Why Aadi month is auspicious? - ஆடி வழிபாடும்! அதன் சிறப்பும்!!!!!!

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,776
Location
Chennai
#1
சாஸ்திரங்கள் மற்றும் அறிவியல் கூறும் ஆடியின் சிறப்பு!




நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். தை மாதம் முதல் தேதியிலிருந்து ஆனி மாதம் வரை உத்தரானப் புண்ணிய காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் கூறுவர்.

தட்சிணாயனம் மழைக்காலத்தின் தொடக்கத்தையும் உத்தராயனம் கோடைக்காலத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது. உத்தாரயனக் காலத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்காகவும்.

ஆடி முதல் மார்கழி வரை தெற்கிலிருந்து வடக்காகவும் பயணிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் சூரியன் அவ்வாறு பயணிப்பதில்லை. நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவரும் பூமியால் ஏற்படுவதே அது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் நகர்வதாகத் தோற்றமளிக்கிறது.

இது காட்சிப்பிழை அல்லது பூமியின் இடமாறு தோற்றப்பிழை. பூமி தெற்கு-வடக்காகச் செல்வதே உண்மை. டிசம்பர் 21-ல் நீள்வட்டப் பாதையில் ஆறுமாதப் பெயர்ச்சியை முடித்து. சூரியனுக்கு மறுபுறம் திரும்பி சுழன்று பெயர்ச்சி அடையும். அப்போது பூமி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும். ஆனால் நமக்கு சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லுவதைப்போல் தெரியும்.




மாயன் காலண்டரில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 ஆம் தேதி சூரியன் வடக்கில் திரும்புவதையும், ஜுன் 21 ஆம் தேதி தெற்கில் திரும்புவதையும் குறிப்பிட்டுள்ளனர்.




பொதுவாக மார்ச் 21 செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில் இரவும் பகலும் சமமாக இருக்கும், ஜுன் 21, டிசம்பர் 21 ஆகியவை, பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றித் திரும்பும் நாட்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வு என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சாஸ்திரங்கள் கூறுவதை அறிவியல் மிகத் தெளிவாக விளக்குவதை நாம் அறிந்துகொள்ளலாம்.




தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனிடமிருந்து ஒருவிதமான சூட்கம சக்திகள் வெளிப்படுவதாகவும், பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும் என்றும், உயிர்களுக்குத் தேவையான ஆதாரசக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவென்றும் வேதங்கள் கூறுகின்றன. ஆடி மாதம் பிறந்ததும் நீர் நிலைகளில் நீராடுவது போற்றப்படுகிறது.

ஆனால் முதல் மூன்று நாட்கள் ஆறுகளுக்கு தோஷமான நாளாகக் கருதப்படுவதால், அதன்பிறகு நீராடுவது நல்லதென்பர். ஆறுகளில் நீராடும்போது, ஆறு எந்த திசையிலிருந்து ஓடி வருகிறதோ அந்த திசையைப் பார்த்து நீராட வேண்டும். கோவிலில் உள்ள குளத்தில் நீராடும்போது வடக்கு திசை நோக்கி நீராட வேண்டும்.

 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,776
Location
Chennai
#2
ஆடி- பெயர் வந்தது எப்படி?





ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள், பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து. தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுடையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.


அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார். ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது.


தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டது; குளிர்ச்சியானது. அதன் காற்று உடல்நலத்தினைக் காக்கும். அதன் கசப்புத்தன்மை நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து வளமான உடல் ஆரோக்கியம் தரும். வேப்ப இலையின் கொழுந்தில் நம் உடலுக்குத் தேவையான சக்தி(புரோட்டின்) இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தினமும் காலை வேளையில் மூன்று, நான்கு வேப்பங் கொழுந்துகளை வெறும் வயிற்றில் மென்று சுவைத்தால் மருத்தவரிடம் செல்லு<ம் நிலை ஏற்படாது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. அதேசமயம், கசப்புச் சுவையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் ரத்தத்தின் வீரியம் குறைந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சித்த மருத்துவர் ஆலோசனைப்படி வேப்பங் கொழுந்தினைப் பயன்படுத்த வேண்டும்.


அம்மை நோய்க்கு அருமருந்தாக வேம்பு திகழ்கிறது. காய்ச்சலை குணப்படுத்தும் வேம்பு கஷாயம் இன்றும் மருத்துவ உலகில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதனால்தான் கிராமப்புறங்களில் வீட்டின் வாசல் முன்பு வேப்ப மரங்களை வளர்க்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் வேப்ப மரங்கள் வளக்கப்பட்டால் தூய்மையான காற்று கிடைக்கும்
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,776
Location
Chennai
#3
ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?


ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம், இது ஏன் தெரியுமா? .. ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும். இந்த முறையை எல்லாரும் பின்பற்றுவது நல்லது.
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,776
Location
Chennai
#4
ஆடியும் அம்மன் வழிபாடும்!





அனல் தணித்த அம்பிகை: பஞ்சபூதங்களை வணங்கிடும் வழக்கம் உள்ள மக்களால் மழைக்கு உரிய தெய்வமாகப் போற்றப்பட்ட தெய்வமே மாரியம்மன். சிறு மழை பெய்து பூமியில் வெப்பம் கிளம்பும் காலத்தில் பரவக்கூடிய நோயான அம்மை நோய்க்கும் இவளே காரணம் என்பது நம்பிக்கை. எனவே அம்மை நீங்கவும் மாரியம்மனை வழிபடுவர். மழை பொய்த்தாலும் அதிகம் பெய்து அழிவு செய்தாலும் மாரியம்மனையே வழிபடுகின்றனர். வேப்பமரத்தில் உறைபவளாதலால் வேப்பிலைக்காரி எனவும் அழைப்பர். மாவிளக்கு ஏற்றுவது, பொங்கலிடுவது, கூழ்வார்ப்பது, முளைப்பாரி எடுப்பது, கரகம் சுமப்பது, பால்குடம் எடுப்பது போன்றவை மாரியம்மனுக்கு உரிய பிரார்த்தனைகள்.


திருவள்ளூர் மாவட்டத்தில் ஓதப்பை கிராமத்தில் கோயில் கொண்டுள்ள அம்மன், தனியாவனநாயகி இப்பகுதி காடாக இருந்த காலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் போனபோது அம்பிகையை வேண்டிட, பெரும் மழைபெய்து தீ அணைந்ததாம். தணியாத வனத்தின் நாயகி என்று அப்போது ஏற்பட்ட பெயர். இப்போது தனியா வனத்து நாயகி என்றாகியிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த அம்மனை வேண்டுவதால் திருமணத்தடை நீங்கும். குழந்தைவரம் கிட்டும், வாழ்வில் நன்மைக்ள் நடக்கும் என்பது நம்பிக்கை. தனியா வனத்தம்மன் இப்பகுதியின் எல்லை தெய்வமாகவே போற்றப்படுகிறாள்.


இரட்டை மாரியம்மன் ஆட்சி செய்யும் தலங்களில் அந்த தெய்வங்கள் சகோதரிகளாகக் குறிப்பிடுவதுண்டு. அந்த வகையில் புதுக்கோட்டையில் அருளும் நாடியம்மனும் சிறிய நாடியம்மன், பெரிய நாடியம்மன் என இரு வடிவாக வணங்கப்படுகிறாள். அக்காள், தங்கை மாரியம்மன் என்றழைக்கின்றனர் பக்தர்கள். நாடிவருவோர்க்கு அருள்வதால் நாடியம்மன் என்ற பெயர் வந்ததாகச் சொல்கின்றனர்.


வளம் சேர்ப்பாள் வராஹி: ஆடி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி. இது வாராஹி நவராத்திரி யாக தேவி உபாசகர்களால் கொண்டாடப்படுகிறது. பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, வாராஹி, போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாசேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ முதலான நாமாக்களைக் கூறி வாராஹியை வழிபட நம்முடைய துயர்கள் யாவும் தூசாய்ப் பறந்துவிடும். வாராஹி மாலை எனும் தமிழ்த்துதி, நிக்ரஹாஷ்டகம், அனுக்ரஹாஷ்டகம் என்னும் வடமொழி துதி ஆகியவை புகழ்பெற்றவை கோலாம்பா என்றும் வழிபடப்படுகிறாள் வாராஹி என்ன பேசுவது என நடுக்கம் வந்தால் வாராஹி என நினைத்தால் வார்த்தைகள் தானே வரும். காட்டுப்பன்றியின் முகத்தோடு அழகிய பெண்ணின் உடலுடன் எட்டுக் கைகளோடு காட்சி தருபவள் வாராஹி. இவள் ஏந்தியுள்ள கலப்பை, நான்கு விதங்களாகச் செயல்படுகிறது. முதலாவதாக கடினமான பூமியைப் பிளந்து, இரண்டாவதாக ஆழமாக உழுது மூன்றாவதாக மண்ணை மிருதுவாக்கி, கடைசியில் அதிக பயிர்கள் செழித்து வளர்ந்து, அதனால் நமக்கு உணவு கிடைக்கும்படி செய்கிறது. அதுபோல், நாம் உண்ட உணவு செரிக்காமலிருந்தாலும் அதையும் உழுது உணவைப் பக்குவப்படுத்தி மிருதுவாக்கி, திசுக்கள் வளர உதவி செய்கிறது.


அம்மனுக்கு வளைகாப்பு: திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர விழா மிகவும் விசேஷம். இந்த விழாவின் நான்காவது நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். அப்போது ஊறவைத்த பயறு வகைகளை அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வார்கள். பார்ப்பதற்கு கர்ப்பிணிப் பெண் போலவே காட்சி தருவாள் அம்பாள். இந்த வளைகாப்பு வைபவத்தை தரிசிக்கும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு பிள்ளைப்பேறு விரைவில் வாய்க்கும் என்பது நம்பிக்கை.


நம் ஐம்புலங்களாலும் நுகரும் இறுகிய மனதையும் தெளிவில்லா புத்தியையும் மிருதுவாக்கிமென்மையான நெஞ்சத்தில் அன்பு வளரவும், தெளிவடையும் புத்தியில் இறை உணர்வு வளரவும் வழி வகுக்கிறது. மே<லும் பல பிறவிகளின் கர்ம வினையால் கெட்டிப்பட்ட ஆன்மாவை பூமியில் புதைந்துள்ள கிழங்கைக் கலப்பையால் அகழ்ந்து மேலே கொண்டு வருவதைப்போல், ஞானக்கலப்பையால் நம் ஆத்மாவைத் தோண்டி ஞானம் ஏற்படும்படியும் செய்கிறது.


லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்துக்கும் தலைவிதான் தண்டநாதா எனபக்தர்களால் போற்றப்படும் வாராஹி தேவி, மந்திர சாஸ்திரம் அறிந்தவர்களால் பல்வேறு வடிவங்களில் வழிபடப்படும் வாராஹி. லலிதா தேவியின் ஸ்ரீபுரத்தின் 16-வது பிராகாரமான மரகத மணியாலான பிராகாரத்தில் வசிப்பவள். மகாபத்மாடவீ எனும் கோடிக்கணக்கான தாமரை மலர்கள் பூத்த தடாகங்கள் உள்ள அந்தப் பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில் சர்வாலங்கார பூஷிதையாக அருள்பவள். ஆராதனைக்குரியதும், அமைதி, வளம், ஆரோக்கியம் போன்றவற்றைத் தரக்கூடிய வளமான பகுதியானதுமான அப்பகுதியில் வசிப்பதால் வாராஹி தன்னை வழிபடுவோரின் வாழ்வையும் வளம் கொழிக்கச் செய்கிறாள்.


இத்தேவியின் நிவேதனத்தில் பூமக்கடியில் விளையும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும், வெங்காயமும் சேர்த்த பலகாரம் இடம் பெற வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. பூஜை முறை இதைத்தவிர சர்க்கரைப்பொங்கல், வெல்லம் சேர்த்த பாயசம், மிளகு, சீரகம் கலந்த தோசை, தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்ந்த ஆமைவடை, வாசனைப் பொருட்கள் சேர்த்த எருமைப்பால், எருமைத் தயிர், எள்ளுருண்ø, தயிர்சாதம், மொச்சை சுண்டல், தேன் போன்றவையும் இவளுக்கு உரிய நிவேதனங்கள். இந்த தேவிக்குரியது இரவு நேர பூஜை வெண்தாமரையும், செந்தாமரையும் இவளுக்கு உகந்த மலர்கள்.


வழக்குகளிலிருந்து விடுபட, மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவளருள் உதவும். எலும்பிற்கு அதிதேவியான இவள் கோபமுற்றால், வாதமும் பித்தமும் ஏற்படும். மயில் தோகை வசிறியால் விசிறி பிரார்த்தனை செய்து, முறுக்கு, வெள்ளரிக்காய் நிவேதனம் செய்து, மக்களுக்கு விநியோகித்தால் நலம் பெறலாம். பஞ்சமி நாளில் தேங்காயை இரண்டாக உடைத்து அந்த மூடிகளில் நெய் ஊற்றி விளக்கேற்றி இவளை வணங்கினால், கேட்ட வரங்களைப் பெறலாம்.


மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி தமிழ்மாதப் பெயர்களில் வீதிகள்அமைந்துள்ளன. ஆனால் ஆடி வீதி மட்டுமே கோவிலுக்குள்ளேயே அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவுக்கு ஆடிமுனை கொட்டு என்று பெயர்.


ஆடி மாதத்தில் கருடபஞ்சமி வருகிறது. மஞ்சள் பொடியினால் அம்மவ் முகம்போல் செய்து, உடன்பிறந்த சகோதரர்கள் நன்றாக இருக்கவேண்டி கொண்டாடப்படும் ஒரு பண்டிகை இது. அன்று தன்னைவிட பெரியவர்களிடம் ஆசிகளைப் பெறுவதோடு, சிறியவர்களுக்கு அன்போடு பணமோ, புத்தடையோ தருவார்கள்.


ஆடி மாதத்தில் வரும் ஆஷாட ஏகாதசி அன்று, பண்டரிபுரம் விட்டலர் கோயிலிலிருந்து ஸ்ரீஞானேஸ்வர மாவுலியின் பாதுகைகளைச் சுமந்துகொண்டு பல்லக்கு பவனிவரும். தேஹுவிலிருந்து துக்காராம் பல்லக்கும், மே<லும் பல இடங்களிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட பல்லக்குகளும் பண்டரிபுரத்தில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.


ஆடி மாத சுக்லபட்ச பஞ்சமியன்று நாக பஞ்சமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. அனந்தன் என்கிற நாகமாக இருந்து இந்த பூமியைத் தாங்கும் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து நோற்கும் விரதமாகும். அன்றைய தினம் கோயில்களில் இருக்கும் அரசமரத்தடி நாகர்களுக்குப் பாலூற்றிப் பூஜித்தால் மக்கட்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.


ஆடி அமாவாசையன்று மாத்வ வகுப்பினர். கண்டன பூஜை என்னும் பதிபூஜை செய்கிறார்கள். பண்டிகை தினத்தன்று களிமண்ணால் பார்வதி பரமேஸ்வரர். லக்ஷ்மி-மகாவிஷ்ணுபோல தூண்கள் செய்து. செம்மண் பூசி பலவித அலங்காரங்கள். நைவேத்தியங்களோடு மிக விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். பூஜையில் மஞ்சள் கயிறு வைத்துக் கையில் கட்டிக்கொண்டு காத கடுபு (பொரித்த கொழுக்கட்டை) நைவேத்தியம் செய்வார்கள்.


ஆடிப்பூரம் அன்று வைணவத் திருக்கோயில்களில் கோதை நாச்சியாரின் அவதார நாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இதேபோல் சிவன் கோயில்களில் அம்பிகையின் வளைகாப்பு விழாவை விமரிசையாகக் கொண்டாடுவர்.


ஆடி மாத வளர்பிறை ஏகாதசி அன்று விரதமிருந்து தீபதானம் செய்வது நல்லது. ஆடி மாத தேய்பிறை ஏகாதசி விரதமிருந்து குஷ்ட ரோகத்தையே அகற்றக் கூடியதாகும்.


ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் நோற்கப்படும் விரதம் மங்களகவுரி விரதம், திருமணமான பெண்கள் புகுந்த வீட்டில் செய்யக்கூடிய விரதம் இது. திருமணமாகாத பெண்கள் பிறந்த வீட்டில் இந்த விரதத்தைச் செய்து பிறகு புகுந்த வீட்டிலும் செய்யலாம். இதில் கவுரி பூஜை விசேஷம். அனைத்துவிதமான மங்கலங்களையும் அளிக்கக்கூடிய விரதம் இது.


கொங்கு நாட்டுப் பெண்கள் ஆடிப் பதினெட்டு அன்று கன்னிமார் படையல் பூஜையை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இதற்கென்றே விற்கப்படும் பொருட்களை வைத்து, ஏழு கூழாங்கற்களை சப்த கன்னிகைகளாக அலங்கரித்து ஆவாகனம் செய்து, பொங்கல் நைவேத்தியத்துடன் பூஜை செய்வார்கள்.

 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,776
Location
Chennai
#5
ஆடியும் அம்மன் வழிபாடும்!

கும்பகோணத்திலிருக்கும் மகாமகக் குளம் மிகவும் சக்திவாய்ந்தது. பிரசித்தி பெற்றதும்கூட, முப்பத்து முக்கோடி தேவர்களும் நீராடும் அந்தக் குளத்தில் ஆடிப்பெருக்கு அன்று காவிரி நதியின் ஊற்றானது குளத்தின் 18 படிகளைத் தாண்டி, பக்தர்களின் நைவேத்தியங்களை ஏற்றுக்கொள்வது மிகவும் வியப்பான காட்சியாகும்.



ஆடிப்பூர விழாவன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 ஆம் நாள் பஞ்ச கருட சேவை சிறப்பாக இருக்கும். 7-ஆம் நாள் ஸ்ரீ ஆண்டாளின் மடிமீது ஸ்ரீரங்கமன்னார் தலைவைத்துப் படுத்திருக்கும் சயனக் கோலத்தை தரிசனம் செய்தால் மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.


ஆடி மாதத்தில் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஆண்டாளுக்கு ரோஜாப்பூ மாலை சாற்றி வழிபட்டால் திருமணம் கைகூடும். கண்ணாடி வளையல்களை மாலையாகச் சாற்றி வழிபட்டால் மறுவருடமே மழலை பாக்கியம் உண்டாகும்.


ஆடிப்பூரத்தில் தோன்றியவர் வீரபத்திரர். தட்சன் வேள்வியை அழிக்க உக்கிரமாகத் தோன்றி இவருக்கு வெற்றிலை மாலை சாற்றி கோபத்தைத் தணித்தால் வெற்றியையும் செல்வத்தையும் தருவார்.
உத்தமர் கோயில்-பிச்சாண்டார் கோயிலில் அருள்பாலிக்கிறாள் சவுந்தர்ய பார்வதி அம்மன். ஆடிப்பூரத்தன்று முளைகட்டிய பயிறை அம்மனின் வயிற்றில் வைத்துக் கட்டி பின்னர் பிரசாதமாக விநியோகிப்பார்கள். அந்த பிரசாதத்தை பக்தியுடன் சாப்பிட்டால் நிச்சயம் சந்தான பாக்கியம் ஏற்படும்.


ஆடி மாதத்தில் கொழும்பு நகரில் ஆடிவேல் எனப்படும் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்து மக்களால் நடத்தப்படும் குதூகலமான இந்த ஆடிவேல் விழா நான்கு நாட்களுக்கு விமரிசையாக நடைபெறுகிறது. ஆரம்பத்தில் கம்பளை, காலி, ரத்தினபுரி, வதுளை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து கதிர் காமத்துக்கு வேல் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அரசாங்கம் தடைவிதிக்க, அப்போதிலிருந்து கொழும்பிலிருந்து கொண்டுபோகப்பட்ட வேலை வைத்து கதிர்காமத்திலேயே ஆடி வேல் விழா கொண்டாடப்படுகிறது.


கேரள நாட்டில் ஆடி மாதத்தில் பகவதி சேவை என்னும் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடுவர். வீடுகளில் நெய் விளக்கேற்றி, பகவதியம்மன் படம் அமைந்திருக்கும் திசை வரை அழகிய மலர்களால் அலங்கரித்து, கோதுமை நெய் பாயசம் செய்து நைவேத்தியம் செய்வார்கள்.
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,776
Location
Chennai
#6
ஆடியும் வழிபாட்டின் சிறப்பும்!



ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களை சரம்சரமாகக் கோர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்வர். மூன்று நாட்கள் கழித்து அந்தக் கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக வழங்குவர். இதனால் சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர். வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் மக்கட்செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல அழகான குழந்தை செல்வம் கிட்டும்.


ஆடி மாதத்தில் பூர நட்சத்திரம் இணையும் நாள் மிகவும் சக்தி கொண்டது. எனவே இந்நாளில் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆடிப்பூர நன்னாளில்தான் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் துளசி வனத்தில் அவதரித்தாள். பூமாதேவி அவதரித்த ஆனந்தமான மாதம் ஆடி ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சந்நிதிமுன் நெய் விளக்கேற்றி வழிபட்டாலும் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டாலும் தோஷங்கள் விலகும்; சந்தோஷமான வாழ்வுகிட்டும்.


ஆடி மாத வளர்பிறை துவாதசியில் மகாவிஷ்ணுவை எண்ணி விரதமிருந்தால் செல்வ வளம் பெருகும். ஆடி மாத வளர்பிறை தசமியில் திக்வேதா விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அன்று திக்தேவதைகளை அந்தத்தத் திசைகளில் வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்.


ஆடி மாத வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தால், பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் அன்று. பசுமாட்டிற்கு அகத்திக்கீரையை ஆகாரமாகக் கொடுத்தால் தீவினைகள் நீங்கும்.


பல சிறப்புகளைப் பெற்ற இந்த ஆடி மாதத்தில் கிராமப்புறக் கோயில்களில் அம்மனுக்குக் கூழ்வார்க்கும் விழா நடைபெறுகின்றது நம் உடல்நலத்தின் வளம் கருதியே ஆடிக்கூழ் நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆன்மிகமும் அறிவியலும் கூறுகின்றன.


ஆடி மாதத்திற்குமுன் வெப்பத்தின் சூழ்நிலையிலிருந்த நம் உடல் பருவ மாற்றத்தினாலும், காற்று திடீர் மழையாலும் பாதிக்க வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க நோய் எதிர்ப்புசக்தி உடலு<க்குத் தேவை.


அம்மனுக்குப் படைக்கப்படும் கூழ் பெரும்பாலும் கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களின் மாவினால் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். கேழ்வரகு நோய் எதிர்ப்பு சக்தியினை வழங்குவதுடன் உடலு<க்கு வலிமையைத் தரும். இந்தக் கூழ் எளிதில் ஜீரணமாகும், புதுப்பானையில் கூழ் தயாரிக்கப்பட்டு. அந்தப் பானையின் வாய்ப்பகுதியில் வேப்பிலைக் காப்பிட்டு அம்மனுக்குப் படைக்கும்போது, அதில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேப்பிலையின் சக்தி கலக்கிறது. மே<லும், அம்மன் அருள்பார்வையில் அதன் சக்தி பலமடங்காகப் பெருகுகிறது. இந்தக் கூழ் பிரசாதத்தினை விரதமிருந்து அருந்துகையில் நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் பெருகும். இதனால் ஆடி மாதத்தினைத் தொடர்ந்து பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களின் தாக்கம் தடுக்கப்படும்.


ஆடி மாதத்தில் சூரியனின் தாக்கம் குறைவாக இருக்கும் கோள்களின் தலைவனாகத் திகழும் சூரியன் சிவபெருமானின் அம்சமாகத் திகழ்கிறார். சந்திரன், அம்பிகையின் அம்சமாக விளக்குகிறார், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பிறந்ததும் சந்திர ராசியான கடகத்திற்கு சூரியன் பிரவேசிக்கிறார். அப்போது சந்திரனின் குளிர்ச்சியானது சூரியனையும் கவர்ந்து குளிர்விக்கிறது இதனால் வெய்யிலின் தாக்கம் குறைகிறது. இந்த மாதத்தில் சூரியனைவிட சந்திரனுக்கே ஆதிக்க நிலை வந்துவிடுவதால் சக்தியின் ஆற்றல் ஆடி மாதத்தில் அதிகப்படியாக உள்ளது. ஆடியில் மட்டும் சிவன், சக்திக்குள் அடக்கமாகி விடுவதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே அம்மன் சந்நிதியில் ஆடித்தபசு ஆடிப்பூரம் வளைகாப்பு வைபவம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.


ஆடி மாதத்தில்தான் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறார்கள். இம்மாதத்தில் ஆந்திர கர்நாடக மாநிலங்களில் கருடபஞ்சமி பூஜை கொண்டாடப்படுகிறது. இதனால் பிதுர் சாபம் நீங்கி, புத்திர பாக்கியம் உண்டாவதாக நம்பப்படுகிறது. இதேபோல் நாகபஞ்சமி பூஜை வடநாட்டில் பிரசித்தம்.


ஆடி குறித்து தமிழகத்தில் பலவிதமான பழமொழிகள் உள்ளன. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பர். ஆனால் அம்மி பறக்காது. இம்மாதத்தில் குளிர்ஞூத காற்று வீசும். வெப்ப நோயான அம்மை என்னும் நோய், இந்தக் காற்றுபட்டால் விரைவில் குணமாகும். ஆடிக்காற்றில் அம்மையும் பறக்கும். என்பதுதான் மருவி, அம்மி பறக்கும் என்றாகிவிட்டது.


ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும் என்பது ஒரு பழமொழி இது பெரும்பாலும் பொய்ப்பதில்லை. ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப்பிடி என்ற பழமொழிக்கு ஏற்ப புதுமாப்பிள்ளைக்கு அன்றைய தினம் தேங்காய்ப்பால் கொடுத்து உபசரிப்பார்கள்.


ஆடிக்கு அழைக்காத மாமியாரைதய தேடிப்பிடி ஆடிப்பட்டம் தேடி விதை ஆடித்தேரைத் தேடி தரசி ஆடிச் செவ்வாய் தேடிக் குளி என்றெல்லாம் பழமொழிகள் பல உள்ளன. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் வெள்ளி போற்றப்படுவதுபோல், ஆடி வெள்ளியில் நடைபெறும் குத்துவிளக்கு பூஜையும் மிகவும் போற்றப்படுகிறது. ஆடித்தபசு விழாவும், ஆடிப்பூரமும், ஆடிப்பதினெட்டும், ஆடி இருபத்தெட்டும் அவ்வையார் விரதமும் ஆடியில் போற்றப்படுகின்றன.


ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்பட்டாலும் ஆடிக் கிருத்திகை முருகப்பெருமானுக்குரிய திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலையில் பிதுர் பூஜைகளுக்கான பூஜை செய்வது அவசியம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.


பல பெருமைகளைப் பெற்ற இந்த ஆடி மாதத்தில் கோயில்களில் அற்புதமான வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக சேலத்தில் ஆடி மாதம் நடக்கும் செருப்படித் திருவிழா, தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் காணமுடியாத விழாவாகும். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, மாரியம்மன் கோயிலுக்கு வருவார்கள். கோயில் பூசாரி அவற்றுக்கு பூஜை செய்வார். பிறகு, அந்த செருப்பு, துடைப்பம், முறம் ஆகியவற்றை எடுத்து பக்தர்மீது மூன்றுமுறை மெல்ல மெல்ல நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழா.


மக்களுக்குப் பலவிதங்களில் பயன்படும் நதிகளுக்கு ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதை ஜலப்பிரவாஹ பூஜை என்பர். குறிப்பாக ஆடி பதினெட்டு அன்று காவேரி அன்னைக்கு மசக்கை என்ற ஐதீகத்தில், காவேரிக்கரையோரம் வாழும் மக்கள் அன்று காலை நதிக்குச் சென்று நீராடிவிட்டு பூஜையை ஆரம்பிப்பார்கள். பூஜையில் பெரிய தலைவாழை இலையை நதிப்படிக்கட்டில் வைத்து, அதில் காதோலை கருகமணி, எலுமிச்சம்பழம், வெற்றிலைப்பாக்கு, பழங்கள், காப்பரிசி, மஞ்சள் தடவிய நூல், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்து விளக்கேற்றி, தேங்காய் உடைத்து பூஜித்ததும் காவேரி ஆற்றில் தாங்கள் படைத்த பொருட்களை அர்ப்பணிப்பார்கள். பிறகு மூத்த சுமங்கலியிடம் வாழ்த்து பெற்று, பூஜையில் வைத்த மங்கள நாணான மஞ்சள் நூலினை கழுத்தில் அணிந்துகொள்வர்.



 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,776
Location
Chennai
#7
ஆடியும் வழிபாட்டின் சிறப்பும்!

அன்று ஸ்ரீரங்கம் கோயிலில் அருள்புரியும் உற்சவரான நம்பெருமாள் கோயிலின் தென்புறத்தில் ஓடும் காவேரித் தாயாருக்கு மரியாதை செய்ய அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அப்போது அவருடன் கோயில் யானைமீது காவேரித்தாயாருக்கு சீர்வரிசைகள் வரும்.


படித்துறையில் சிறிய கோயிலில் எழுந்தருளியுள்ள காவேரித் தாயாருக்கு அவற்றை சமர்பித்து பூஜித்து, பிறகு பூஜித்த பொருட்களை அங்கு ஓடும் காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் அங்கு எழுந்தருளும் பெருமாள் முன்னிலையில் நடைபெறும். ஸ்ரீரங்கம் பெருமாள் காவேரித் தாயாருக்கு சீர்வரிசை அளித்ததும். அங்கிருந்து புறப்பட்டு வெளி ஆண்டாள் சந்நிதி வந்து ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றி அணிந்து கொண்டு கோயிலுக்குச் செல்வார்

கிராமப்புறங்களில் காவல் தெய்வமாக இருக்கும் எல்லைச் சாமிகளுக்கும், மதுரை வீரன், கருப்ண்ண சாமிக்கும் அந்த ஊர் மக்கள் ஆடி பதினெட்டு அன்று கிடா வெட்டி நேர்த்திக் கடன் செய்வர். சிலர் தங்கள் குலவழக்கப்படி ஆடியில் ஏதாவது ஒரு நாளில் இந்தப் பூஜை செய்வது உண்டு. அங்கே ஓரிடத்தில் உணவு தயாரித்து, எல்லைச் சாமிகளுக்குப் படைத்து விருந்துண்பர். சில ஊர்களில் மாரியம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா நடைபெறும். இதற்காக முன்கூட்டியே கையில் காப்புக் கட்டிக் கொண்டு விரதம் கடைப்பிடித்து, தீக்குண்டத்தில் நடந்துசென்று தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதையும் காணலாம். பல பெருமைகளைப் பெற்ற ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் ஆடித்தபசு விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் விழாவென்று இதனைப் போற்றுவர். ஆடி மாத ஏகாதசி, துவாதசி நாட்களில் அரசமரத்தைச் சுற்றி வலம்வந்து வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் இருந்தால் நீங்கும். ஆண்களுக்கு சுக்ல விருத்தி உண்டாகும். ஆடி மாதப் பவுர்ணமி அன்று வியாச பூஜை சிறப்பிக்கப்படுகிறது. அன்று தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை நினைத்து வழிபட்டால் கல்வியிலும் பதவியிலும் சிறந்து விளங்கலாம்.


ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் பெருமாளின் வாகனமான கருடன் அன்று வானில் பறக்கும் கருடனை தரிசிப்பது போற்றப்படுகிறது. சந்திரமூர்த்தி நாயனார், கலியநாயனார், புகழ்ச்சோழ மூர்த்திநாயனார் ஆகியோர் ஆடி மாதத்தில் அவதரித்தவர்கள். ஆளவந்தார், புண்டரிகாஷர், கந்தாடை தோழப்பர், பத்ரிநாராயணர் போன்ற ஆழ்வார்களும் ஆடி மாதத்தில்தான் அவதரித்தார்கள். ஸ்ரீ ஆண்டாளுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தன்று விழா நடைபெறுவது போல், கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோயிலிலும் ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். சிறப்பான பல பெருமைகளைப் பெற்ற ஆடி மாதத்தில் திருமணம் மட்டும் நடைபெறுவதில்லை. தேவர்களின் இரவுப் பொழுது காலமாகக் கருதப்படுவதால் அவர்களைத் திருமணச் சடங்குகளின் போது அழைப்பது உகந்தது அல்ல என்று சாஸ்திரம் கூறுகிறது. ஒரு பெண் ஆடி மாதம் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரையில் வெய்யில் பிரசவத்திற்கு உகந்ததாக இருக்காது என்பதால் ஆடியில் திருமணங்கள் நடைபெறுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆடியில் நடைபெறும் தெய்வ வழிபாடுகள் மற்றும் விழாக்களில் கலந்து கொண்டால் வாழ்வில் வசந்தம் என்றும் வீசும் என்பது முதுமொழியாகும்.
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,776
Location
Chennai
#8
அருளும் பொருளும் கிட்டச் செய்யும் ஆடி மாதம்!





வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில்தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள், வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாகக் கிடைக்கும். பிரான வாயு அதிகமாகக் கிடைக்கும் மாதமும் இதுதான். இந்த சமயத்தில் ஜீவாதார சக்தி மிகுந்து காணப்படுவதால்தான் விவசாயத்தில் விதை தெளிப்புக்கு ஏற்ற மாதமாக கருதப்பட்டு ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி வந்தது.


நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதன்படி பார்த்தால் ஆடி மாதத்தில் தேவர்களின் மாலை நேரம் தொடங்குகிறது. அதனா<லும் பூஜைகள் ஆராதனைகள் மிகுந்திருப்பது இயல்புதானே?


சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான 31 நாட்கள், 28 நாழிகை, 12 விநாடி கால அளவைக் கொண்டது ஆடி மாதம் எனவே இதை கற்கடக மாதம் என்றும் சொல்வதுண்டு. கடக ராசி சந்திரனுக்கு உரியது. சிவ அம்சமான சூரியன். சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டில் இருப்பதால் (ஒன்று சேர்வதால்) ஆளுமை பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலம் அதிகரிக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் சிவம் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார். எனவே சிவனைவிட அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஐதிகம். அதனாலேயே இந்த மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதமாகத் திகழ்கிறது.


ஒரு கல்ப காலத்தில் ஆடி மாதம் ஒன்றில்தான் பார்வதி தேவி, மலையரசன் மகளாகப் பிறந்தாள் என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மை அவதரித்தது ஆடி மாதத்தில்தான். இந்த மாதத்தில்தான் வேம்பும் எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? பக்திபூர்வமான இந்தச் செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது!


ஆடி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள் பல இந்தக் காலகட்டத்தில் பரவும் வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினிகள். பலர்கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்குப் படைக்கப்பட்டு பிரசாதமாக இவை தரப்படுவதால். நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால்தான் ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது.


ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம். ஆடிப்பவுர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.


ஆடிசெவ்வாய்: ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சளை பூசிக்குளி என்பது பழஞ்சொல். இதிலிருந்தே ஆடிச் செவ்வாயன்று எண்ணெய் தேய்த்து நீராடுதலில் முக்கியத்துவம் விளங்கும். அவ்வாறு செய்தால் வீட்டில் மங்கலம் தங்கும் என்பது மரபு. தமிழகத்தின் தென் பகுதிகளில் ஆடிச் செவ்வாய் அன்று அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடிச் செவ்வாயில் ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அன்று முழுவதும் கைக்குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் இடம் கிடையாது. இரவு பத்து மணியளவில் பூஜை துவங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும் அம்மனின் கதையையும் மற்றவர்களுக்குக் கூறுவார். பின்னர் பூஜை நடக்கும். அன்று உப்பில்லாமல் அரிசி மாவில் செய்யப்படும் கொழுக்கட்டைகளே பிரசாதம். விரதமிருக்கும் பெண்கள் மட்டுமே அதை உண்ணலாம். மறு நாள் காலையில்தான் ஆண்கள் வீட்டுக்குள் வரலாம். இந்த பூஜை பிரசாதங்களை ஆண்கள் கண்டிப்பாகப் பார்க்கக்கூடாது என்பது எழுதாத சட்டமாக இருந்து வருகிறது. இந்த பூஜையை கடைப் பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்பர். மணமாகத கன்னியர்க்கும், குழந்தையில்லா தம்பதிகளுக்கும் இந்த பூஜை ஒரு வரப்பிரசாதம்.
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,776
Location
Chennai
#9
ஆடி வெள்ளி: இந்த நாளன்று மஞ்சள்தேய்த்து நீராடி, மாக்கோலம் போட்டு திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றி லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். வயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் குங்குமம் அட்சதை, சீப்பு, தோடு, கண்ணாடி, வளையல், ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சிணையுடன் வைத்துக் கொடுத்து அன்னமிடல் வெகு சிறப்பான பலன்தரும். ஏன் ஒன்பது பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதற்கு தேவி பாகவதம் விளக்கம் அளிக்கிறது. அம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரிணி, கலவிகாரிணி, காளி, ரவுத்திரி, சேட்டை, வாமை ஆகிய நவ சக்திகளைச் சொல்வர். இந்த நவசக்தியரைக் குறிக்கும்வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனிதப் பொருட்கள் வைத்துக் கொடுத்தல் வழக்கத்துக்கு வந்தது. ஆடி வெள்ளிடீ அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும். ஒன்பது வகையான மலர்களால், ஒன்பது சக்திகளையும் ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே நவசக்தி பூஜை எனப்படும். இது மிகுந்த பலனளிக்கக் கூடியதாகும். சக்தி பீடங்களில் ஒன்றெனக் கருதப்படும் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் ஆடி வெள்ளி மிகவும் விசேஷமாகும். இங்கு அம்மன் மனைவியாக இருக்க, ஈசனே குருவாக இருந்து உபதேசம் செய்தருளினார். அதனால் பள்ளிக் குழந்தைகள் இங்கு ஆடி வெள்ளி அன்று வேண்டிக் கொண்டால் ஞாபக சக்தி மிகுந்து வரும். ஆடி வெள்ளி ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்ற, வாழ்வு ஒளி பெறும்.


ஆடிப் பவுர்ணமி(22.7.13): சங்கரன் கோயில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்கிரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த நாளில் தான் வருகின்றன. நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் ஆடித் தபசு விழா மிகவும் சிறப்பாக பக்தியோடு பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பதினோராவது நாள், ஆடித்தபசு, இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். ஆடித் தபசுக் காட்சியைக் கண்டால் பாவங்கள் அனைத்தும் கரைந்து மனது லேசாகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே உள்ள உறையூரில் எழுந்தருளியுள்ள பஞ்சவர்ணேஸ்வரர் பெருமான், ஆடிப் பவுர்ணமி நாள் ஒன்றில்தான் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சி அளித்தாராம். ஹயக்ரீவ அவதாரம்: வேதங்களைக் கடத்திப் போய், பிரம்மனின் படைப்புத் தொழிலை ஸ்தம பிக்கச் செய்தனர் மது, கைடபர் என்ற இரு அசுரர்கள். அதனால் பாதிக்கப்பட்ட பிரம்மா, மஹா விஷ்ணுவிடம் முறையிட்டார். கடுங்கோபம் கொண்ட திருமால், குதிரை முகத்துடன் ஹயக்ரீவராகத் தோன்றி கடலின் அடியிலிருந்த அசுரர்களோடு போரிட்டு வேதங்களை மீட்டு வந்த நாள் ஆடிப் பவுர்ணமி, போர் முடிந்த பின்னரும் தணியாத ஹயக்கிரீவரின் சீற்றத்தைத் தணிவிக்க, மலர்மகள் அவரது மடியில் சென்றமர்ந்து அவரைத் துதித்தாள். அன்றுமுதல் லட்சுமி ஹயக்கிரீவ வழிபாடு பிரபலமடைந்தது. வேதங்களை மீட்டு வந்ததால் கல்விக்கு அதிபதி இவர், நிறைய மதிப்பெண்கள் பெற, மாணவர்கள் ஹயக்கிரீவரை வணங்கிவிட்டு முழுமையான முயற்சியுடன் படித்தால் நிச்சயம் பலன் கிட்டும்.


ஆடிப்பூரம்(9.8.13): ஆடி மாதம் பூர நட்சத்திரத் தன்று கொண்டாடப்படுவதே ஆடிப் பூரமாகும். இது அம்மனுக்கு மிகவும் உகந்த நாள். இந்த விழாவின் விசேஷம். அன்று அம்மனை கர்ப்பிணியாக ஆவாகனம் செய்வதுதான். உலகத்தின் தாயான அன்னைக்கு அவள் பிள்ளைகளான நாம் வளைகாப்பு நடத்தி மகிழும்நாளே ஆடிப்பூரம். நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை அம்மன் வயிற்றில் கட்டி கர்ப்பிணி போலத் தோன்றச் செய்வார்கள். இவ்வாறு செய்தால் வம்ச விருத்தியும் நல்ல குழந்தைகளும் தோன்றுவர் என்கின்றன புராணங்கள். கர்ப்பிணிக்கு வளைக்காப்பு அவசிய மல்லவா? அதனால் நலங்குப் பாடல்கள் பாடியபடி அம்பிகைக்கு வளையல்கள் அடுக்கப் படுகிறது. பின்னர் அந்த வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தேவியின் கரத்தில் தவழ்ந்த வளையல்களை இல்லத்தில் வைத்திருந்தால் வாழ்க்கையே ஆனந்தமயமாகும். பெண்கள் தீர்க்க சுமயங்கலியாக இருப்பர். குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கைகள் நிலவுகின்றன. ஆடி வெள்ளியில் மாவிளக்குப்போடும் வழக்கமும் பலரிடம் இருக்கிறது. இவ்வழக்கம் செல்வவளம் சேர்க்கும் என்பது நம்பிக்கை. நினைத்த காரியம் ஈடேறவும் மாவிளக்குப் போடும் வழக்கம் இருக்கிறது.


ஆடியில் மலர்ந்த அரும்பு: திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே என்று போற்றப்படும் ஆண்டாள், திருஅவதாரம் செய்தது ஆடிப்பூரத்தில்தான். எம்பெருமானின் பல்வேறு ஆயுதங்களே பூமியில் ஆழ்வார்களாக அவதரித்தபோது பூமாதேவியே திருமாலவனின் புகழ் பரப்ப ஆண்டாளாக துளசிச் செடியின் கீழ் அவதரித்தாள் ஓர் ஆடிப்பூர நாளில் அவளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் இதை திருவிழாவாகவே கொண்டாடுகிறார்கள். திருமாலே தனக்கு மணாள னாக வாய்க்க வேண்டும் என்று பாமாலைகள் புனைந்து விரதமிருந்தவள் கோதை தான் சூடியமாலையை மாலவனுக்கு அளிக்கும் பேறினைப் பெற்றவள். கோதை சூடிக் களைந்த மாலைகளே தமக்கு விருப்பம் என அந்த ஆண்டவனே உணர்த்திய பெருமைக்கு உரியவள்! ஆடிப்பூர நாளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். அந்த பூஜைகளில் ஏராளமான பெண்கள் தவறாமல் கலந்து கொள்வர். அவ்வாறு செய்தால் மனத்திற்கினிய கணவனோடு தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு மங்கல வாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.


ஆடிப்பெருக்கு(3.8.13): மழைக்காலம் தொடங்கி நதிகளில் புது வெள்ளம் பொங்கி வரும் சமயத்தில் வருடம் முழுவதும் வளமாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கொண்டாடப்படும் விழா இது. இவ்விழா பொதுவாக காவிரிக் கரையோரங்களிலேயே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று காவிரிக்கரையில் விளக்கேற்றி வைத்து. தலை வாழை இலையில் சித்ரான்ன வகைகளுடன் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், வளையல், பழம் போன்றவற்றை வைத்து காவேரி அம்மனுக்கப் படைத்து வழிபடுவார்கள். பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி அவற்றை ஆற்றில் விடுவார்கள். இதனால் ஆற்றில் இருக்கும் உயிர்களுக்கு உணவு கிடைக்கும் என்ற கருணை உணர்வே ஆதாரம் இதற்கு. மேலும் இயற்கைக்குத் தீங்கு செய்யாமல் அதனை ஒட்டியே வாழ்ந்த நம் முன்னோரின் பண்பாட்டுச் சிறப்பை விளக்குகிறது இப்பண்டிகை. உறவுகள் ஒன்றாக இருந்து கொண்டாடி மகிழ்வதால் ஒற்றுமை உணர்வும் வளர்கிறது. ஆடிப்பெருக்கு நாளில் எந்தத் தொழில் துவங்கினாலும் அது மேலும் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அம்மனுக்கு உரியதாகவும் அருளும் பொருளும் ஆனந்தவாழ்வும் தரக்கூடியதாகவும் உள்ள ஆடி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பூஜைகள், விரதங்களை தவறாமல் கடைப்பிடித்து எல்லா வளமும் நலமும் பெறுவோம்!
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,776
Location
Chennai
#10
திருமூர்த்திமலையில் ஆடிப்பெருக்கு விழா


உடுமலை: திருமூர்த்திமலையில், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட, பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமடைந்துள்ளன. உடுமலை திருமூர்த்திமலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், முதன்முறையாக ஆடிப்பெருக்கு விழா ஆக., 3, 4 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட உள்ளது. கண்காட்சி, நாட்டுப்புறக்கலைகள், அரசுத்துறை அரங்குகள், விளையாட்டுப்போட்டிகள் என இரண்டு நாட்களும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, வனத் துறை, இந்து அறநிலையத்துறை, உடுமலை ஊராட்சி ஒன்றியம், தளி பேரூராட்சி, சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, படகுத்துறை அருகிலுள்ள இடம் சமன் செய்யப்பட்டு, பந்தல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விழா நடக்கும் இரண்டு நாட்களும் திருமூர்த்தி அணையில் பரிசல் சவாரி செய்ய ஏற்பாடு செய்யப்படும். பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள் ளன. விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு இடங்களில் தகவல் பலகைகள் வைத்தல் ஆகிய பணிகளும் துவங்கியுள்ளன. காண்டூர் கால்வாய் பகுதியிலிருக்கும், ஊராட்சி ஒன்றிய மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வு மளிகைகளில் அடிப்படை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளன. ஐந்து அமைச்சர்கள் மற்றும் இதர உள்ளாட்சி பிரதிநிதிகள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். வாகனங்களை நிறுத்த தேர்வு செய்யப்பட்ட இடத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீன்வளர்ச்சித்துறை சார்பில் கண்காட்சி மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் விழாவிற்காக செய்யப்பட உள்ளன. ஆடிப்பெருக்கு திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட குழுவினர் திருமூர்த்திமலையில் முகாமிட்டுள்ளதால், விழாவிற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.