Top 10 Foods for Health Life - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு டாப் 10 உணவ&#3

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
உன் நண்பனைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" என்பது பழமொழி. "உன் உணவுப் பழக்கத்தைப் பற்றிச் சொல், உன் உடல்நலனைப் பற்றிச் சொல்கிறேன்" என்பது புதுமொழி. மனிதனின் அடிப்படைத் தேவைகள் நான்கு.

1. உணவு. 2. உடை. 3. இருப்பிடம். 4. குடும்ப உறவு. இவற்றில் மனிதன் உயிர்வாழ அத்தியாவசியத் தேவையான உணவில், மாறிவரும் வாழ்க்கை சூழலுக்கேற்ப சிற்சில மாற்றங்களைச் செய்து வந்தாலே ஆரோக்கிய வாழ்வைப் பெற முடியும். இதைத்தான் இன்றைய உணவியல் வல்லுநர்களும் வருங்கால நலனுக்காக தற்போதைய நடைமுறையிலுள்ள உணவுப் பழக்கத்தை சற்று மாற்றி கடைப்பிடிக்கச் சொல்லி அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்கள். அவ்வகையில் தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஒளிபரப்பப்படும் டாப் 10 திரைப்படங்களின் வரிசையைப் போல், உடல் நலத்துக்காக உண்ணப்படும் உணவு வகைகளில் உணவியல் வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படும் உணவுகள் எவை எனப் பார்ப்போம்.

1. நீர்: டாப் 10-ல் முதலிடத்தைப் பிடித்திருப்பது நீர்தான். சரீரம் முழுவதும் சக்தியைப் பரப்பவும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் செய்திகளை, கட்டளைகளை மூளையிலிருந்து உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லவும் நீரின் பயன்பாடு மிக மிக அவசியம். நீர் உணவாக மட்டுமல்ல, மிகப் பெரிய கரைப்பானாகவும் செயல்பட்டு, வேதியியல் மாற்றத்தாலும் உடலியங்கு இயலாலும் நம் உடலுள் சேரும் நச்சுப் பொருள்களையும், கழிவுப் பொருள்களையும் அதிகப்படியான கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றி குடலைச் சுத்தப்படுத்தி உடலை பற்பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

"நீர் ஒரு அகில உலக சிகிச்சை மருந்து" என ஜப்பான் நாட்டு உடல் நலக் கழகத்தினர் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர். "நீரானது திசுக்களை செப்பனிட்டு செம்மைப்படுத்தி நோயைக் குணப்படுத்தும் ஆற்றலை அளிப்பதோடு மட்டுமல்லாமல் திசுக்களுக்கு வேண்டிய சக்தியைக் கொடுத்து நன்கு செயல்படவும் வைக்கிறது" என பிரபல நீர் சிகிச்சை நிபுணரான டாக்டர் கல்லி கூறியுள்ளார்.

இவ்வளவு சிறப்புடைய நீர், கீழ்க்கண்ட நோய்களுக்கு உள்மருந்தாக உலகம் முழுவதும் உள்ள இயற்கை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. தலைவலி, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, மூட்டு வலி, உடல்பருமன், இதய படபடப்பு, சுவாசம் சார்ந்த நோய்கள், மூளைக்காய்ச்சல், கல்லீரல் நோய்கள், வாய்வு, அல்சர், மூலம், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு உள் மருந்தாக நீர் கொடுக்கப்படுகிறது. ஆக, நோயின்றி வாழ நாம் தினமும் 3 முதல் 4 லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

2. தானியங்கள்: அரிசி, கம்பு, கோதுமை, ராகி, சோளம் போன்ற தானிய வகைகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இவற்றில் உள்ள வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின் இ, இதயத்தைப் பலப்படுத்தவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலூக்கத்துக்கும் உடல் பலத்துக்கும் பயன்படுகின்றன. மேலும் இவற்றில் உள்ள கால்சியம், குரோமியம், இஎஃப்ஏ, நார்ச்சத்துகள், ஃப்ளேவனாயிட்ஸ், ஃபோலிக் அமிலம், அயோடின், இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை எலும்பு வளர்ச்சி, சீரான ரத்த ஓட்ட சுழற்சி, ரத்தத்தில் சர்க்கரையை நிலைநிறுத்துதல், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை முறைப்படுத்துதல், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குதல் போன்ற இன்றியமையாத பணியையும் உடலில் செய்கின்றன.

3. சர்க்கரைவள்ளிக் கிழங்கு: இதில் பெரும்பாலும் காணப்படுவது மாவுச் சத்தே. இதிலுள்ள பீட்டாகரோட்டின் கண்பார்வை தெளிவுக்கும் பாஸ்பரஸ் மூளை சுறுசுறுப்புக்கும் காரணமாய் அமைகிறது. மேலும், இதிலுள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் தன்மை புற்றுநோய் செல்களையும் எதிர்க்கும் வல்லமை படைத்தவைகளாய் உள்ளது.

4. பீன்ஸ்: டாப் டென்னில் நான்காவது இடத்தில் பீன்ஸ் இருக்கிறது. இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து அதிகம். கொழுப்புச் சத்து குறைவாகவே காணப்படுகிறது. மலச்சிக்கலை நீக்கி குடலை கழுவுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

5. தக்காளி: ஏழைகளின் ஆப்பிள் என வர்ணிக்கப்படும் தக்காளி மிகுந்த மருத்துவப் பயனுடையது. இதில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம். மேலும் சுத்தமான நீரும் பயோட்டின் (வைட்டமின் எச்) என்ற சத்தும் உள்ளது. இதிலுள்ள வைட்டமின் சி சத்து, முதுமையைத் தடுக்க உதவும் லைசின் எனும் அமிலத்தை ரத்தத்தில் குறையாமல் பாதுகாத்து இளமையைப் பேண உதவுகிறது. தக்காளியிலுள்ள பொட்டாசியம் உப்பு அதிக சோம்பல், படபடப்பு, ரத்தக் கொதிப்பு, இதயநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. தினசரி காலை, மாலை என தக்காளியை 200 கிராமில் இருந்து 250 கிராம் வரை உணவில் சேர்த்துவர பல் தொடர்பான நோய்கள் (ஸ்கார்வி), நிமோனியா, டிப்தீரியா, எலும்புறுக்கி போன்ற நோய்கள் வராமல் தடுப்பதுடன் தாம்பத்திய வாழ்வில் வெற்றி பெறவும் உதவுகிறது. அதோடு, புற்றுநோய் நிவாரணியாகவும் பயன்படுகிறது. பொதுவாக தக்காளியை சமைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டால் மேற்கண்ட பலன்கள் முழுமையாகக் கிட்டும்.

6. பால், தயிர்: இவற்றிலுள்ள கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.

7. ஆரஞ்சுப் பழம்: இதில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலச் சத்துகள் அடங்கியுள்ளன. எலும்புகள் வலுவடையவும் புதிய சிவப்பணுக்கள் உண்டாகவும் ஆரஞ்சுப் பழச்சாறு உதவுகிறது. இதிலுள்ள Methionine Acid ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்து நீண்ட, இளமையான வாழ்வைத் தருகிறது. மேலும் ரத்தத்தில் கெடுதி செய்யும் கொழுப்பான எல்.டி.எல்-ஐ குறைக்கவும் நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி.எல்-ஐ அதிகரிக்கவும் உதவுகின்றன.

8. மீன் மற்றும் இறைச்சி: புரதச் சத்துக்காகவே இவை உணவில் பரிந்துரைக்கப்படுகின்றன. சைவ உணவுக்காரர்கள் இவைகளுக்கு ஈடாகக் கூறப்படும் இரும்புச்சத்து நிரம்பிய சோயா மொச்சையையும் துத்தநாகச் சத்து நிரம்பிய பாதாம் பருப்பு, வேர்க் கடலையையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

9. முட்டைக்கோஸ்: வைட்டமின் ஏ சத்து 90 சதவீதம் நிரம்பியது. நார்சத்து, பொட்டாசியம் உப்பு அதிகம் உடையது. ரத்த சுத்தி மற்றும் உடல் சுத்திக்கு மிகவும் உகந்தது. இதில் 10 தாது உப்புகளும் 5 வைட்டமின்களும் அடக்கம்.

கால்சியம், பொட்டாசியம், குளோரின், அயோடின், பாஸ்பரஸ், சோடியம், சல்ஃபர் ஆகிய உப்புகளும் காணப்படுகின்றன. அதில் அஸ்கார்பிக் அமிலம் அதிக அளவு காணப்படுவதால் இளமையான தோற்றத்தை அளிக்கிறது. முட்டைக்கோஸ் சாறுடன் தக்காளிச் சாறும் சேர்ந்து அருந்த கண்பார்வை அதிகரிக்கும். இதிலுள்ள நியாசின், நரம்புகளுக்கும் ரிபோஃப்ளோவின் தோல் பளபளப்புக்கும் தையமின் இதயம் மற்றும் மூளை வலுவிற்கும் சல்ஃபர் ரத்தம் புளித்து கெட்டுப் போகாமல் தடுக்கவும் டார்டாரிக் அமிலம் அதிக கொழுப்புச் சத்தினால் எடை அதிகரிக்காமல் செய்யவும் பெய்டிக் என்ற ரசாயனப் பொருள் நுரையீரல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுகிறது. முட்டைக்கோஸ் சாறு வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது.

10. வாழைப்பழம்: பொட்டாசியம் சத்து அதிகமுடையது. நரம்பு மண்டலத்துக்கு சுறுசுறுப்பும் உடலுக்கு வலிமையும் தரக்கூடியது. இதிலுள்ள புரதம் தசைகளுக்கு வலுவூட்டவும் கால்சியம் நரம்புகள், எலும்புகளுக்கு பலமளிக்கவும், இரும்புச்சத்து ரத்த விருத்திக்கும், மக்னீசியம் இதயம் சீராக விரியவும், சோடியம் பாக்டீரியாக்களை அழிக்கவும், பொட்டாசியம் ரத்தம் கெட்டுப் போகாமல் திரவ நிலையில் இருக்கவும், பாஸ்பரஸ் மூளை வளர்ச்சி மற்றும் பார்வைத் திறனுக்கும், வைட்டமின்கள் ஏ ரத்தச் சிவப்பணுக்கள் உருவாகவும், வைட்டமின் சி பல்ஈறு, எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்கள் உறுதியாக இருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகவும் பயன்படுகிறது.

ஆக, உணவே மருந்து என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நம் உடல் நலனுக்கு நன்மை பயக்கும் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்டாலே நாம் நோயின்றி நீண்ட நாள்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வது உறுதி.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#2
re: Top 10 Foods for Health Life - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு டாப் 10 உண&#2997

useful tips..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.