Ways how to deal with stress at work - ஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள&#302

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்

னோஜுக்கு 42 வயது. ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. மீட்டிங், டார்கெட் என அலுவலகத்தில் மூச்சுவிட நேரமின்றி பரபரப்பான வேலை. டென்ஷனைக் குறைக்க, அவ்வப்போது சிகரெட்களாக ஊதித்தள்ளுவார். வார இறுதியில் நண்பர்களுடன் மது அருந்துவார். இந்தத் தவறான வாழ்க்கைமுறையால் உடல்பருமனுக்கு ஆளானார். அதைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என வரிசைகட்டின. ஒரு நாள் கடுமை யான வயிற்று வலி ஏற்பட, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது, பேஃட்டி லிவர் பிரச்னை இருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே, குடும்பத்திலும் பிரச்னை என்பதால், இப்போது மனோஜைக் கவனித்துக்கொள்ளக்கூட ஆள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

மனோஜைப் போலவே பல்லாயிரக்கணக்கானோர் இப்படிப் பரிதவிக்கின்றனர். ‘ஆபீஸ் ஸ்ட்ரெஸ்’ எனப்படும் அலுவலக மன அழுத்தத்தை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆபீஸ் ஸ்ட்ரெஸ் ஏன் வருகிறது என்பதற்குப் பொதுவாக 10 காரணங்கள் உள்ளன.

1 நிறைய வேலைசெய்ய வேண்டும். ஆனால், குறைவான சம்பளம் மட்டுமே கிடைக்கும் எனும் நிலையில் இருப்பவர்கள் முதல் வகை. பணிச்சுமை மற்றும் குடும்பத்தைச் சமாளிக்க முடியவில்லை எனும் ஆதங்கத்தால் மன அழுத்தம் ஏற்படும்.

2 மூன்று, நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்யும்போது ஏற்படும் பணிச்சுமையால் ஸ்ட்ரெஸ் ஏற்படும்.

3 ‘நான்தான் அலுவலகத்திலேயே பெஸ்ட்’ என நினைப்பவர்கள் மற்றவர்களின் வேலையையும் முன்வந்து எடுத்துச் செய்வார்கள். மற்றவர்கள் செய்யும் அனைத்து வேலைகளும் அவர்களுக்குக் குறையாகத் தோன்றும். இதுவே அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

4 ஒரு சிலர் மற்றவர்களைக் காட்டிலும் திறன் மிக்கவராக இருப்பர். நன்றாக வேலை செய்யக்கூடியவர், இவர் செய்தால், வேலையில் பிழை இருக்காது என்பதால் அலுவலகத்தில் அதிகப் பணிச்சுமை கொடுப்பார்கள். இதனால், பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மன அழுத்தத்தில் புழுங்குவார்கள்.

5 நவீன உலகத்தில், அனைவருமே எட்டு கால் பாய்ச்சலில் ஓடவேண்டிய நிலை உள்ளது, பல நிறுவனங்களும் இதைக் கருத்தில்கொண்டு தொழில்நுட்ப மாற்றங்களை உடனுக்குடன் அப்டேட் செய்கிறார்கள். இந்தத் தொழில்நுட்ப மாற்றங்களை அப்டேட் செய்துகொள்ளும் திறன் குறைவாக உள்ளவர்கள், பொறுப்புகளில் இருந்து ஒதுக்கப்படுகிறார்கள். இந்தப் பிரச்னையால் மன உளைச்சல் ஏற்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

6 ஒரு சில நிறுவனங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படாமல் இருக்கும். சிறுசிறு முடிவுகளுக்குக்கூட உயர் அதிகாரியை நாட வேண்டி இருக்கும். பல வருடங்கள் உழைத்தும் சிறு முடிவைக்கூட தங்களால் எடுக்க முடிவது இல்லை எனும் விரக்தி சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். பெரும்பாலும், 35 வயதைத் தாண்டியவர்கள் இந்தப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.

7 அலுவலகத்தில் நல்ல மரியாதை, நல்ல சம்பளம் கிடைத்தும் சிலர் வேலைப்பளு காரணமாக இரவு வீட்டுக்குத் தாமதமாக வருவது, வீட்டில் குடும்பத்தினரைக் கண்டுகொள்ளாமல் இருப்பது என்று இருப்பார்கள். இதனால், வீட்டில் மனைவி, குழந்தைகள் போன்றோருடன் சரியான பிணைப்பு இன்றி, சண்டைச் சச்சரவுகள் அதிகரிப்பதால், அலுவலக வேலைகளில் சுணக்கம் காண்பித்து அலுவலகத்திலும் கெட்ட பெயர் எடுப்பார்கள்.

8 சில அலுவலகங்களில் ‘ஜாப் புரொஃபைல்’ எனப்படும் ஒருவருக்கு என்ன வேலை என்பதையே தெளிவாகச் சொல்லாமல் பணியாளராகச் சேர்த்திருப்பார்கள். அவரிடம் எல்லாவிதமான வேலைகளையும் வாங்குவார்கள். இதனால், எந்தத் துறையிலும் சிறப்பாகச் செயல்பட முடியாமல், தான் எந்த வேலையில் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதும் தெரியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள்.

9 அலுவலக அரசியல், பணிச்சூழல், நிர்வாகச்சூழல் என்பனவற்றை எல்லாம் தாண்டி, சிலர் அலுவலகத்தில் உயர் அதிகாரி ஆகியிருப்பார்கள். சிலர் நீண்ட நாட்கள் உழைத்தும் சரியான அங்கீகாரம் இல்லை என அலுத்துக்கொண்டிருப்பார்கள். தன்னம்பிக்கை இன்மை, தாழ்வு மனப்பான்மை எதிர்காலம் குறித்த அச்சத்தால் பாதிக்கப்படுவார்கள்.

10 சிலர் தாங்களாகவே மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்வதும் உண்டு. சக ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்கை யைப் பற்றி கிசுகிசு பேசுவது, எதற்கெடுத் தாலும் உயர் அதிகா ரியைத் திட்டிக் கொண்டே இருப்பது, தனக்கு மட்டுமே கடினமான வேலைகளைக் கொடுக்கிறார்கள் என நினைப்பது, தன்னை மட்டும் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்கள் எனத் தேவையற்ற பயம் கொள்வது, பிடிக்காத வேலையைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் புலம்புவது, தன்னை யாரும் மதிப்பது இல்லை என நினைத்துக்கொள்வது போன்ற காரணங்களால் மன உளைச்சலை தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்வோரும் உண்டு.

ஆபீஸ் ஸ்ட்ரெஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?


இரண்டு மூன்று மாதங்களாக வழக்கத்துக்கு மாறாகக் கோபமாகக் காணப்படுவார்கள்.

அடிக்கடி நகம் கடித்துக்கொண்டே இருப்பார்கள்; ‘ஆப்சென்ட் மைண்ட்’ பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்; எதையாவது வெறித்துப் பார்ப்பார்கள்; செய்த வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்; எப்போதும் சோர்வாக இருப்பார்கள்.

அலுவலக ஸ்ட்ரெஸ் தாங்க முடியாமல் நிறையச் சாப்பிடுவார்கள். எப்போதும் ஒருவித பயம், பதற்ற உணர்வுடன் இருப்பார்கள். சிலர் எப்போதும் தங்களை தைரியசாலிபோல மற்றவர்களிடம் வேண்டுமென்றே காட்டிக்கொள்வார்கள்.

இரவு, நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருப்பார்கள்.

சிலர் சிகரெட், மது போன்ற தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.

மன அழுத்தத்தின் அளவைப் பொறுத்து மறுவாழ்வு சிகிச்சைகள் தேவைப்படலாம்.

ஆபீஸ் ஸ்ட்ரெஸ்ஸைக் கையாள்வது எப்படி?

ஆபீஸ் ஸ்ட்ரெஸ் காரணமாகப் பாதிக்கப்படுபவர்களில் அதிகம் பேர் 25-35 வயதைச் சேர்ந்தவர்கள்.

அலுவலக வேலை குறித்தத் தெளிவின்மைதான் மனஅழுத்தத்துக்கு முக்கியமான காரணம். கல்லூரிக்குச் செல்லும்போது காலை முதல் மாலை வரை நாம் செலவுசெய்து கற்றுக்கொள்கிறோம். அலுவலகத்துக்குச் செல்லும்போது அதே காலை முதல் மாலை வரை வேலை செய்வதற்கு நமக்கு அலுவலகம் சம்பளம் தருகிறது என்பது மட்டும்தான் கல்லூரி முடித்து அலுவலகம் செல்பவர்களின் புரிதலாக உள்ளது.

நமக்கான வேலை, நமக்கான புரொஃபைலை நாம் உருவாக்கிக்கொள்ளும்போது அதற்குரிய பணிச்சூழல், அதனால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றை உணர்ந்து லைஃப்ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஓய்வுதான் மன அழுத்தம் போக்குவதற்கான சிறந்த நிவாரணி. தியேட்டருக்குச் செல்வது, ஹோட்டலில் சென்று சாப்பிடுவது, நண்பர்களுடன் பேசுவது போன்றவை மட்டுமே மனஅழுத்தம் போக்கும் காரணிகள் அல்ல.

நல்ல ஆழ்நிலை தூக்கம்தான் மன அழுத்தம் போக்கும் முக்கியமான நிவாரணி. தினமும் ஏழெட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

உடற்பயிற்சியை விரும்பிச்செய்ய வேண்டும். ஜிம்முக்குச் சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அவசியம் இல்லை, வசிக்கும் இடத்திலேயே அவரவர்க்கு ஏற்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

தியானம், யோகா ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளலாம். நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரோடு சேர்ந்து எளிமையான குழு விளையாட்டுக்களை விளையாடலாம்.

பிடித்த டிஷ் செய்தல், ஃபேஷன் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் மனஅழுத்தம் போக்கும். சமூக வலைதளங்களில் ஒருநாளைக்கு அரை மணி நேரத்துக்கு மேல் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மூளையைச் சுறுசுறுப்பாக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அவரவர் விருப்பம்போல, பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம், பெயின்டிங் செய்யலாம்.

அலுவலகத்துக்கும் குடும்பத்துக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அலுவலக டென்ஷனை வீட்டிலும், வீட்டில் ஏற்படும் டென்ஷனை அலுவலகத்திலும் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் நேர்மறை எண்ணங்களைக் கைவிடாதீர்கள்.

சுற்றுலா செல்வது மனஅழுத்தம் போக்கும் சிறந்த நிவாரணி என்றாலும், பணிச்சூழல், பண வசதி ஆகியவற்றின் காரணமாக சிலர் சுற்றுலா செல்ல முடியாமல் நேரிடலாம். வாய்ப்பு இருந்தால் சுற்றுலா செல்லலாம். இல்லை எனில், அன்றாட வாழ்க்கையிலேயே சிறுசிறு மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் மனஅழுத்ததைத் தவிர்க்க முடியும்.


[HR][/HR]
கோபம், மன அழுத்தம் தவிர்த்தலின் ஆறு நன்மைகள்..

.


அலுவலகத்தில் சரியாகப் பணிபுரிவதால், உங்களுக்கும் அலுவலகத்துக்கும் வளர்ச்சி ஏற்படும்.

வீட்டில் இருப்பவர்களுடன் நேரம் ஒதுக்க முடிவதால், சண்டைச் சச்சரவுகள் இன்றி, வீட்டில் அன்பும் மகிழ்ச்சியும் பெருகும்.

மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உடல்பருமன் குறையும்.

மூளை சுறுசுறுப்படையும்; பல விஷயங்களில் தெளிவு பிறக்கும்.

வாழ்வியல்முறையை மாற்றிக்கொள்வதால், பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

யோகா, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்வதால், உடல் ஃபிட்டாகும்.

நேர மேலாண்மை

நேர மேலாண்மைதான் மனஅழுத்தம் போக்குவதற்கு மிகவும் முக்கியமான விஷயம். ‘எனக்கு நேரம் இல்லை’ எனச் சொல்வதைத் தவிருங்கள். அலுவலகத்தில் வேலை நேரத்தில் ஒழுங்காக வேலைசெய்யாமல், கூடுதல் நேரம் எடுத்து, வேலையை முடிப்பதைத் தவிர்க்கவும். காலை எழுவதிலும், இரவு உறங்குவதிலும் நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பது அவசியம். டி.வி பார்க்கலாம், மொபைல் கேம்ஸ் விளையாடலாம், போன் பேசலாம், சமூக வலைதளங்களில் உலாவலாம். இதில் தவறு இல்லை. ஆனால், பொழுதுபோக்கு விஷயங்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்குங்கள். வலுக்கட்டயமாக நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்காமல், மன நிறைவோடு கடைப்பிடித்தால், நிம்மதியும் இருக்கும். உங்கள் துறையில் வளர்ச்சியும் அடைய முடியும்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.