்களின் கணிப்பு. இதனால் முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள வங்கிப் பங்குகளை விற்கத் தொடங்கி உள்ளனர். இதனால் சம்பந்தபட்ட வங்கிகளின் சந்தை மதிப்பு சரிந்து வருகிறது.

திவால் நடவடிக்கை தீர்வுகள்

இந்திய வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் மதிப்பு தற்போது 21000 கோடி டாலர் (14,70,000 கோடி ரூபாய்) என தங்களுடைய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. இதனால் நீண்ட காலமாக உள்ள வாராக்கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி பல வழிமுறைகளை வங்கிகளுக்கு அளித்து வருகிறது. குறிப்பாக திரும்ப பெறக்கூடிய நிலையில் உள்ள ரூ. 3.6 லட்சம் கோடி வாராக் கடனை வசூலிப்பதற்கான மறுசீரமைப்பு திட்டங்களுக்கு வங்கிகளை வலியுறுத்தியுள்ளது.

இதன்படி வாராக்கடனை வசூலிக்க நிறுவனங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவதும், நிறுவனத்தை மறுசீரமைத்து கடனை வசூலிக்கவும் திவால் தீர்வுகள் சட்டப்படி (Insolvency and Bankruptcy Code) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீரமைக்க முடியாத நிறுவனமாக இருந்தால் வேறு நிறுவனங்களிடம் விற்று இருக்கும் கடனை வசூலிக்கவும் வழிகாட்டப்பட்டுள்ளது. இதனால் முன்பைவிட தற்போது இணைப்பு மற்றும் கையகப்

படுத்தல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. இதன் மூலம் வங்கிகளின் வாராக்கடன் அழுத்தம் குறைந்து வருகிறது. 2013-ம் ஆண்டு 3500 கோடி டாலருக்கும் குறைவான இணைப்புகளே நடந்தன. ஆனால் 2018-ம் ஆண்டில் இதுவரை 11000 கோடி டாலருக்கு மேல் இணைப்பு நடவடிக்கைகள் நடந்துள்ளன. இந்த போக்கு தொடரும் என்கிறது பிடபிள்யூசி நிறுவனம்.

இதன்படி வாராக்கடன் அதிகம் வைத்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், முகேஷ் அம்பானியின் ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன், எஸ்ஸார் ஸ்டீல், பூஷான் ஸ்டீல், ருச்சி சோயா என பட்டியல் தொடர்கிறது. தற்போது ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் மோர் சில்லரை வர்த்தக அங்காடியும் இந்த பட்டியலில் இணைகிறது.

விஜயா வங்கி தனது வாராக்கடனை குறைத்து வருகிறது. ஜனவரி-மார்ச் காலாண்டில் 6.34 சதவீதமாக இருந்த வாராக்கடனை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.19 சதவீதமாக குறைத்துள்ளது. தேனா வங்கி தொடர்ச்சியாக வாராக்கடன் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் 22.69 சதவீத கடனை 22.04 சதவீதமாக குறைத்துள்ளது.

வங்கியல்லாத நிறுவனங்களின் வளர்ச்சி பல்வேறு வகையிலும் மோசடிகள், வாராக்கடன்களால் பொதுத்துறை வங்கிகள் திணறும் நிலையில், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் அபாரமான வளர்ச்சியில் உள்ளன. உலகின் மிக மோசமான வங்கிகள் கொண்ட இந்தியாவில்தான், உலகின் மிக சிறப்பான வங்கிகளும் உள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களில், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளின் வளர்ச்சி 47 சதவீதமாக உள்ளது என சுட்டிக் காட்டுகிறது. மூன்று வங்கிகளின் இணைப்புக்கு பின்னர் இந்த வங்கிகளின் சொத்து மதிப்பு உயரும். ஆனால் அதே அளவுக்கு சிக்கல் உருவாகும் என்கிறது கோட்டக் ஆய்வு. தேனா வங்கியின் நிகர மதிப்பு புதிய வங்கியின் சொத்து மதிப்பினை உயர்த்தும். அதேநேரத்தில் பேங்க் ஆப்பரோடாவும், விஜயா வங்கியும் சிறந்த கடன் கட்டமைப்பை வைத்துள்ளன.

ஆனால் இணைப்புக்கு பின்னர் ஒட்டுமொத்த வராக்கடன் ரூ.80,000 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். இதை வசூலிப்பதற்கே புதிய வங்கி முன்னுரிமை அளிக்கும். இதனால் கார்ப்பரேட் கடன் அளிப்பதும் சவாலானது. இணைப்புக்கு பின்னர் வங்கியின் கடன் வர்த்தகம் 6.4 சதவீதமாகவே இருக்கும்.

தொழில்சங்க அச்சம்

மத்திய அரசு செய்யும் மூலதன உதவிக்காக இந்த இணைப்பு நடவடிக்கை அவசியமாக இருக்கலாம். ஆனால் வங்கிகளின் சொத்து மதிப்பில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்கின்றன தொழில்சங்கங்கள். எஸ்பிஐ இணைப்பினால் சாதகமான அம்சங்கள் எதுவும் நடக்கவில்லை. அதேநேரத்தில் வாராக்கடன் அதிகரித்துள்ளது, ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர், வர்த்தகம் குறைந்துள்ளது என தொழில்சங்கங்கள் கூறுகின்றன.

அதே அச்சம் இப்போதைய இணைப்பிலும் இருப்பதாக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆக, இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கி அமைப்பிலும் சிக்கல் இல்லை என்பதுடன், ஒவ்வொரு தனித்த வங்கியினுடைய நிர்வாகம் சார்ந்த சிக்கலாகவே இருக்கிறது என்பதும் உண்மை. இதை புரிந்து கொண்டால் வங்கி கட்டமைப்பை சரிசெய்ய இணைப்பு நடவடிக்கை தீர்வாக இருக்குமா என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
கார்டு இல்லாமலேயே கடன்

எந்தத் துறையில் ஐடியாவுக்குப் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ, இ-காமர்ஸ் துறையில் மட்டும் ஐடியாவுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்குப் புதிது புதிதாக யோசனைகளைக் களமிறக்கி கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படி சமீபத்தில் வந்திருக்கும் புது வரவுதான் இந்த கார்டு இல்லாமல் கடன் வழங்கும் திட்டம். அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எந்த டெபிட், கிரெடிட் கார்டும் இல்லாமல் கடனுக்குப் பொருள்களை வழங்கத் தயாராக உள்ளன.

இதை முதலில் அமேசான் தான் அறிமுகப்படுத்தியது. அடுத்தநாளே பிளிப்கார்ட்டும் அறிவித்தது. இந்தத் திட்டத்தில் ரூ. 60 ஆயிரம் வரைக்கும் கடனில் பொருள்களை வாங்க முடியும் என்று அறிவித்துள்ளது.

இதனை அறிமுகப்படுத்திய பிளிப்கார்ட் ஃபின்டெக் பிரிவின் தலைவர் ரவி கரிகிபதி பிளிப்கார்ட்டின் வாடிக்கையாளர்களில் 4.5 கோடி பேர் கடன் பெறுவதற்கான நிலையில் இல்லை என்கிறார். அதாவது அவர்களிடம் கிரெடிட் கார்டு இல்லாமல் இருக்கலாம், அல்லது அப்போதைக்கு பொருள்களை வாங்கும் திறன் இருக்காது. ஆனால், அவர்களால் பின்னாளில் அந்தப் பொருளை வாங்க முடியும்.

இந்த இடைவெளியை நாங்கள் சரிசெய்ய விரும்புகிறோம். அதற்காகவே இந்த கார்டு இல்லாமல் கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். இதன் மூலம் கடனில் பொருள்களை வாங்குவதை மேலும் எளிதாக்குகிறோம் என்கிறார் அவர்.

சரி எப்படி இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்வது, எல்லோருக்கும் இந்த வசதி கிடைக்குமா என்பதைப் பார்க்கலாம். இதுபோன்ற வசதிகளில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றவும் செய்யலாம் என்பதால் ரொம்பவே இந்தத் திட்டத்தைப் பாதுகாப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். கடன் பெறுவதற்கு தகுதியுள்ளவரா என்ற சோதனையில் தேர்வானால் மட்டுமே கடன் கிடைக்கும்.

இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள ஆதார் எண் சரிபார்த்தல் அவசியம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வோர்டு அனுப்பப்படும் அதையெல்லாம் கொடுத்தால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

2000க்கும் குறைவான மதிப்புள்ள பொருள்களை வாங்குவதற்கு ஓன் டைம் பாஸ்வேர்டு சரிபார்த்தல் அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் இதற்கு முன் பொருள்கள் வாங்கியிருப்பதைப் பொறுத்து நமக்கான கடன் தொகையை நிர்ணயிக்கின்றனர்.

இந்த வசதி ஒரு இ-வாலட் போல செயல்படும். நம்முடைய தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு நமக்கான கடன் தொகையை பிளிப்கார்ட் செயலியில் வரவு வைக்கும். இந்தத் தொகை 60 நொடிகளில் நமக்கு வந்துவிடும். அந்தத் தொகையை வைத்து நாம் நமக்கான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

இந்தக் கடனை அடுத்த மாதத்தில் மொத்தமாகவோ, அல்லது எளிய தவணை முறையில் 3-12 மாதங்களிலோ செலுத்திக்கொள்ளலாம். இ-காமர்ஸ் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு எதுவுமே தேவையில்லை கடன் வழங்குகிறோம் என்கிற அளவுக்கு வந்துவிட்டார்கள். வாடிக்கையாளர்கள் உஷாராக தேவைப்படும் பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும். தேவையற்ற பொருள்களைக் கடனில் வாங்கிவிட்டு பின்னர் தேவையான பொருள்களை விற்று கடனை அடைக்கும் நிலைக்குப் போய்விடக்கூடாது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
அலசல்: யாரை திருப்திப்படுத்துகிறது சிபிஐ?

இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்புகளில் முதன்மையானது. முக்கிய குற்றங்களை மட்டுமே விசாரிக்கும் உயர்ந்தபட்ச அமைப்பு. சுயேச்சையாக எவ்வித பாரபட்சமும் இன்றி செயல்பட வேண்டிய அமைப்பு. ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலும் ஆட்சியில் இருப்பவர்களை திருப்திபடுத்த செயல்படும் அமைப்பாக மாறி வருகிறது.

சிபிஐ நேர்மையாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பிய சமீபத்திய சம்பவத்தை பார்க்கலாம்.

கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி, மும்பையிலிருந்து வெளிநாடு செல்வதற்கு புறப்பட்டபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் மீது எல்ஓசி (Look on Circular) இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.

மூன்று மாதங்கள் காத்திருந்த அவர் இம்மாத தொடக்கத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை அணுகி தன் மீதான எல்ஓசி-யை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வழக்கறிஞர் வாயிலாக விண்ணப்பித்தார்.

அப்போது அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. முதலாவது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கு, மற்றொன்று டெல்லியைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவன மோசடி வழக்கு. இவை இரண்டிலும் இவருக்கு எப்படி தொடர்பு என்ற விவரத்தை வெளியிடவில்லை.

கமலேஷ் சந்திர சக்ரவர்த்தி குறித்து வங்கியாளர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். பனாரஸ் பல்கலையில் பேராசிரியராக இருந்து பின்பு பாங்க் ஆப் பரோடாவில் தனது வங்கி வாழ்க்கையைத் தொடங்கியவர். 2005-ம் ஆண்டிலிருந்து 2007-ம் ஆண்டு வரை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநராகவும், 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தவர்.

அதன்பிறகு 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பணியாற்றியவர். இந்தியன் வங்கியில் இவர் பணியாற்றிய காலத்தில் தலைமை ஊழல் கண்காணிப்பாளராக காமத் பொறுப்பேற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சக்ரவர்த்தி மாறிய பிறகுதான் காமத் ஓய்வு பெற்றார். அப்போது நடத்தப்பட்ட பிரிவு உபசார விழாவில் சக்ரவர்த்தி எந்த அளவுக்கு நேர்மையாக செயல்

பட்டார் என்று காமத் குறிப்பிட்டார். அதேபோல இந்தியன் வங்கியில் தனது மனைவி செயல்படுத்தி வந்த லாக்கருக்கான கட்டணத்தையும் தவறாமல் செலுத்தியவர் என்று வங்கி பணியாளர்களே குறிப்பிடுகின்றனர்.

விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் 17 வங்கிகளுக்கு தொடர்பு உள்ளது. இதில் சக்ரவர்த்திக்கு மட்டும் எப்படி தனிப்பட்ட பொறுப்பு இருக்க முடியும். யாரை திருப்திபடுத்த சிபிஐ வழக்கு தொடர்ந்திருக்கிறது.

வங்கிகளில் கடன் வழங்கும் விகிதம் குறைந்து வருகிறது. நேர்மையானவர்கள் மீது வழக்குகள் பதிவானால் இனி வரும் காலங்களில் எவருமே கடன் வழங்குவதற்கு அஞ்சுவர். இப்போதுதான் இஸ்ரோ வழக்கில் நம்பி நாராயணன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டு இழப்பீடும் பெற உள்ளனர். ஆட்சியாளர்களை திருப்தி செய்ய வழக்கு பதிவு செய்தால், எதிர்காலத்தில் புலனாய்வு அமைப்பு மீதான நம்பிக்கை, நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் நீர்த்துப் போய்விடும்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.