Vipகளின் ஆரோக்கிய இரகசியம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
VIPகளின் ஆரோக்கிய இரகசியம்

''பிறருக்காக செய்வதுதான் பிரார்த்தனை!'' - ஏ.வி.எம்.சரவணன்

[TABLE="align: left"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
''விகடனின் தாரக மந்திரமே 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்கிற தாயுமானவரின் வரிகள்தான்! என் வாழ்நாளில் நான் கடைப்பிடிக்கும் ஆரோக்கிய மந்திரமும் அதுதான்!'' - சிரித்தபடியே பேச ஆரம்பிக்கிறார் ஏவி.எம்.சரவணன்.

''விடிந்தும் விடியாத பனி மூடிய அதிகாலைப் பொழுதில் எழுவது என் வழக்கம். அதாவது 3.30 மணிக்கு... சீக்கிரமே எழுவது சிரமமானதுதான்; ஆனால், ஒரு வாரம் போராடி அப்படி எழுந்து பாருங்கள்... அதன் பிறகு நீங்களே தூங்க நினைத் தாலும் அதிகாலை உங்களை எழுப்பிவிடும். விழித்தெழுந்ததும், நான் செய்யும் முதல் வேலை... என்னிடம் தங்கள் குறைகளையும், வேதனைகளையும் பகிர்ந்துகொள்பவர்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்காக ஒரு நிமிடம் கண்மூடி கடவுளைத் தியானிப்பதுதான். காலைக் கடன்களை முடித்துவிட்டு, காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, தெலுங்கு சேனல் ஒன்றில் மூழ்கிவிடு வேன். அதில், தினந்தோறும் அற்புதமாய் ஒளிரும் ஸ்ரீஷீர்டியின் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் அன்றைய நாள் முழுவதும் என்னை மலர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகின்றன. மனத்தை ஒருநிலைப் படுத்தும் இந்த நிகழ்ச்சி தியானத்துக்கு நிகரான உணர்வை ஏற்படுத்தும். இறைவனிடம் நான் வேண்டுவது, உட னடியாக நடந்துவிடுவதை எண்ணி பலமுறை பிரமித்திருக்கிறேன். நமக்காக வேண்டுவதைக் காட்டிலும் பிறருக்காக பிரார்த்தனை செய்யும்போது, ஆத்ம திருப்தியை நிச்சயம் உணரமுடியும். அதற்கான பலனையும் ஆண்டவன் அருளுவான்!'' - நெஞ்சம் தொட்டுச் சொல்கிறார் ஏவி.எம்.சரவணன்.

''உண்ணும் உணவில் கட்டுப்பாட் டைக் கடைப்பிடிப்பவன் நான். 'ஏற்ற மிகு வாழ்க்கைக்கு நாக்கே பிரதானம்’ என்பார்கள். ஒரு மனிதனை வாழ்க்கை யின் உயரத்துக்குக் கொண்டு செல்ல வும், அதல பாதாளத்துக்குத் தள்ளிவிட வும், ஆரோக்கியமாகவும், நோயாளியாக வும் ஆக்கவும் நாக்கால் முடியும்!
மூன்று வேளையும் இட்லி, காய்கறிகள்தான் என் உணவு. 'ஒரே டேஸ்ட் போர் அடிக்கலையா?’ என்பார்கள் சிலர். நான் எப்போதுமே ருசிக்காக சாப்பிடுவது இல்லை. பசிக்காகத்தான் சாப்பிடுகிறேன். ஆரோக்கியத்துக்காக அளவோடு சாப்பிடுகிறேன். எந்தக் கல்யாணத்திலும் சாப்பிடும் பழக்கமும் எனக்கில்லை.
'யாகாவாராயினும் நா காக்க’. நாவைக் கட்டுப்படுத்தினால் போதும். நம் வாழ்க்கையையே காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்ற ஆழமான அர்த்தத்தில்தான் சொல்லி இருக்கிறார் வள்ளுவர். உணவில் மட்டுமல்ல, இனிமையாகப் பேசவும் நாக்கை பழக்கப்படுத்திவிட்டால், அதைவிட பேரின்பம் வேறில்லை.

எனக்கு இப்போது 75 வயதாகிறது. இதுவரை எந்த இடத்திலும் எந்த நிலையிலும் நிதானத்தை இழக்கா தவன் நான். வாயைக் கட்டாவிட்டால் வயிறு கெடு வது போல, நாக்கைக் கட்டாவிட்டால் வாழ்க்கை கெடும் என்பது என் கருத்து. பேசுவதிலும் சரி, உணவு விஷயத்திலும் சரி. நாக்குதான் நமக்கு நண்பன்.
அமெரிக்கா எடுத்த ஒரு சர்வேயில், முன்னணியில் வெற்றிகரமாகத் திகழ்பவர்களில் 70 சதவிகிதத்தின ரின் வெற்றிக்கு, அவர்களின் திறமையைப் போலவே பேச்சுவன்மையும் ஒரு காரணமாம்.

வார்த்தைகள் வைரமாக இருக்கவேண்டும்! பேசும் சொற்களில் சுகம் இருக்கவேண்டுமே தவிர, சூடு இருக்கக்கூடாது. சூடு இருக்கக்கூடாது என்பதற்காகத் தானோ என்னவோ, ஈரமான இடத்தில் நாக்கை வைத்திருக்கிறான் இறைவன். எனக்குத் தெரிந்து பலபேர் தன் இனிய சொல்லாலும், நா வன்மையாலும் வாழ்க்கையில் வெற்றிச் சிகரத்தைத் தொட்டிருக்கிறார்கள்.
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து, வீடுவீடாக நடந்து போய் தபால்களைப் பட்டுவாடா செய்து வந்த கணேசன், இன்று வீடுகளைக் கட்டும் 'கான்ட் ராக்ட்’ தொழிலில் முத்திரையைப் பதித்து முன்னணி யில் இருக்கிறார். தபால் போடப் போன இடத்தில் ஒரு பில்டரின் நட்பு, தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளத் துணைபுரிந்தது.ஒரு எழுத்து பிசகினாலும் அர்த்தமே மாறிப்போகும். 'கோவலனைக் கொண்டு வா’ என்பதற்குப் பதில் 'கோவலனைக் கொன்று வா’ என்று சொன்னதால் ஏற்பட்ட விளைவுகளால்தான் மதுரையே கண்ணகியால் எரிக்கப்பட்டது என்று ஒரு கருத்து உண்டு. வெற்றிகரமான விளைவுகளைத் தரக்கூடிய நாக்கு விபரீத விளைவுகளையும் தரமுடியும்! 'எவன் ஒருவன் நாவை வெல்லுகிறானோ, அவன் இறப்பை வென்றவன் ஆகிவிடுகிறான்’ என்கிறார் கிருபானந்த வாரியார்.

நம் பேச்சு எப்போதும் ஒருவரை பண்படுத்தவேண்டுமே தவிர, புண்படுத்தக்கூடாது.

என் தந்தை அடிக்கடி, 'நல்ல நட்பு நன்மை பயக்கும். எளிமை ஏகாந்தத்தைத் தரும். நண்பர்கள் அதிகம் இருந் தால், தீமை என்பது நம்மை தீண்டிக்கூடப் பார்க்காது. ஆகவே, நிறைய நண்பர்களை வளர்த்துக் கொள்’ என்று அறிவுரை சொல்வார்.
தொழிலாளி முதல் தொழிலதிபர்கள் வரை எனக்கு இன்றும் ஏராளமான நண்பர்கள் உண்டு. அன்றாடம் சந்திக்கும் மனிதர்களுக்கு என்னால் முடிந்த வரை உதவுவதைக் கடமையாகவே கருதுகிறேன். தினமும் காலையில், என் இனிய நண்பர்களான முரளி, ரகு இருவருடனும் இணைந்து வாக்கிங் செல்வேன்.
அமரர் நாகிரெட்டி, அமரர் எஸ்.எஸ்.வாசன் மற்றும் என் தந்தை அமரர் மெய்யப்பன்... இந்த மூவருமே எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள். இந்த மூவரையும் அருகில் இருந்து பார்த்து வியந்ததன் விளைவால், என்னையும் எளிமை தொற்றிக் கொண்டது. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சிலவற்றையும் ஞாபகார்த்தமாய் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். எஸ்.எஸ்.வாசன் பயன்படுத்திய கார் என்னிடம்தான் இருக்கிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம், கதர் வேஷ்டி- சட்டையில் காரில் கம்பீரமாக அவர் அமர்ந்து வரும் அழகு இன்றைக்கும் என் கண்முன் னால் விரிகிறது.
'மனைவி அமைவது என்பது இறைவன் கொடுத்த வரம்!’ என் மனைவியும் ஆடம்பரத்தை விரும்பாதவள். காதுக்கு தோடு, கைக்கு வளையல், கழுத்துக்கு செயின், வாட்ச் இதுதான் அவளது மொத்த நகைகள். எப்போதும் காட்டன் புடவைதான் கட்டுவாள். நகைகள் சேர்ப்பதிலோ, பட்டாடை உடுத்துவதிலோ ஆர்வமில்லாதவள். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், தூய உள்ளத்துடன், உடுத்தும் உடையிலும் எளிமையைக் கடைப்பிடித்தால், ஆசையும் ஏக்கமும் கிட்டேயே நெருங்காது.

பச்சைக் களிமண்ணாலான குடத்தில் வைக்கப்பட்ட தண்ணீ ரைப் போல ஒவ்வொரு விநாடியும் நம் ஆயுள் குறைந்துகொண்டே போகிறது. நாம் இந்த மண்ணில் இருக்கும் காலம்வரை, சிந்தனை யைச் சிதறவிடாமல், உள்ளும் புறமும் தூய பக்தியோடு தினமும் இறைவனை வழிபட்டால், வாழ்வு இனிக்கும்; வளம் பெருகும்!'' - மெலிதான புன்னகையுடன் முடிக்கிறார்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
ன்பைப் பொழியும் அம்மாவாக நடிப்பில் நெகிழச் செய்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். திரைக்குப் பின்னாலும் அப்படித்தான். ‘‘ஐ லவ் மை ஃபேமிலி. வேலை, குடும்பம் இரண்டையும் கரெக்டா பேலன்ஸ் பண்ணிடுவேன். ஒண்ணுக்காக, இன்னொண்ணுல காம்ப்ரமைஸ் ஆகிறதில்ல’’ என்கிறார். நிஜத்தில் இரண்டு டீன் ஏஜ் குழந்தைகளின் அம்மாக்கள் இடுப்புப் பெருத்து, மூச்சு வாங்கி சிரமப்பட, சரண்யா செம ஃபிட். அவரை ஆரோக்கியமாக, உற்சாகமாக வைத்திருக்கும் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

எதையும் பிளான் பண்ணணும்

எனக்கு எப்பவும் வீடு சுத்தமா இருக்கணும். எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்க வேண்டும் என்று நினைப்பேன். எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய்வேன். இந்த வேலையை நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப்போட மாட்டேன். அதே சமயம், உடலை வருத்தியும் செய்ய மாட்டேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், நேரத்தைத் திட்டமிட்டால், எல்லா வேலைகளையும் செய்யலாம்.


‘No Hurry No Worry No Curry’ அவசரம், கவலை, மசாலா இதெல்லாம் தேவை இல்லாத மனஉளைச்சலுக்கு ஆளாக்கிடும். எந்த வேலையையும் திட்டமிட்டு செய்யும்போது, டென்ஷனே இருக்காது. ஈடுபாடும் ஏற்படும். நேரமும் மிச்சமாகும். பொரித்த உணவுகளின் பக்கம் நான் போவதே இல்லை. இட்லி, தோசை, சப்பாத்தி, காய்கறி, கூட்டு, பொரியல்னு நம்ம பாரம்பரிய உணவு தான் என்னை ஃபிட்டா வெச்சிருக்கு. ஷூட்டிங் இல்லாத நேரத்துல, தையல் செய்வேன். என் வீட்டுல எல்லாருக்கும் நான்தான் தைப்பேன். ஷூட்டிங்ல ஷாட் முடிஞ்சதும் கேரவன்ல உட்காந்து எம்ப்ராய்டரி போடுவேன். டெய்லரிங், எம்ப்ராய்ட்ரி தான் என்னோட ஸ்ட்ரெஸ்பஸ்டர்.

வீட்டுல இருக்கிறப்ப, அழகுக்காக நான் நேரத்தை வேஸ்ட் பண்றதே இல்லை. அடிக்கடி முகத்தை கழுவினால் போதும். அதுவே, சருமத்தை இன்னும் அழகாக்கிடும்.

ஷேர் பண்ணுங்க
என்ன வேலை இருந்தாலும், எவ்வளவு நேரம் ஆனாலும், என் ரெண்டு மகள்கள்கிட்டயும் தினமும் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து பேசுவேன். எங்களுக்குள் இருக்கிற இந்த ஷேரிங்கே, சரியான ஃப்ரெண்ட்ஸ்கூட அவங்க பழகுறாங்களானு தெரிஞ்சுடும். எப்பவுமே பாசிட்டிவ்் அப்ரோச் தான். அப்படி ஒரு இணைப்பு பெற்றோருக்கு பிள்ளைங்ககிட்ட இருந்தா, அவங்க எதிர்காலத்தைப் பற்றிய கவலை நமக்கு இருக்காது. இந்தக் காலத்துல பெண்களை வளர்ப்பது கஷ்டம் இல்லை. ஆண் பிள்ளைகளைத்தான் கவனமா வளர்க்கணும்.

நம்பிக்கை வைங்க
நாம ரொம்ப டிசிப்ளிண்டா, சின்ஸியரா இருக்கலாம். ஆனா, மத்தவங்ககிட்டயும் அதை எதிர்பார்க்கிறதுதான் என்னோட பிரச்னையா இருந்தது. அவங்களோட தவறுகளுக்கு, அவங்க சொல்ற சமாளிப்பு, பொய்கள் என்னை இன்னும் டென்ஷனாக்கிவிடும். இதனால் மனசும் பாதிக்கும். இன்றைக்கு நியாயம் இல்லாத கோபத்தைத்தான் நாம் சம்பாதிக்கிறோம். மனிதர்களின் குறைகளை, பொய்களைக் கண்டுகொள்ளாமல் கடக்கவும் பழகிவிட்டேன். வயசாக ஆக ஆக, வாழ்க்கை ரொம்பவே இனிமையா இருக்கு. நமக்கான சந்தோஷங்கள் நிறைய இருக்கின்றன. எல்லோர் மீதும் பாசத்தைக் கொட்ட முடியுது. பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. எதையும் முடிவெடுக்கும் பக்குவம் வருகிறது. சுதந்திரப் பறவையாக இருக்க முடிகிறது. கொஞ்சம் சோர்வாக இருந்தாலும், உடனே, ஜீசஸை நினைத்துக் கொள்வேன்.உடனே, புத்துணர்ச்சியாகிடும். கடவுள் அல்லது ஏதோ ஒரு நம்பிக்கை, நம் மனசை ஃப்ரெஷ்ஷா வைச்சி, நோய்களைக் கிட்டவே நெருங்கவிடாது. 15 ஆண்டுகளாக தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் போறேன். அது என் எனர்ஜி மந்திரம்!

வீட்டு வேலை உடற்பயிற்சி அல்ல
எனக்கு முதுகுவலி இருந்தது. அப்ப, பிசியோதெரப்பிஸ்ட் முதுகெலும்பை வலுவாக்கும் பயிற்சி சொல்லித்தந்தார். இந்த பயிற்சி செஞ்சா மட்டும் என்ன பெரிசா ஆயிடப்போகுதுனு... நினைச்சேன். ஆனா, நல்ல பலன் இருந்தது. வீட்டு வேலையே உடற்பயிற்சிதான்னு சிலர் சொல்லிட்டு இருக்காங்க. இது ரொம்பத் தவறான கருத்து. எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும், உடலை நல்லா ஃபிட்டா வைத்திருக்காங்க. ஆனா, இந்தியாவில் இருக்கிற நண்பர்கள் இடுப்பும் வயிறும் பெருத்து எடை கூடி இருக்காங்க.வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்றதுதான் காரணம். உடலை வருத்தி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து முடித்ததும், டயர்டாகிடும். பசி எடுக்கும். உடனே, வயிறு நிரம்ப சாப்பிட்டுட்டு, தூங்கிவிடுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. வலி, நோய் என்று பிரச்னை வருகிறது. வீட்டுவேலை என்பது உழைப்புதான். வேலையை ஆர்வத்துடன் செய்ய வேண்டுமே தவிர, உடலை வருத்திக்கொண்டு செய்யக் கூடாது. உடல் எடை குறைக்க, நீங்கள் ஸ்லிம்மாக இருந்த படத்தை கண்ணாடி முன் ஒட்டிவைத்துக்கொள்ளுங்கள். அதைப் பார்க்கும்போது எல்லாம், தானாக உடல் இளைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும், அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
நலம் வாழ 4 வழிகள்

ர்நாடக இசைக் குயில் அருணா சாய்ராம். பக்தியும் பரவசமும் நிறைந்த கம்பீரக் குயில். அருணா கச்சேரி என்றால், அரங்கம் தாண்டியும் கூட்டம் அலைமோதும். காந்தக் குரலால் ரசிகர்களை வசப்படுத்தும் அருணா சாய்ராம், ஆரோக்கியத்தை வசப்படுத்தும் ரகசியம் பகிர்கிறார்.

உடல் உற்சாகம்

தியானம் மனதை ஒருநிலைப் படுத்தக்கூடிய அற்புதப் பயிற்சி. தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்வேன். தினமும் வீட்டைச் சுற்றி நடப்பேன். எளிமையான 10 ஆசனங்கள் செய்வேன். பாடகர்களுக்கு சுவாசம் சீராக இருக்க வேண்டும். அதற்காகப் பிராணாயாமப் பயிற்சி செய்வது நல்லது. நேரம் கிடைக்கும்போது, பூஜை முடித்த கையோடு, பிராணாயாமப் பயிற்சி செய்வேன். இதனால், எனக்கு சுவாசப் பிரச்னைகள் வந்ததே இல்லை. வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ய ஆட்கள் இருந்தாலும், சமைப்பது, வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்துவது, துணிகளை மடிப்பது என்று, சின்னச்சின்ன வேலைகளை எடுத்துச் செய்வேன். இதுவே, உடலுக்கான பயிற்சியாக இருக்கிறது.

தெளிந்த மனம்
எவ்வளவு கஷ்டம் வந்தாலும், மனது சங்கடமாக இருந்தாலும் சரணாகதிதான் பெஸ்ட் பாலிஸி. அந்த நேரத்தில் ராகவேந்திர சுவாமியை நினைத்துக்கொள்வேன். பிரச்னைகள் பனி போல விலகிவிடும். பிரச்னைகளை மனதுக்குள் வைத்துப் புழுங்கி, மனநோய்க்கு வழி வகுக்காமல் இருக்க, கஷ்டத்தை அவரவர் இஷ்டத் தெய்வத்திடம் சொல்லலாம். நெருங்கிய நண்பர்களிடம் மனம்விட்டுப் பகிரலாம். பாரத்தை இறக்கிவைத்த திருப்தியே, பெரும்பாலான நோய்களை அண்டவிடாது.

சந்தோஷமான மனநிலையில் நாம் என்ன நினைக்கிறோமோ, அதைச் செஞ்சுடணும். நொடிப் பொழுது சந்தோஷம், சோகம்னு உணர்வுகள் மாறிட்டே இருக்கும். இன்னிக்கு, எங்காவது போகணும், யாருக்காவது உதவணும்னு நினைத்தால், உடனே அதைச் செய்திடுவேன். அந்த நேரத்துல செய்யற செயல் ஆத்ம திருப்தியைத் தந்து, மனதுக்கும் அப்பப்ப உற்சாகத்தைத் தந்துகொண்டே இருக்கும்.

உணவே... ஊட்டம்
சாம்பார், ரசம், கீரை, கூட்டு, பொரியல்னு ரெகுலர் வீட்டு சாப்பாடுதான். டீ, காபி குடிக்க மாட்டேன். நீராகாரமா நிறைய எடுத்துக்கொள்வேன். முக்கியமாகப் பசித்த பிறகுதான் சாப்பிடுவேன். நேரத்தோட சாப்பிடுவேன். எது உடலுக்கு நல்லது என்று தேர்ந்தெடுத்துச் சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு. வயிறு நிரம்பச் சாப்பிட மாட்டேன். இதனால, அப்பப்ப பசிக்கும். அப்போது ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், பழங்களை நறுக்கிச் சாப்பிடுவேன்.

பொன்னான நேரம்
நேரம் கிடைக்கும்போது எல்லாம், டான்ஸ், வயலின், வீணை என மற்ற வித்வான்களோட கச்சேரிக்குச் செல்வேன். இது மனசுக்கு ரிலாக்ஸ்டா இருக்கும். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவும். புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும். நல்ல படங்கள் பார்ப்பேன். இவை எல்லாம்தான் எனக்கு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர். சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு இமெயில் வந்தது. அதில், 'என் குழந்தையால நடமாட முடியாது. ஸ்பாஸ்டிக் சைல்டு. உங்க பாட்டைக் கேட்டாலே, அவள் சந்தோஷமாயிடுவா. அடம்பிடிக்காம அமைதியா கேட்பா. நீங்க வீட்டுக்கு வர முடியுமா?'' என்று முகவரியையும் அனுப்பியிருந்தார்கள். அந்த மெயில் என்னை ரொம்பவே நெகிழவைத்துவிட்டது. ஒருநாள் திடீர்னு அந்த வீட்டுக்குச் சென்றேன். அந்தக் குழந்தைக்கு அப்படியொரு சந்தோஷம். அந்தக் குழந்தை விரும்பி கேட்கும் பாடலைப் பாடிக் காட்டினேன். கொஞ்ச நேரம் அந்தக் குழந்தையோட இருந்தேன். எப்போதும் கிடைக்காத நிம்மதி அந்த சில மணி நேரங்களில் எனக்குக் கிடைத்தது!'

[HR][/HR]அருணாவின் ஆரோக்கிய டிப்ஸ்
ஜீரணமாகாத உணவைத்தான் இன்னிக்கு பலரும் சாப்பிடறாங்க. வயிறு முட்ட சாப்பிடாதீங்க. சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. நடப்பது, குனிஞ்சு நிமிர்ந்து வேலைகளை செய்யறதுன்னு இருந்தால், ஜீரணசக்தி நல்லா இருக்கும். மலச்சிக்கல் பிரச்னை இருக்காது.
தலைவலி இருக்கும்போது, அதிகமா சாப்பிடக்கூடாது. பிளாக் டீ குடிச்சிட்டு, தைலம் தடவிட்டு எதைப் பத்தியும் சிந்திக்காம அமைதியா இருந்தாலே, தலைவலி பறந்திடும்.

தொண்டை வலிக்கு பாலில், மஞ்சள்தூள் போட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு சொட்டு நெய்விட்டு பனங்கல்கண்டு போட்டு குடிச்சா, வலி மட்டுமில்லை... புண்ணும் ஆறிடும்.

வெந்தயத்தை தண்ணீர்ல ஊறவெச்சு, வெந்தயத்தோட குடிச்சா வயிற்று வலி இருக்காது. ஆரோரோட் மாவை கஞ்சி செஞ்சு சாப்பிட்டா, வயிற்றுப்போக்கு சட்டுனு நிக்கும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
நலம் வாழ 4 வழிகள் - ரமணி சந்திரன்

வீட்டில் நம் தேவைகளை, பார்த்து பார்த்துச் செய்யும் பாசமான அம்மாவைப் போல் எளிமையாக இருக்கிறார், பெண்களின் ஃபேவரைட் எழுத்தாளர் ரமணி சந்திரன். ``நாலு வழிகள் என்று கச்சிதமாகச் சொல்ல முடியாவிட்டாலும், என்னை எப்பவும் உற்சாகமாக, ஆரோக்கியமாக வைக்கின்ற சில விஷயங்களைச் சொல்லலாம். உணவையோ மற்ற பழக்கங்களையோ இதுதான்... இன்னதுதான் என்று குறிப்பிட்டுப் பண்ணுவதில்லை. அதுவேகூட ஒரு காரணமாக இருக்கலாம்’’ என்று புன்னகைக்கிறார்.


வேலை செய்தால் நோயை விரட்டலாம்
எல்லா டாக்டர்களும் `வாக்கிங் போங்க, வாக்கிங் போங்க’ என்பார்கள். அது எந்த அளவுக்கு நல்லது என்பது, தினசரி போக ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது. ஸ்கூல் படிக்கும் காலத்தில், விளையாட்டு வகுப்பில் சொல்லிக்கொடுத்த பயிற்சிகளும், சூரிய நமஸ்காரமும் இன்றும் என் நினைவில் உள்ளன. அவை தவிர, வீட்டுவேலைகளும் செய்வோம். படிக்கும் வயதில் சோம்பி இருக்கவே விடமாட்டார் என் அம்மா. கோடை விடுமுறை வரும்போது, எங்கள் வீட்டில் வேலை செய்கிற அம்மாவுக்கு இரண்டு மாத சம்பளத்துடன், லீவையும் சேர்த்து கொடுத்து அனுப்பிடுவார். வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து தோசைக்கு மாவு ஆட்டுவது வரை எல்லா வேலைகளையும் நாங்கள்தான் செய்வோம். வேலையும் பழகிக்கலாம்; உடலுக்கும் நல்ல பயிற்சி. சென்னைக்கு வந்தபிறகு, அதுபோன்ற கடினமான வேலைகள் எல்லாம் குறைந்துவிட்டது. 67 வயதில் சர்க்கரை நோய் வந்தது. அப்போது முதல், இந்த ஒன்பது ஆண்டுகளாக, நானும் என் கணவரும் தினமும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் கட்டாயம் நடப்போம். காலையில் பால் குடித்துவிட்டு, வாக்கிங் போய்விட்டு வந்தால், அந்த நாளின் தொடக்கமே ஆரோக்கியமானதாக இருக்கும்.

எளிமையான உணவு
அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு எல்லாம் அளவோடு தான் சேர்த்துக் கொள்கிறேன். காலையில் டிபன், மதியம் சாப்பாடு என ஊர்ப்பக்க வழக்கம்தான் என் வீட்டிலும். என் அம்மா என்ன சமைத்தாலும் அது தேவாமிர்தமாக இருக்கும். வெறும் மிளகைத் தாளி்த்து, வெங்காய சாம்பார் வைப்பார்். அப்படி ஒரு வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும். சமைப்பதில் அது, இது என்று பிரம்மாண்டம் இல்லாமல், எதைச் செய்தாலும் எளிமையாக, சுவையாக, ஆரோக்கியமாக செய்ய வேண்டும் என்பதுதான் என் அம்மாவிடம் நான் கற்றுக்கொண்ட பாடம்.

வேண்டாததை தவிர்க்கலாம்!
எனக்கு சர்க்கரை நோய் வந்தபோது, ‘வெள்ளை சர்க்கரை, வெல்லம் தவிர்க்கிறது நல்லது’ என்றார் டாக்டர்். அந்த நாளில் இருந்து இந்த இரண்டையும் விட்டுவிட்டேன். என் அப்பா பயங்கர செயின் ஸ்மோக்கர். ஒருநாள் இரவு, அவரது டின்னில் (அந்தக் காலத்தில் சிகரெட் டின்னில் வரும்) சிகரெட் இல்லாமல், அவர் பட்ட அவஸ்தையையும், அந்த மூன்று இன்ச் எமனால் அவர் பட்ட பாட்டையும் இன்று நினைத்தாலும் நடுங்குகிறது. அடுத்த நாள் காலையில், ‘இத்தணூண்டு சிகரெட் நம்மை இந்த அளவுக்கு ஆட்டிப்படைப்பதா?’ என்று நினைத்து, அந்த நிமிடத்தில் இருந்து அதை அவர் தொடவே இல்லை. அந்த மன வைராக்கியம் இருந்தால், எந்தத் தீய பழக்கத்தையும் உதறித் தள்ளிவிடலாம்.

உறவுகள் தரும் உற்சாகம்

என் உடன்பிறந்தவர்கள் ஏழு பேர். பெரியப்பா வீட்டில் எட்டு பிள்ளைகள். அதனால், அக்கா, அண்ணன், தம்பி, தங்கைகள், பேரக் குழந்தைகள் என்று எனக்கு நிறைய சொந்தங்கள் உண்டு. சென்னையிலேயே பல குடும்பங்கள் இருப்பதால், அடிக்கடி ஏதாவது விழாக்களைச் சாக்காக வைத்து சந்திப்போம். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஏதாவது செய்து கொண்டு வந்து, எல்லோரும் சேர்ந்து உக்கார்ந்து, பரிமாறி, சாப்பிட்டுக் கொண்டே நினைவுகளை அசைபோடுவோம். வருடம் ஒருமுறை, திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் என எங்கள் ஊர்க் கோயில்களுக்குப் போய்விட்டு வருவோம். இதுவே, தனி தெம்பைத் தந்துவிடும். ஊரில் ஏதாவது கல்யாணம், விசேஷம் என்றால், தூரம், செலவு, அலைச்சல் எல்லாம் பார்க்காமல், கிளம்பிப் போயிட்டு வந்துவிடுவோம். உறவுகளும் அம்மா, அப்பா புழங்கிய வீடுகளும் தரும் உணர்வுகள் வார்த்தையில் வர்ணிக்க முடியாத உற்சாகத்தைத் தரும். இந்த ஆனந்தம் தான் ஆனந்தம், என் ஆரோக்கியத்துக்கான அடித்தளம்!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.