What causes sinus headache? - சைனஸ் தலைவலி ஏற்படுவது ஏன்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சைனஸ் தலைவலி ஏற்படுவது ஏன்?

டாக்டர் கு. கணேசன்

மார்கழி தொடங்கிவிட்டால் போதும் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா இளைப்பு என்று ஆரோக்கியப் பிரச்சினைகள் வரிசைகட்டி வந்துவிடும். அதிலும் பனிப்பொழிவால் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால், அது சைனஸ் பிரச்சினையாக உருவெடுத்து ரொம்பவே சிரமப்படுத்தும்.

சைனஸ்என்றால் என்ன?

நம் மூக்கைச் சுற்றி நான்கு ஜோடி காற்றுப் பைகள் உள்ளன. இதற்குப் பெயர்தான் சைனஸ். மூக்கின் உட்புறமாகப் புருவத்துக்கு மேலே நெற்றியில் உள்ள சைனஸ் - ஃபிரான்டல் சைனஸ். மூக்குக்கு இரு புறமும் கன்னத்தில் உள்ள சைனஸ் - மேக்ஸிலரி சைனஸ். கண்ணுக்கும் மூக்குக்கும் நடுவில் உள்ளது - எத்மாய்டு சைனஸ். கண்களுக்குப் பின்புறம் மூளையை ஒட்டி உள்ள சைனஸ் - பீனாய்டு
சைனஸ். இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் பிரச்சினைதான்.

நாம் சுவாசிக்கும் காற்றைத் தேவையான வெப்பத்தில் நுரையீரலுக்குள் அனுப்பும் முக்கியமான வேலையை இந்த சைனஸ் காற்றுப் பைகள் செய்கின்றன. சாதாரணமாக சைனஸ் அறைகளிலிருந்து சிறிதளவு திரவம் சுரந்து, மூக்குக்கு வரும்.

மூக்கில் ‘மியூகஸ் மெம்பரேன்’ எனும் சளிச் சவ்வு இருக்கிறது. சைனஸ் திரவம் இதை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதன் பலனால், வெளிக்காற்று வெப்பத்துடன் நுழைந்தாலும், அது ஈரப்படுத்தப்பட்டு நுரையீரலுக்குள் அனுப்பப்படுகிறது. இந்த சைனஸ் அறைகளின் திரவ வடிகால்கள் அடைபட்டு, அங்குத் திரவம் தேங்கும்போது சைனஸ் பிரச்சினை (Sinusitis) ஏற்படுகிறது.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
சைனஸ் பாதிப்பு ஏன்?

ஆரோக்கியக் குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும்தான் சைனஸ் பிரச்சினைக்கு முக்கியக் காரணங்கள். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும்போது சைனஸ் தொல்லை கொடுக்கிறது. மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, ‘பாலிப்’ என அழைக்கப்படுகிற மூக்குச் சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்சினையைத் தூண்டுகின்றன.

அழற்சியே அடிப்படை

மாசடைந்த காற்றில் கலந்துவரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்துவிடும் போது, அங்குள்ள ‘சளி சவ்வு’ வீங்கி அழற்சியாகும். இதனால் அளவுக்கு அதிகமாக நிணநீர் திரவம் சுரந்து, மூக்கு வழியாக வெளியேறும். ஜலதோஷம் பிடித்தால், தூசு, புகை, வாசனைத் திரவியம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால், மிகவும் குளிர்ச்சியானதைச் சாப்பிட்டால், பனியில் நடந்தால், மழையில் நீண்ட நேரம் நனைந்தால் இதே நிலைமைதான்.

சைனஸ் அறையில் அழற்சி அதிகரிக்கும்போதும், மூக்கில் சதை வளரும்போதும் இந்த நீர் வெளியேற முடியாத அளவுக்கு மூக்கு அடைத்துக்கொள்ளும். அப்போது மூக்கை உறிஞ்சிக்கொண்டே இருப்பார்கள். இதனால் சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமடையும்.

அறிகுறிகள் என்ன?
அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலி ஏற்படும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இவற்றுடன் காய்ச்சல், தொண்டையில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்துகொள்ளும். மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கட்டியான மூக்குச் சளி வெளியேறும். சைனஸ் பாதிப்பு நீடித்தால், சளியில் துர்நாற்றம் வீசும். வாசனை தெரியாது; ருசியை உணர முடியாது.

என்ன சிகிச்சை?
இந்தப் பிரச்சினைக்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணியாக இருப்பதால், அந்த ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையை முதலில் மேற்கொள்ள வேண்டும். மூக்கு ஒழுகுவதை நிறுத்த ஆன்ட்டிஹிஸ்டமின் மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுவது நல்லதல்ல. சொட்டு மருந்து விடுவதால், ஆரம்பத்தில் நிவாரணம் கிடைப்பது போலிருக்கும். ஆனால், நாளடைவில் இதனால் நிவாரணம் கிடைக்காது.

இதற்குப் பதிலாக, ஸ்டீராய்டு கலந்த மூக்கு ஸ்பிரேயர்களைப் பயன்படுத்தலாம். இவற்றால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. மூக்கின் வெளிப்புறத்திலிருந்து இவற்றைப் பயன்படுத்துவதால், ரத்தத்தில் ஸ்டீராய்டு மருந்து கலப்பதற்கு வாய்ப்பில்லை. மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு இந்த மூக்கு ஸ்பிரேயர்களைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

மூக்கடைப்பைப் போக்க டிங்க்சர் பென்சாயின், மென்தால், யூகலிப்டஸ் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்திக் காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கில் உள்ள சளி இளகிச் சுலபமாக வெளியேறிவிடும்.

தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
எண்டாஸ்கோப்பி உதவும்!

முன்பெல்லாம் சைனஸ் திரவத்தை வெளியேற்ற மூக்கினுள் துளை போடுவார்கள். இதற்குப் பயந்தே பலரும் சிகிச்சைக்கு வரத் தயங்குவார்கள். இந்த நிலைமை இப்போது இல்லை. எண்டாஸ்கோப்பி உதவியுடன், ‘பலூன் சைனுபிளாஸ்டி’ (Balloon sinuplasty) எனும் நவீன சிகிச்சை முறையில், வலி இல்லாமல் மிகத் துல்லியமாகச் சிகிச்சை அளித்து முழு நிவாரணம் அளிக்கமுடியும். மூக்கின் நடு எலும்பு வளைவு, சதை வளர்ச்சி போன்றவற்றுக்கும் இந்தக் கருவி மூலம் சிகிச்சை தர முடியும்.

தடுப்பது எப்படி?
சுயசுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம் பேணுவதன் மூலம் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சமச்சீரான உணவைச் சாப்பிட்டு ஆரோக்கியம் காக்க வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஜலதோஷம் உள்ளவர்களின் அருகிலிருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வாமைப் பொருளைத் தவிர்க்க வேண்டும். தூசு, புகைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும்போது முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்து கொள்ளலாம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் பிராணாயாமம் செய்ய வேண்டும். தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஐஸ், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுப் பதார்த்தங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

செய்யக் கூடாதவை
குளிர்பானங்களைக் குடிக்கவே கூடாது. பனியில் அலையக் கூடாது. புகைபிடிக்கக் கூடாது. புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது. மூக்குப்பொடி போடக் கூடாது. அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது. மூக்கைப் பலமாகச் சிந்தக் கூடாது. விரல்களால் அடிக்கடி மூக்கைக் குடையக் கூடாது.

மூக்கடைப்பைப் போக்கும் இன்ஹேலரை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி, அழற்சி தீவிரமடையுமே தவிர, குறையாது. இதுபோல் ‘வேப்பரப்’ களிம்பை அளவுக்கு மேல் மூக்கின் மீது தடவினால், மூக்கில் உள்ள ரத்தக் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு மூக்கு புண்ணாகிவிடும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.