What Causes Low Immunity? - எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?

எல்லையிலிருந்து நாட்டைப் பாதுகாக் கும் ராணுவம் போல், ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு எதிர்ப்பு சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி பற்றி தொற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராமசுப்பிரமணியன் விளக்குகிறார்...


வெள்ளை அணுக்கள் எனும் போர்வீரர்கள்


நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருபவை. அதனால், வெள்ளை அணுக்களுக்குப் ‘போர்வீரர்கள்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. இன்று சுற்றுப்புறச் சூழல் மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம் உடலுக்குள் ஊடுருவலாம். அந்த கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையையே வெள்ளை அணுக்கள் செய்கின்றன.

இரண்டு வகை சக்தி


நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அமையும் சக்தி. மாசடைந்த காற்றை சுவாசிக்கும் போது, இயல்பாகவே உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் நமக்கு மூச்சுத் திணறு கிறது. அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று உடல் நம்மை நிர்ப்பந்திக்கிறது. இதுபோல், தோல் பகுதி, வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன.

இன்னொன்று அனுபவத்தின் அடிப்படையில் உடல் கற்றுக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும்போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்துகொள்ளும்.

இந்த காரணங்களால் நோய் ஏற்படுகிறது என்பதை நினைவு வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் உடல் எச்சரிக்கையாகிவிடும். இதற்கு ‘மெமரி செல்கள்’ என்று பெயர். இதனால்தான், ஒருவருக்கு சின்னம்மை ஏற்பட்டால் அதன்பிறகு அவரது வாழ்நாளில் சின்னம்மை மீண்டும் வருவதில்லை.

குறைய காரணம் என்ன..?


ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர்த்து, பிறக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், இந்த சக்தி நாளடைவில் பல காரணங்களால் குறையும்.

சரிவிகித உணவு சாப்பிடாததால் ஏற்படும் சத்துக்குறைபாடு, பரம்பரைக் குறைபாடுகளால் ஏற்படும் நோய், உடல்நலக் குறைவின் காரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் குறையும். உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போதும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

என்னதான் உடலின் ரத்த வகையை எல்லாம் பார்த்து உறுப்புகளை மாற்றினாலும், ‘இது என்னுடைய சிறுநீரகம் இல்லை’, ‘இது என்னுடைய இதயம் இல்லை’ என்பது அந்த உடலுக்குத் தெரிந்துவிடும். அதன்பிறகு, அந்த உறுப்பு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் சண்டையிட ஆரம்பிக்கும். இதற்காக சில மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்த காரணங்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ஹெச்.ஐ.வி. போன்ற பாலியல் நோய்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். செய்... செய்யாதே...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நம் அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தாலே போதும். பெரிதாக ஒன்றும் தேவையில்லை. சைவமா, அசைவமா என்பதெல்லாம் பிரச்னையில்லை.

என்ன உணவு சாப்பிட்டாலும் உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதம், கார்போஹைட்ரேட், தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்குமாறு உணவுமுறையைப் பின்பற்றினாலே போதும். இன்று உடல் உழைப்பு குறைந்த வேலைகளையே பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் எளிமையான உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடைப்பயிற்சி, விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகள் அவசியம். 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் முக்கியம். இதனுடன் புகை, மது போன்ற தீய பழக்கங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிவேகத்தில் குறைப்பவை என்பதை சொல்லத் தேவையில்லை.

வைட்டமின் மாத்திரைகள் தேவையில்லை

நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்பதற்காக வைட்டமின் மாத்திரை களை சிலர் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இது எல்லோருக்கும் கை கொடுக்காது. சில உணவுகள் சாப்பிட முடியாத பட்சத்தில் வேண்டுமானால் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், நம் ஊரில் பழங்கள் சாப்பிட்டால் போதும் என்றும் நினைப்பார்கள். சரிவிகித உணவு மட்டுமே நோய் எதிர்ப்பு
சக்தியைத் தரும்.

தடுப்பூசி நல்லது

தடுப்பூசி என்பதே குழந்தைகளுக்குத்தான் என்று பலரும் நினைக்க வேண்டாம். ஆனால், தடுப்பூசி என்பது எல்லா தரப்பினருக்கும் தேவை. உதாரணத்துக்கு, குழந்தையாக இருக்கும்போது 5 டெட்டனஸ் ஊசி போட்டிருப்பார்கள். ஆனால், டெட்டனஸ் தடுப்பூசி 10 வருடத்துக்கு ஒருமுறை போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த ஊசி போட்டிருந்தால், இடையில் விபத்தில் அடிபட்டால் கூட தடுப்பூசி தேவையில்லாமலே நம்மைக் காப்பாற்றிவிடும். கக்குவான், ஹெபடைட்டிஸ் என்று பல தடுப்பூசிகள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!

உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையும். என்னதான் உடலின் ரத்த வகையை எல்லாம் பார்த்து உறுப்பு களை மாற்றினாலும்,
‘இது என்னுடைய சிறுநீரகம் இல்லை’, ‘இது என்னுடைய இதயம் இல்லை’ என்பது அந்த உடலுக்குத் தெரிந்துவிடும்.

வைட்டமின் சி உதவுமா?

வைட்டமின் சி மாத்திரைகள் ஜலதோஷத்தை தடுப்பதற்கும் குணப்படுத்து வதற்கும் நல்ல நிவாரணி என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு, சராசரியாக 500 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த அளவு எடுத்துக் கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. வழக்கமாக நமக்குக் கிடைக்கும் மாத்திரைகளிலும் 8 கிராம் அல்லது 10 கிராம் அளவுதான் இருக்கும்.

சரி... பழங்களிலிருந்தே இந்த 500 மில்லி கிராம் எடுத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டால், அதற்கு கிட்டத்தட்ட 8 ஆரஞ்சு பழங்களுக்கு மேல் ஒரேநாளில் சாப்பிட வேண்டியிருக்கும். இவை எல்லாவற்றையும் விட மிகவும் எளிதான வழி, சரிவிகித உணவை அன்றாட நம் உணவுப்பழக்கத்தில் பின்பற்றுவதுதான். அதனால், சரிவிகித உணவைத் தவிர நோய் எதிர்ப்பு சக்திக்கு வேறு எந்த குறுக்கு வழியும் இல்லை!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.