Why your first trimester is the most important - முக்கியம்...முதல் 3 மாதங்கள்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#1
முக்கியம்...முதல் 3 மாதங்கள்!

டாக்டர் கு. கணேசன்

பத்து மாதம் உன்னை சுமந்து பெத்தேன்’ என்று அம்மாக்கள் பெருமையாகக் கூறுவதைக் கேட்டிருப்போம். இது ஒரு பேச்சுக்குத்தான்; உண்மையில் இந்த 10 மாதம் ஒரு குழந்தையை அம்மா சுமப்பதில்லை.


கருப்பை ஒரு கருவைச் சுமப்பது மொத்தம் ஒன்பது மாதமும் ஒரு வாரமும்தான். இது கூட கடைசியாக மாதவிடாய்வந்த முதல்நாளிலிருந்து எண்ணப்படும் கணக்கு. இந்த ஒன்பது மாதங்களை மூன்று மூன்று மாதங்களாகப் பிரித்துக் கொள்கிறார்கள் மருத்துவர்கள். இந்த பருவத்தை டிரைமெஸ்டர்(Trimester) என்ற பெயரால் குறிப்பிடுவார்கள்.

முதல் மூன்று மாதங்கள் வரை முதல் டிரைமெஸ்டர், நான்காவது மாதத்திலிருந்து ஆறாம் மாதம் வரை ‘இரண்டாவது டிரைமெஸ்டர்’, ஏழாவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை ‘மூன்றாவது டிரைமெஸ்டர்’ என்று இந்த காலகட்டத்தைப் பிரிக்கலாம்.

இதில் கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை. கரு உருவாகி, கருப்பையில் நிலைக்கத் தொடங்கும் காலம் இது. மசக்கைதான் இந்த டிரைமெஸ்டரில் கர்ப்பிணிகளை அதிகம் படுத்தி எடுக்கும். அதை எப்படிச் சமாளிப்பது என்பதைசென்ற இதழில் பார்த்துவிட்டோம்.

அடுத்து, இந்தக் காலகட்டத்தில் கருப்பையில் கருவானது ரொம்பவும் ஆழமாக வேரூன்றி வளரத் தொடங்காத காரணத்தால், கரு கலைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். அதற்கு இடம் தந்துவிடாமல், உருவான கருவைப் பத்திரப்படுத்திப் பாதுகாப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.

தொற்றுநோய் கவனம்!

முதல் டிரைமெஸ்டரில் சளி, இருமல் ஏற்படாமல் உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, மாசுபட்ட காற்று, நீர்மூலமாக நோய்க்கிருமிகள் பரவும். எனவே, சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே அருந்த வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்
களுக்குச் செல்லக்கூடாது.

மக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்கம், சந்தை, மால்கள் போன்ற இடங்களுக்குப் போவதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். கூட்டமான இடங்களில் மற்றவர்கள் மூச்சுக்காற்று மூலம் நோய்க்கிருமிகள் மிக எளிதாகப் பரவ வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்கவே இந்த யோசனை.

சிறுநீர்ப்பாதைத் தொற்றுமுதல் டிரைமெஸ்டரில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அப்போது சிறுநீரை அடக்கக்கூடாது. சிறுநீர்ப்பாதைத் தொற்று வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம். உடல் சுத்தம் பேணுவதால் இதைத் தடுக்கலாம். அசுத்தமான கழிப்பறைகளைப் பயன்படுத்தக்கூடாது.

முக்கியமாக, பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்தால், கழிப்பறையில் தண்ணீர் அதிகம் ஊற்றிக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

வளர்ப்புப் பிராணிகளிடமும் கவனம்!
தாய்மையின் முதல் மூன்று மாதங்களில் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதையும் பராமரிப்பதையும் தவிர்ப்பது நல்லது.

செல்லப்பிராணிகளைத் தொடும்போதோ, குளிப்பாட்டும்போதோ அவற்றிலிருந்து கிருமிகள் பரவி, கர்ப்பிணிக்குக் காய்ச்சல், தும்மல், சரும ஒவ்வாமை நோய்கள் போன்றவை வந்தால், அது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். வயிற்றுப் பிரச்னைகள் வராமலிருக்க…முதலாம் டிரைமெஸ்டரில் கர்ப்பிணியின் வயிற்றில் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது.

சுத்தமான இடத்தில், சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும். வெளியிடங்களிலும் ஹோட்டல்களிலும் அடிக்கடி சாப்பிட்டால், உணவு நஞ்சாகி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற கோளாறுகள் ஏற்படும். இவை கர்ப்பிணியின் உடலில் நீரிழப்பை ஏற்படுத்திவிடும். கர்ப்பிணிக்குப் போதிய அளவு நீர்ச்சத்து எப்போதும் இருக்க வேண்டியது முக்கியம். எனவே, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளே பாதுகாப்பானவை.

பயணம் தவிர்!

முதல் டிரைமெஸ்டரின்போது, தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குண்டும்குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும்போது ஏற்படும் அதீத குலுங்கல்கள், வேகத்தடைகளில் தூக்கிப்போடுவது, மலை ஏற்றப்பயணங்களில் திடீர்திடீரென உடல்சாய்வது போன்றவை கர்ப்பிணியின் கருப்பையைப் பாதிக்கும். அப்போது கருகலையும் ஆபத்து நேரும்.

பொதுவாக கவனிக்க வேண்டியவைமுதல் டிரைமெஸ்டரில் உடல் சோர்வாக இருப்பது இயற்கை. தேவைப்படும்போதெல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நீண்டநேரம் நின்றுகொண்டு வேலைசெய்பவர்கள், அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்கவேண்டும். இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் இந்த முதல் டிரைமெஸ்டரில் மட்டுமாவது பணிநேரத்தை மாற்றிக்கொள்வது நல்லது.

கம்ப்யூட்டர்முன் நீண்டநேரம் அமர்வது நல்லது இல்லை. சேரில் நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்கிறவர்கள், சிறிய இடைவெளி
களில் கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு வர வேண்டும். சோர்வு ஏற்படுத்தக்கூடிய எந்த வேலையையும் செய்யக் கூடாது. உடலையும் மனத்தையும் தேவை
யில்லாமல் வருத்திக்கொள்ளக் கூடாது.

சுய மருத்துவம் வேண்டாம்!

சளி, காய்ச்சல் போன்ற சாதாரணப் பிரச்னைகளுக்காக மகப்பேறு மருத்துவர் அல்லாமல், பொது மருத்துவரிடம் ஆலோசனை கேட்க நேர்ந்தால், தாய்மை அடைந்திருப்பதைக் கட்டாயம் சொல்லிவிட வேண்டும்.

அப்போதுதான் அதற்கேற்ப மருந்துகளை மருத்துவர் எழுதித் தர முடியும். கர்ப்பிணிகள் சுயமாக மருந்து, மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் அது கருவில் வளரும் சிசுவைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

அடிவயிற்றில் வலி, ரத்தக்கசிவு அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். லேசாகத்தானே இருக்கிறது என்றோ, வாயுவலி என்றோ தாங்களாக முடிவு செய்துகொண்டு அலட்சியமாக இருக்கக்கூடாது. கர்ப்பம் தொடங்
கியது முதல் பிரசவம் வரைக்கும் ஒரே மருத்துவரைப் பார்ப்பது மிக நல்லது.

கர்ப்பிணிகள் கவனத்துக்கு!

உடல் எடை

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு பெண்ணின் உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறதா (சரியான பி.எம்.ஐ.(BMI)) என்று தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் கர்ப்பம் தரிக்கும் நிலையில் உள்ள பெண்கள் பலரும் அதிக உடல் எடையுடன்தான் இருக்கின்றனர். இதுவே பல நேரங்களில் கர்ப்பம் தரிப்பதற்குத் தடையாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

மேலும் இவர்களுக்கு கர்ப்பகாலத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதனால் கர்ப்பிணிக்கு மட்டுமன்றி கருவில் வளரும் சிசுவுக்கும் பிரச்னைகள் உண்டாகும். சுகப்பிரசவம் ஆக முடியாமல் சிசேரியன் மூலம் குழந்தையைப் பிரசவிக்க நேரிடலாம்.

ஆகவே, அதிக உடல் எடை என்றால் சரியான உணவுமுறை மற்றும் தேவையான உடற்பயிற்சிகள்மூலம் உடல் எடையைக் குறைக்க வேண்டியது கட்டாயம். கர்ப்பிணிக்கு உடல் எடை குறைவாக இருந்தாலும் கருவில் வளரும் சிசுவுக்குப் பிரச்னை ஏற்படலாம். இவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு இருக்கலாம்.

இதன் விளைவாக இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும்போதே எடை குறைவாக இருக்கலாம்; பிற்காலத்திலும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு, ஊட்டச்சத்துக் குறைவு போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே, இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையான உணவுகளைச் சாப்பிட்டு, கர்ப்பகாலம் முழுவதும் சரியான உடல் எடையைப் பேண வேண்டும்.

உணவுமுறை

கர்ப்பிணி சாப்பிடும் உணவில்தான் தாய், சேய் இருவரின் நலமும் இருக்கிறது. சமச்சீரான உணவு முக்கியம். சாதாரணமாக ஒரு பெண்ணுக்கு 1800லிருந்து 2000 கலோரிகள் தரும் உணவு தேவை. கர்ப்பகாலத்தில் கூடுதலாக 350 கலோரி தேவைப்படும்.

அதிக அளவு புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து அடங்கிய முழுதானியங்கள், பருப்புகள், பயறுகள், பழங்கள், நட்ஸ், காய்கறிகள், இரும்புச்சத்து மிகுந்த பேரீச்சை, கீரைகள் என உணவுகளைத் திட்டமிட்டுச் சாப்பிட வேண்டும். பால், தயிர் சாப்பிட்டால் கால்சியம் கிடைத்துவிடும். இத்துடன் நாளொன்றுக்கு 30 நிமிட நடைப்பயிற்சி அவசியம்.

கொழுப்பு மிகுந்த, எண்ணெய் உணவுகளையும் துரித உணவுகளையும் நொறுக்குத்தீனிகளையும் தவிர்ப்பது நல்லது. ஃபோலிக் அமிலம் முக்கியம் கர்ப்பம் தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபோலிக் அமிலம் மாத்திரையை சாப்பிட ஆரம்பிக்கலாம்.

கருச்சிதைவைத் தடுப்பதற்கும், சிசுவின் உடலில் எந்தக் குறையும் இல்லாமல் வளர்வதற்கும் கர்ப்பம் ஆரம்பித்த தினத்திலிருந்தே ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியம். குறிப்பாக, குழந்தையின் மூளை மற்றும் முதுகுத் தண்டுவட வளர்ச்சிக்கு இந்தச் சத்து தேவை. தினமும் 400 மைக்ரோகிராம் அளவுக்கு இது தேவை. ஈரல் இறைச்சி, பச்சைக்காய்கறிகள், கீரைகள், பயறுகள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் ஆகியவற்றில் இது அதிகம். 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#2
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டாக்டர் கு.கணேசன்

தாயின் வயிற்றில் ஒற்றை ‘செல்’லாக வளர ஆரம்பிக்கும் கருவானது, உருவம் எடுக்கும் பருவ காலம் முதல் மூன்று கர்ப்ப மாதங்கள். இந்த முதல் டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி எப்படி இருக்கும்? தெரிந்துகொள்வோமா?

கருப்பையின் மெத்தென்ற பரப்பில் பதிந்துகொண்ட கருவின் வெளிப்புற செல்கள் மெதுவாக வேர்கள் போலக் கிளைவிட்டு வளரத் தொடங்கும். அப்படி வளர்ந்துகொண்டே சென்று, நச்சுக்கொடி(Placenta) வழியாக அம்மாவின் கருப்பையில் இருக்கும் ரத்தக்குழாய்களோடு இணைந்து, கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற வழியை உண்டாக்குகின்றன. இந்த இணைப்பைத்தான் ‘தொப்புள் கொடி’ என்கிறோம்.

கருவின் உட்புற செல்கள் மூன்றுவிதமாகப் பிரிகின்றன. முதலாவது ரக செல்கள்(Ectoderm) மூளை மற்றும் நரம்பு மண்டலமாகவும், தோல், கண், நகம் போன்ற உறுப்புகளாகவும் மாறுகின்றன. இரண்டாவது ரகமானது (Mesoderm) ரத்தக்குழாய், தசை, எலும்பு என்று நமக்கு உருவம் தரும் உறுப்புகளாகவும் இதயம் என்ற உயிர்தரும் உறுப்பாகவும் மாறுகின்றன.

மூன்றாவது ரக செல்கள் (Endoderm) வயிறு, குடல். நுரையீரல், தைராய்டு போன்ற உறுப்புகளாக உருமாறுகின்றன. கருப்பையில் குழந்தை வளர்வதை இப்படிப் பொதுவாகச் சொல்லிவிட்டாலும், வாராவாரம் அதன் வளர்ச்சியைப் பின்தொடர்ந்தால் இன்னும் சுவாரஸ்யம்கூடும்.

இதயத்துடிப்பு ஆரம்பம்!’இந்த மாதம் ‘நாள்’ தப்பி ஒரு வாரம் கூடுதலா ஆச்சே! ஒருவேளை அம்மாவாகப் போகிறோமோ?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, கருப்பையில் ‘வால் முளைத்த சிசு’ உருவாக ஆரம்பித்துவிடுகிறது. அப்போது முதுகுத்தண்டு, மூளை மற்றும் இதயம் அதில் உருவாகியிருக்கும். சிசுவுக்கான ரத்த ஓட்டம் கூட ஆரம்பித்திருக்கும்.

சிசுவுக்கு உண்மையிலேயே உயிர் உண்டாகிற வாரம் ஆறாவது வாரம்தான். அதாவது, இதயம் துடிக்கத் தொடங்கும் வாரம் இது. இந்த வாரத்தில் பூ முதலில் மொட்டுவிடுவதைப்போல, சிசுவின் மேடேறிய இடங்களில் கை, கால்களுக்கான ‘மொட்டுகள்’ தோன்றும். உருட்டி வைத்த சப்பாத்தி மாவுபோலிருக்கும் முகத்தில் கண், காது மற்றும் வாய் தோன்றத் தொடங்கும்.

இச்சமயத்தில் முகத்தின் பக்கவாட்டில்தான் கண்கள் இருக்கும்.ஏழாவது வாரத்தில் மொட்டுகளாக இருந்த சிசுவின் பகுதிகள் கை, கால்களாகவும், தலையின் இரண்டு பக்கமும் இருந்த குழிகள் காதுகளாகவும் உருமாறும் அதிசயம் நடக்கிறது.

இந்த நேரத்தில் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கிறது. சரியாகச் சொன்னால், நிமிடத்துக்கு 150 முறை துடிக்கிறது. இச்சமயத்தில்தான் குடல், கணையம் போன்றவை வளர ஆரம்பிக்கின்றன. கண் லென்ஸ்களும் நாசித் துவாரங்களும் தோன்றுகின்றன.

குழந்தை ஆணா, பெண்ணா?
எட்டாவது வாரம் ஒரு முக்கியமான வாரம். அப்போதுதான் குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானிக்கிற இனப்பெருக்க உறுப்புகள் வளரத் தொடங்குகின்றன. ஆணாக இருந்தால் விரைகளாகவும், பெண் என்றால் சினைப்பைகளாகவும் மாறுகின்றன. அப்போது கண்கள் நன்றாக உருவாகியிருக்கும். ஆனால், அவை மூடிய நிலையில்தான் இருக்கும்.

பற்கள் உருவாக ஆரம்பிக்கும். மூக்கின் நுனி தெரிய ஆரம்பிக்கும். கை, கால்கள் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கும். சிசுவானது முழங்கையை மடித்துக் கொள்ளும். சிசு முதன்முதலில் அசையத் தொடங்கும் கர்ப்ப வாரம் இது.

ஆனால் அந்த அசைவை அம்மாவால் உணர முடியாது. ஒன்பதாவது வாரத்தில் விரல்கள் நன்றாகவே வளர்ந்திருக்கும். எலும்புகளும் குருத்தெலும்புகளும் வளரத்தொடங்கும்.

சிசுவுக்குக் கிடைக்கும் புரமோஷன்!


சிசுவின் வளர்ச்சிப்படிகளில் அடுத்த முக்கியத்துவம் பத்தாவது வாரத்துக்குத்தான் உண்டு. காரணம், இப்போதுதான் ‘சிசு’ என்ற நிலையிலிருந்து ‘கருக்குழந்தை’ என்ற நிலைக்கு அது ‘புரமோஷன்’ ஆகிறது. பெரும்பாலும் தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கைவிரல்கள், முழங்கால், கணுக்கால், பாதம், கால் விரல்கள் என எல்லா உறுப்புகளும் இந்த வாரத்தில் வளர்ந்திருக்கும்; ஒரு குழந்தையின் முழு வடிவம் வந்திருக்கும்.

குழந்தையின் விரல்களில் நகங்கள் மற்றும் கண்ணில் விழித்திரை(Retina) வளரும் காலம் 11-வது வாரம்.12-வது வாரத்தில் தலையில் முடி தோன்றும். மேல் தோல் வளர்ந்திருக்கும். ஒன்றோடொன்று ஒட்டி யிருந்த விரல்கள் இப்போது பிரிந்து தனித்தனியாகத் தெரியும். சிறுநீரகங்கள் செயல்படத் தொடங்கும்.13-வது வாரத்தில் குழந்தைக்குக் குரல்வளைகள் உருவாகிவிடும்.

இருபது பால்பற்களும் உருவாகி, குழந்தை பிறந்த பிறகு சரியான நேரத்தில் வெளியில் தெரிய ஈறுகளுக்குள் காத்திருக்கும். குழந்தையின் எலும்பு மஜ்ஜை, கல்லீரல் போன்றவை சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கும். முகத்தின் பக்கவாட்டில் இருந்த கண்கள்
இப்போது முன்புறம் நகர்ந்து அருகருகில் காணப்படும்.

முதல் டிரைமெஸ்டர் முடியும்போது கருப்பையில் வளரும் குழந்தை எந்த சைஸில் இருக்கும் என நினைக்கிறீர்கள்? ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்குத்தான் இருக்கும்!

? கர்ப்ப காலத்தின் போது ஒவ்வொரு பெண்ணுக்கும், எல்லா காலகட்டத்திலும் அதிகம் எழுகிற கேள்விகள் இவை. மருத்துவர்கள் அதிகம் எதிர்கொள்கிற கேள்விகளும் கூட.சந்தேகம் தெளிவோம்...

கர்ப்பத்தின்போது பாலுறவு வைத்துக்கொள்ளலாமா?
கர்ப்பிணிகள் கேட்கத் தயங்கும் கேள்வி இது. கரு உருவானதிலிருந்து முதல் மூன்று மாதங்கள் வரை அது கருப்பையில் சரியான பிடிப்பின்றி இருக்கும் என்பதால், கரு கலைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அதனால், இந்த நாட்களில் எப்படி நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறோமோ, அப்படித்தான் பாலுறவு வைத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறோம். அதேபோல், கடைசி மாதமான ஒன்பதாவது மாதத்திலும் பாலுறவைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

இந்த நேரத்தில் பாலுறவு வைத்துக் கொண்டால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குழந்தை பிறப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் இம்மாதிரியான ஆபத்துகளை ‘விலைக்கு’ வாங்கக்கூடாது! இங்கே குறிப்பிட்ட இந்த நான்கு மாதங்கள் தவிர மிச்சமுள்ள மாதங்களில் நிதானமான பாலுறவை வைத்துக்கொள்ளலாம். பிரச்னை இல்லை.

இந்த ஆலோசனை நார்மலாக கருத்தரிக்கும் பெண்களுக்கு மட்டுமே!திரும்பத்திரும்ப கரு கலைந்திருக்கும் பெண்கள், கர்ப்பம் ஆன பிறகு உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கும் பெண்கள் போன்றவர்கள் கர்ப்பகாலம் முழுவதும் பாலுறவைத் தவிர்ப்பது நல்லது.

பிரசவத் தேதியைக் கணக்கிடுவது எப்படி?

சென்ற முறை மாதவிலக்கு தொடங்கிய நாளிலிருந்து சரியாக இரண்டு வாரங்களில் ‘கருத்தரித்தல்’ நடந்திருக்கிறது என்ற அனுமானத்தில் பிரசவத் தேதி கணக்கிடப்படுகிறது. கடைசியாக மாதவிலக்கு தொடங்கிய நாளிலிருந்து 7 நாட்களைக் கூட்டிக்கொண்டு, அதிலிருந்து 3 மாதங்களைக் கழித்தால் கிடைக்கும் தேதிதான் பிரசவத் தேதி.

உதாரணமாக கடைசியாக மாதவிலக்கு தொடங்கிய தேதி ஜனவரி 1 என்றால்,
ஜனவரி 1 + 7 = ஜனவரி 8 3 மாதங்கள் = அக்டோபர் 8 பிரசவத்தேதி.
பொதுவாக முழு கர்ப்ப காலம் என்பது 280 நாட்கள். (40 வாரங்கள்).

கர்ப்பிணிகள் எப்படி படுப்பது நல்லது?

கர்ப்பிணிக்கு எப்படி வசதியோ அப்படியே படுக்கலாம். என்றாலும், மல்லாந்து படுக்கக்கூடாது. அப்படி படுக்கும்போது வளர்ந்துவரும் கருப்பை அம்மாவின் இதயத்துக்கு ரத்தம் எடுத்துப்போகும் ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும்.

இதனால் அம்மாவின் இதயத்துக்குத் தேவையான ரத்தம் போகாமல், ரத்த அழுத்தம் இறங்கிவிடும். தலைசுற்றி, மயக்கம் வரும். இதனைத் தவிர்க்க இடதுபக்கம் ஒருக்களித்துப்படுப்பது நல்லது. இந்த நிலையில் அம்மாவுக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் பிரச்னை இல்லாமல் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும்.

என்னென்ன தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும்?

கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் ஜெர்மன் தட்டம்மை கர்ப்பிணியைத் தாக்கினால், குழந்தைக்குப் பிரச்னைகள் உருவாகலாம். எனவே, இதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது, அப்படி போட்டுக் கொண்டவர்கள் அடுத்த மூன்று மாதங்கள்வரை கருத்தரிக்காமல் இருக்கவேண்டியதும் முக்கியம். இதுபோல் ஹெப்படைடிஸ்-ஏ, ஹெப்படைடிஸ்-பி தடுப்பூசிகள் மற்றும் ஃபுளுகாய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதும் நல்லது. இவற்றைக் கர்ப்பமானதும்கூட போட்டுக் கொள்ளலாம்.

பிரசவத்தின்போது கர்ப்பிணிக்கும் பிறக்கும் குழந்தைக்கும் டெட்டனஸ் நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள காரணத்தால், அதைத் தவிர்ப்பதற்காக டெட்டனஸ்டாக்சாய்டு அல்லது டி.டி.ஏ.பி(Tdap)தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். முதல்முறையாக கர்ப்பம் ஆகும்போது, ஸ்கேன் மூலம் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனேயே முதல் தவணையாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மாதம் கழித்து இரண்டாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

இப்படி இரண்டாம் தவணையைப் போடத் தவறியவர்கள் பிரசவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பாவது இரண்டாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம். இரண்டாம் முறை கர்ப்பம் தரிக்கும்போதும் இதேபோல் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#3
4 வது மாதம்


கர்ப்பமாக இருக்கும்போது ஒரு பெண் உடல்ரீதியாக பெரிய தொல்லைகள் எதுவும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் காலக்கட்டம் நான்காம் மாதம்தான். இரண்டாவது டிரைமெஸ்டர் என்று குறிப்பிடப்படும் இந்த காலத்தில் சாப்பிடவே முடியாமல் தலைச்சுற்றல், மயக்கம் வருவதெல்லாம் இப்போது பெரும்பாலும் நின்றுவிடும்.பிடித்த உணவை நன்றாகச் சுவைத்து, ருசித்துச் சாப்பிட முடியும். ஊட்டமான உணவும், குழந்தைக்குத் தாயாகப் போகிறோம் என்ற பூரிப்பும் உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகத்தை ஊட்டும். இவற்றோடு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாடும் சேர்ந்துகொள்ள கர்ப்பிணியின் முகத்தில் தாய்மைப் பொலிவு பிரகாசிக்கும்.

‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்று வெளியில் சொன்னால் தவிர சில பெண்களுக்கு முதல் மூன்று மாதங்கள் வரையிலும் வயிறு பெரிதாகத் தெரியாது. இரண்டாவது டிரைமெஸ்டரின் ஆரம்பத்தில்தான், அதாவது கர்ப்பம் தரித்த நான்காவது மாதத்தில்தான் வயிறு பூசினாற்போல் லேசாக மேடிடத் தொடங்கும்.

தாயின் குரலைக் கேட்கும் தருணம்!
நான்காவது கர்ப்ப மாதம் ஆரம்பிக்கும்போது கர்ப்பிணிக்கு வயிற்றுத்தசைகளும், சருமமும் கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடையும். அப்போது விரி தடயங்கள்(Stretch marks) வரிவரியாய் ஏற்படத் தொடங்கும். மார்பகத்தின் இயல்பான மென்தன்மை குறைந்து, பெரிதாகி கனமாகத் தெரியும்.

இப்போது கருவில் இருக்கும் குழந்தை ஒரு லிப்ஸ்டிக் நீளத்தில்தான் இருக்கும். எனினும் முகமும், கழுத்தும் தெளிவாகத் தெரியும். முகத்தசைகள் இயங்க ஆரம்பிப்பதால் குழந்தை புன்முறுவல் பூக்கவும், கோபமாக முறைக்கவும், நெற்றியைச் சுருக்கவும் முடியும். குழந்தை ஆணா, பெண்ணா என்பது தெளிவாகும். இந்தத் தருணத்தில் தாயின் குரலைக் கேட்கத் தொடங்கும். வெளியில் கூச்சல் கேட்டால் கருக்குழந்தை திடுக்கிட்டு நகர்வதை தாயால் உணர முடியும்.

கருக்குழந்தையின் இதயம் பெரியவர்களைவிட இரண்டு மடங்கு வேகத்தில் துடிக்கும். குழந்தையின் இதயத்துடிப்பை ஸ்டெத்தாஸ்கோப் கொண்டு 5-வது மாதத்தில்தான் கேட்க முடியும். ஆனால், ‘டாப்ளர் டிவைஸ்’ எனும் கருவிகொண்டு கருவுற்ற 4-வது மாதத்திலிருந்தே குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்க முடியும்.

மனித முகம் தோன்றும்!
ஐந்தாவது மாதத்தில் கருக்குழந்தை சற்றே வேகமாக வளர ஆரம்பிக்கிறது. கண், காது, மூக்கு எல்லாம் அதனதன் வடிவங்களில், ஒரு மனித முகத்துக்கே உரிய அமைப்பில், முகம் முழுமையாக உருப்பெறுகிறது. தலை, புருவம், இமை, தோல் ஆகியவற்றில் முடி வளர்கிறது. குழந்தையின் வயிற்றில் கணையம் இன்சுலினைச் சுரக்கத் தொடங்கும். தாயின் அடிவயிறு கனமாகி அவ்வப்போது லேசாக வலிக்கும்.

கருக்குழந்தையைச் சுற்றி உருவாகியிருக்கும் மெல்லிய பையில் சற்றே வழவழப்பான திரவம் சுரக்கத் தொடங்கும். இதுதான் ‘பனிக்குடநீர்’ (Amniotic fluid). குழந்தையின் சிறுநீர், அதன் நுரையீரல்களில் சுரக்கும் திரவம் எல்லாம் சேர்ந்துதான் பனிக்குடநீர் உருவாகிறது. ஐந்தாவது மாதத்தில் இது ஒரு மினி நீச்சல் குளம்போல் ஆகிவிடுவதால், குழந்தை அதில் கை, கால்களை ஆட்டி, நீச்சலடிக்கிறது. குழந்தையின் இந்த விளையாட்டு அம்மாவின் மேனியைச் சிலிர்க்க வைக்கிறது.

இப்போது குழந்தையின் சருமத்தில் ‘வெர்னிக்ஸ்’ எனும் பிசுபிசுப்பான மெழுகு பூசப்படுவதால் அதன் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.கருக்குழந்தையையும் தாயின் கருப்பையையும் இணைக்கும் ‘நெட் ஒர்க்’குக்குப் பெயர் ‘நச்சுக்கொடி’(Placenta). இது ஒரு தட்டுமாதிரி இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கும்.

குழந்தைக்குத் தேவைப்படும் உணவும் ஆக்ஸிஜனும் ரத்தம் மூலம் நச்சுக்கொடி வழியாகத்தான் அம்மாவிடமிருந்து குழந்தைக்குச் செல்லும். கருக்குழந்தைக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாய்க்குப் பெயர்தான் தொப்புள்கொடி!

ஆறாவது மாதத்தில் பல கர்ப்பிணிகளுக்கு மேல் தோல் கருமையடைகிறது. கருக்குழந்தைக்கு நகங்கள் வளர்ந்து விரல்களுக்கு உறுதி கிடைக்கிறது. குழந்தைக்கென்று விரல்களில் ரேகைகள் பிரத்யேகமாக அமைகின்றன. முதுகுத்தண்டு முழுமையாக வளர்ந்திருக்கும். பகலில் கருக்குழந்தை அமைதியாக உறங்கும்; இரவில் வயிற்றுக்குள் கால்பந்து விளையாடுகிற மாதிரி உதைத்துக் குதிக்கும். இப்போது குழந்தையின் நீளம் நான்காவது மாதத்தில் இருந்ததைவிட நான்கு மடங்கு அதிகரித்திருக்கும்.

இரும்புச்சத்து மாத்திரை தேவைஇரும்புச்சத்து மாத்திரை மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரையை இதுவரை சாப்பிடாத கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரைப்படி இப்போது சாப்பிட ஆரம்பிக்கலாம்.

உடற்பயிற்சி முக்கியம்இரண்டாவது டிரைமெஸ்டரில் கர்ப்பிணியானவள் தேவையான அளவுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடுவதுடன் முடிந்த அளவுக்கு வீட்டில் வேலைகளையும் செய்ய வேண்டும். மகப்பேறு மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகரைக் கலந்துபேசி வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்யலாம்.

உடலை விரிக்கச் செய்யும்படியான உடற்பயிற்சிகளைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் 30 முதல் 45 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பான நடைபயிற்சி செய்வதும் நல்லதுதான். உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யும்போது மூச்சுத்திணறல், கிறுகிறுப்பு, மயக்கம் ஆகியவை ஏற்பட்டால், நெஞ்சு அடைப்பது போலிருந்தால், பாதங்களில் வீக்கம் தெரிந்தால் உடனே பயிற்சிகள் செய்வதை நிறுத்திவிட வேண்டும். மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு பயிற்சிகளைத் தொடர வேண்டும்.

சந்தோஷ பரவசம் உதவும்!


இரண்டாவது டிரைமெஸ்டரில் தனக்குள் நடக்கும் மாறுதல்களையும் தன் குழந்தையின் அசைவுகளையும் கர்ப்பிணி நன்றாக உணர முடிவதால் சொல்லில் அடங்காத பரவச உணர்வை அடைகிறாள். இந்த நேரத்தில் மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்க வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். எவ்வித பயமோ, பதற்றமோ இல்லாமல், மனதை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சந்தோஷ பரவசங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும். உதாரணத்துக்கு நீங்கள் இனிய இசையைக் கேட்கிறீர்கள் என்றால் கருக்குழந்தையும் அதைக் கேட்டு ரசிக்கும்.நீங்கள் நான்கு மாத கர்ப்பிணி என்றால், ‘குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?’ என்று யோசிக்கத் தொடங்கினால் போதும், உள்ளத்தில் உற்சாகம் குற்றால அருவியாய் கொட்டும்; சந்தோஷ பரவசம் அடைமழைபோல் உங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

கர்ப்பிணிக்குப் பொதுவான ஆலோசனைகள்!

*தளர்வான உடைகளையே அணிய வேண்டும். உள்ளாடைகள் இறுக்கமாக இருக்கக்கூடாது. பருத்தி ஆடைகள் மிகவும் நல்லது.

*ஹைஹீல்ஸ் செருப்புகள், இடுப்பில் பெல்ட் போன்றவற்றை அணியக்கூடாது.

*இதமான சுடுநீரில் குளிக்கலாம். குளியலறையில் வழுக்கிவிழுந்துவிடாமல் கவனமாக இருப்பது முக்கியம்.

*குளிர்ந்தகாற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கவோ, உட்காரவோ கூடாது.

*கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். பாட்டில் தண்ணீர் மற்றும் கேன் தண்ணீரின் பாதுகாப்புத் தன்மையை நம்ப முடியாது.

*ஃப்ரிட்ஜில் வைத்த பானங்கள் மற்றும் உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

*காரம் மற்றும் புளிப்பு அதிகமுள்ள உணவுகளையும் காற்றடைத்த பானங்களையும் ஓரங்கட்ட வேண்டும்.

*எளிதில் செரிமானமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். நேரத்துக்குச் சாப்பிட வேண்டியது முக்கியம்.

*மதியம் சாப்பிட்டதும் 2 மணி நேரம் ஓய்வெடுத்தால் போதும்.

*பகலில் தூங்குவதைத் தவிர்ப்பதே நல்லது. இரவில் 8 மணிநேரம் உறங்குவது அவசியம்.

*ஒருபக்கமாகப் படுக்கும்போது, வயிற்றுக்கு அடியில் ஒரு தலையணையும், முழங்கால்களுக்கு இடையே ஒரு தலையணையும் வைத்துக்கொண்டு படுப்பது நல்லது.

*இரவில் சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது. ஆகவே, இரவில் சீக்கிரம் சாப்பிட்டுவிடுவது நல்லது.

*தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்க வேண்டாம். மனதைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டிப்பாக பார்க்கக்கூடாது.

*அதிக வெயிலில் அலையக்கூடாது.

*மழை, புயல், இடி, மின்னல் ஏற்படும்போது வெளியில் செல்லக்கூடாது.

*மக்கள் நெருக்கமாக உள்ள சந்தை, திருவிழா, மால்களுக்குச் செல்ல வேண்டாம்.

*கோபமாகப் பேசுவதையும் அதிக கூச்சல் போட்டு பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

*இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் இல்லாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

*மலச்சிக்கல் தொல்லை கொடுத்தால் நிறைய தண்ணீர் குடிக்கலாம். நார்ச்சத்துமிகுந்த பழங்களைச் சாப்பிடலாம். இவற்றில் அது சரியாகவில்லை என்றால், மலமிளக்கி மருந்துகளை மருத்துவரிடம் கேட்டுச் சாப்பிடலாம்.

*மலச்சிக்கலைத் தவிர்த்தால்தான் இந்தப் பருவத்தில் மூலநோய் வராமலும் தடுக்க முடியும்.

*வாய் சுத்தமும் பற்களின் ஆரோக்கியமும் முக்கியம். சொத்தைப் பற்கள் இருந்தால், இரண்டாவது டிரைமெஸ்டரில் அகற்றிவிட வேண்டும் அல்லது ‘ரூட்கெனால் சிகிச்சை’ செய்து சரிசெய்து கொள்ள வேண்டும்.

*உடல் எடை மிகவும் அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச்சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#4
தைராய்டுக்கு பெண்கள்னா ரொம்ப இஷ்டம்!


டாக்டர் கு.கணேசன்


கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு அதிகம் தொல்லை கொடுக்கும் நோய்களில் தைராய்டு பிரச்னை முக்கியமானது. குறிப்பாக ஆண், பெண் இருவரில் தைராய்டு பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.​

தொண்டையில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. இது சாதாரணமாக நம் கண்ணுக்குத்தெரியாது. இது வீங்கிவிட்டது என்றால், பாதிக்கப்பட்டவர் உணவை விழுங்கும்போது, குரல் வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே எழுவதைப் பார்க்கமுடியும்.

* தைராய்டு ஹார்மோன்கள்

தைராக்சின்(T4), டிரை அயடோதைரோனின்(T3) எனும் இரண்டு ஹார்மோன்களைத் தைராய்டு சுரப்பி சுரக்கிறது. தைராய்டு செல்களில் தைரோகுளோபுலின் எனும் புரதம் உள்ளது. இதில் டைரோசின் எனும் அமினோ அமிலம் உள்ளது. தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினோடு இணைத்து, தைராக்சின் ஹார்மோனைச் சுரக்கின்றன. இந்தச் செயல்பாட்டை முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் தைராய்டு ஊக்கி ஹார்மோன்(TSH) கட்டுப்படுத்துகிறது.

* தைராக்சின் பணிகள்

குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பு பலம், தசை உறுதி, புத்திக்கூர்மை என்று பலவற்றுக்குத் தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளை ஊக்கப்படுத்துகிறது. இதயம், குடல், நரம்புகள், தசைகள், பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் இயக்கங்களையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது.

உடலின் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கவும், செல்களில் என்சைம்கள் உற்பத்தி ஆவதற்கும் தைராக்சின் ஹார்மோன் தேவைப்படுகிறது. இவ்வாறு உடலின் அன்றாட தேவைக்கு ஏற்ப சுரந்து, கருவில் வளரும் குழந்தை முதல் முதியோர் வரை, அனைவரின்
ஆரோக்கியத்துக்கும் அச்சாணியாக இருப்பது தைராக்சின் ஹார்மோன்.

* குறை தைராய்டுசில சமயங்களில் தைராக்சின்

ஹார்மோன் குறைவாகச் சுரக்கும். இதற்குக் குறை தைராய்டு(Hypothyroidism) என்று பெயர். இன்றைய டீன் ஏஜ் பெண்களைப் பாதிக்கிற ஹார்மோன் பிரச்னைகளில் குறை தைராய்டு பிரச்னை முன்னிலை வகிக்கிறது. இவர்கள் திருமணத்துக்கு முன்பே இந்த நோய் இருப்பதைக்
கவனித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

* அறிகுறிகள் என்ன?

உடல் சோர்வாக இருக்கும். சாதாரண குளிரைக்கூட தாங்க முடியாது. முடி கொட்டும், சருமம் உலர்ந்துவிடும். பசி குறையும். அதேநேரத்தில் உடல் எடை அதிகரிக்கும். அதிக தூக்கம் வரும்.குரலில் மாற்றம், கை கால்களில் மதமதப்பு, ஞாபக மறதி, முறையற்ற மாதவிலக்கு, கர்ப்பமாவதில் பிரச்னை... இப்படிப் பல பிரச்னைகள் அடுத்தடுத்து ஏற்படும்.

குறை தைராய்டு உள்ளவர்களுக்குக் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதும், உடலில் நீர் கோத்துக் கொண்டு பருமனாவதும், சருமம் வறண்டு போவதும் நோயை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்.

* என்ன காரணம்?

குறை தைராய்டு ஒரு தன்தடுப்பாற்றல் நோயாக(Auto immune disease) ஏற்படுகிறது. எப்படி? குடலை பாதிக்கும்பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராக ரத்தத்தில் எதிர் அணுக்கள்(Anti bodies) தோன்றும்போது, அவைஅந்தக் கிருமிகளை அழிப்பதோடல்லாமல், தைராய்டு செல்களையும் அழித்துவிடுகிறது. இதன் விளைவால், தைராக்சின் சுரப்பது குறைந்து, குறை தைராய்டு ஏற்படுகிறது.

இவை தவிர பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாக தைராய்டு சுரப்பியில் அழற்சி(Thyroiditis) ஏற்படுவது, தைராய்டு சுரப்பியை அகற்றுவது, முன்பிட்யூட்டரி சுரப்பி சிதைவடைவது போன்ற காரணங்களாலும் குறை தைராய்டு ஏற்படலாம். பெற்றோர் யாருக்காவது குறை தைராய்டு இருந்தால், வாரிசுகளுக்கும் அது வர வாய்ப்புண்டு.

* தைராய்டு மாத்திரைகளைநிறுத்தினால்?

ஏற்கனவே குறை தைராய்டு இருக்கிற பெண்களில் பலரும் திருமணமானதும் அவர்கள் சாப்பிடும் மாத்திரைகளை நிறுத்தி விடுவார்கள். கர்ப்பமடைவதற்கு இந்த மாத்திரைகள் தடையாக இருக்கும் என கருதியும், கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும் என பயந்தும் இதுபோல் நடந்து கொள்வார்கள். அப்போது கர்ப்ப காலத்தில் மறுபடியும் குறை தைராய்டு ஏற்பட்டு கர்ப்பிணிக்கும் சிசுவுக்கும் பல பிரச்னைகள் செய்யும்.

சிலருக்கு அவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மாத்திரைகளின் அளவு குறைவாக இருக்கும். அப்போதும் குறைதைராய்டு பிரச்னை முளைக்கும்.

இன்னும் சிலருக்கு அவர்கள் வேறு நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளின் பக்க விளைவாகவும் இது ஏற்படுவதுண்டு. உதாரணத்துக்கு, அமியடரோன் (Amiodarone) மாத்திரை.

*பரிசோதனைகள்

ரத்தத்தில் T3, T4, TSH ஆகிய மூன்று ஹார்மோன்களின் அளவைப் பரிசோதித்தால், தைராய்டு பாதிப்பின் அளவு தெரியவரும். அத்துடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் முதலியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பைத் தெரிந்து கொள்ள முடியும். இப்போது ஐசோடோப் ஸ்கேன் பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

ஏற்கனவே குறை தைராய்டு உள்ள பெண்கள் கர்ப்பமாகும்போது மகப்பேறு மருத்துவரை முதல் முறையாக சந்திக்கும்போதே இது குறித்து கூறிவிட வேண்டும். அப்போது அவர்கள் சாப்பிடும்மாத்திரை விபரத்தைக் கூறி, அதுவே போதுமா அல்லது மாத்திரை அளவை அதிகரிக்க வேண்டுமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாகவே, கர்ப்பிணிகளுக்கு முதல் டிரைமெஸ்டரில் T3, T4, TSH, FT4 பரிசோதனைகள் செய்யப்படும். அப்போது குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4, FT4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும். முக்கியமாக, முதல் டிரைமஸ்டரில் TSH அளவு 2.5-க்கும் குறைவாகஇருப்பது நல்லது. அது அதிகமென்றால் குறை தைராய்டுக்குரிய சிகிச்சையைத் தொடங்க வேண்டும். ஏற்கனவே இதற்கான சிகிச்சையில் உள்ளவர்கள்
மாத்திரை அளவை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது டிரைமஸ்டரிலும் TSH அளவு பரிசோதிக்கப்படும். அப்போது இதன் அளவு 3-க்கும் குறைவாக இருப்பது நல்லது. இல்லையென்றால், சிகிச்சை அவசியம். இவர்களுக்கு மூன்றாவது டிரைமஸ்டரிலும் TSH அளவு பரிசோதிக்கப்பட்டு தேவைக்கேற்ப சிகிச்சை தரப்படும்.

* கர்ப்பிணிக்கு என்ன பிரச்னை?

குறை தைராய்டு பிரச்னையை சரியாக அணுகாத கர்ப்பிணிகளுக்கு, ரத்தசோகை ஏற்படும். இது கர்ப்பிணியையும், சிசுவையும் பல வழிகளில் பாதிக்கும். மேலும் தசைவலி, மிகுந்த சோர்வு, முக வீக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். சிலருக்கு கருச்சிதைவு ஏற்படலாம். பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். குறைப் பிரசவம் ஆகலாம்.

* சிசுவுக்கு என்ன பிரச்னை?


குழந்தை எடை குறைவாகப் பிறக்கலாம். பிறக்கும்போதே குறை தைராய்டு பிரச்னை குழந்தைக்கு இருக்கலாம். அப்போது அந்தக் குழந்தைக்கு மூளை வளர்ச்சியும், நரம்புகள் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டிருக்கலாம். இம்மாதிரியான குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் அறிவு வளர்ச்சி குறைவாக இருக்கலாம்.

* சிகிச்சை என்ன?

குறை தைராய்டு உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனைப்படி, எல்தைராக்சின் மாத்திரையைச் சாப்பிட வேண்டும். மருந்தின் அளவு, அது தேவைப்படும் காலம் ஆகியவற்றை டாக்டர்தான் தீர்மானிக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் இந்த மருந்துகளைச் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி தேவைக்கேற்ப மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்; அதிகரித்துக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் கர்ப்ப காலத்தில் மருந்துகளை நிறுத்திவிடக் கூடாது. குழந்தை பிரசவமானதும் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

* சாப்பிடக் கூடாதவைகுறை தைராய்டு உள்ளவர்கள் முட்டைக்கோஸ், முள்ளங்கி,காலிஃப்ளவர், சோயா, டர்னிப், பசலைக்கீரை, பீச்பழம் (Peach Fruit) முளைகட்டிய பயறுகள் ஆகியவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

* மிகு தைராய்டுதைராக்சின் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதை மிகு தைராய்டு(Hyperthyroidism) என்கிறோம். குறை தைராய்டுள்ள கர்ப்பிணிகளை ஒப்பிடும்போது மிகுதைராய்டு பிரச்னை மிகவும் அரிதாகவே கர்ப்பிணிகளிடம் காணப்படுகிறது. பொதுவாக முதல் டிரைமஸ்டரில் இந்த நோய் இருப்பது தெரியவரும் அல்லது ஏற்கனவே இந்த நோய் இருந்தால் அது தீவிரமடையும்.

வழக்கமான தைராய்டு பரிசோதனைகளில் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை தரப்படும். மிகு தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4, FT4 அளவுகள் அதிகமாகவும், TSH அளவு குறைவாகவும் இருக்கும்.இவர்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி புரோபில்தயோயுரேசில் மாத்திரையைச் சாப்பிட வேண்டும்.

இந்த நோய்க்கு சரியாக சிகிச்சை எடுக்கவில்லை என்றால், கர்ப்பிணிக்குக் கருச்சிதைவு ஏற்படவும், குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்கவும், ரத்த அழுத்தம் அதிகரிக்கவும், முன் பிரசவ வலிப்பு ஏற்படவும், பிரசவத்தில் குழந்தை இறந்துவிடவும் அதிகவாய்ப்புண்டு. எச்சரிக்கை அவசியம்!
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#5
நோயாளிகள் திருமணம் செய்துகொள்ளக் கூடாதா?

டாக்டர் கு.கணேசன்

நாற்பது வருடங்களுக்கு முன்பு நான் மருத்துவக்கல்லூரி மாணவனாக இருந்தபோது, எங்கள் கிராமத்தில் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆகாமலே இருந்தது. அம்மாவிடம் விசாரித்தேன். ‘அவளுக்கு ஆஸ்துமா இருக்கு. அதனால கல்யாணம் வேண்டாம்னுட்டா’ என்றார்.

நான் பயிற்சி மருத்துவனாக இருந்தபோது ஒரு முதிர் கன்னியைச் சந்தித்தேன், அந்தப் பெண்ணுக்கு வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், கல்யாணம் மட்டும் நடக்கவில்லை. காரணம் கேட்டேன். ‘எனக்கு வலிப்பு நோய் இருக்கு. அதனால மாப்பிள்ளை அமையல. அப்படியே கல்யாணம் ஆனாலும் குழந்தை பெத்துக்க முடியாது இல்லையா?’ என்றாள் வருத்தமாக.

அதற்குப் பிறகு இம்மாதிரியான பல பெண்களைச் சந்திக்க நேர்ந்தது. ‘அவளுக்குச் சின்ன வயசிலிருந்தே இதயத்துலே கோளாறாம். குழந்தை பெத்தா செத்துப்போயிடுவா... அதனால கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துட்டா...’ இப்படிப் பேசப்பட்டவர்களையும் பார்க்க நேர்ந்தது.அது ஒரு காலம். ஆனால், இன்றைய நிலைமை அப்படி இல்லை. நோய்களுக்குப் பயந்து திருமண வாழ்க்கையைத் துறக்க வேண்டிய அவசியமும் இல்லை.

உடலை உருக்கும் நோயாக இருந்தாலும், திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக்கொள்ள இன்றைய காலமாற்றத்தால் முடிகிறது. காரணம், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால், அபாயம் என்று கருதப்படும் கர்ப்பங்களையும் ஆபத்தில்லாத கர்ப்பங்களாக மாற்றி, சுகப்பிரசவங்களாக ஆக்கும் வலிமை நம் மருத்துவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு அச்சம் தரும் நோய்கள் பல ஏற்படலாம். அவற்றுள் இதயநோய், வலிப்பு, ஆஸ்துமா, தைராய்டு பிரச்னை ஆகிய நான்கு நோய்கள் முக்கியமானவை. இந்த நோய்களோடு கர்ப்பமாகும் போது, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும். அப்போதுதான் இவர்களுக்குப் பிரசவம் ஆவது ஈஸியாகும்.

இதய நோய்பிறக்கும்போதே இருக்கக்கூடிய இதயநோய், பிறந்த பின்னர் ஏற்படுகிற இதய நோய் என இரண்டு விதம் உண்டு. பிறவியிலேயே ஏற்படும் இதய நோய்களை அந்தந்த வயதில் அறுவை சிகிச்சை செய்து, தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வருவார்கள்.

விதிவிலக்காக, Mitral valve prolapse என்ற பிறவி இதய நோய் சிறுவயதில் வெளியில் தெரியாமல் இருக்கும், கர்ப்பமானதும் முதல் டிரைமெஸ்டரின் போது செய்யப்படும் பரிசோதனையில் தெரியும்.பிறந்த பின்னர் சிலருக்கு ருமாட்டிக் காய்ச்சல் வந்து இதய வால்வுகள் பாதிக்கப்படுவதுண்டு. இவற்றில் முக்கியமானது மைட்ரல் வால்வு சுருக்கம்(Mitraltenosis). இந்த வால்வு, நோய் காரணமாக கடினமாகிவிடும்.

இதனால் இதயத்தில் ரத்த ஓட்டம் குறையும். கர்ப்பிணிக்கு மூச்சு வாங்கும். கருப்பையில் குழந்தை வளரவளர அதற்கு ரத்தம் அதிகம் தேவைப்படும். ஆனால், அது கிடைக்காது. அப்போது கர்ப்பிணிக்கு மூச்சுத்திணறல் இன்னும் அதிகமாகும். இரவில் இருமல் தொல்லை தரும். இம்மாதிரியான கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும் வரை காத்திருந்தால், அது குழந்தைக்கும், கர்ப்பிணிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே, இவர்களுக்கு சிசேரியன் அவசியப்படும்.

இதய நோயுள்ள பெண்கள் திருமணத்தின்போது தங்கள் நோய் பற்றியும், சாப்பிடும் மாத்திரைகளையும் புகுந்த வீட்டில் சொல்லிவிட வேண்டும். திருமணம் ஆனதும் கர்ப்பம் தரிப்பதற்குத் தம்பதியர் இருவரும் கலந்து பேசி, மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி திட்டமிட வேண்டும். அவர்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரை விபரம் மற்றும் சிறுவயதில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை விபரங்களை மறைக்காமல் மருத்துவரிடமும் சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை சரியாக மேற்கொள்ள முடியும்.

உதாரணமாக, இதய வால்வு பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்கு வால்வில் நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க பிரசவத்துக்கு முன்னர் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப்பட வேண்டும். சிலருக்கு மூன்றாம் டிரைமெஸ்டரில் மருத்துவமனையில் அனுமதித்து முழுமையான ஓய்வு தேவைப்படும். இப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கர்ப்பிணியின் இதய நோய் தொடர்பான விபரங்கள் அவசியப்படும்.

என்ன செய்ய வேண்டும்?

இதய நோயுள்ள பெண்கள் கர்ப்பமாகும்போது, முதல் டிரைமெஸ்டரிலேயே இதய நோய் உயர் சிறப்பு நிபுணரிடம் இ.சி.ஜி., எக்கோ போன்ற பரிசோதனைகளைச் செய்துகொண்டு, அவர் சொல்லும் மாத்திரை, மருந்துகளைச் சாப்பிட வேண்டும். மகப்பேறு மருத்துவரிடம் மாதம் இருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இவர்கள் சளி பிடிக்காமலும் பல்லிலும் சிறுநீரிலும் தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ருமாட்டிக் காய்ச்சல் மீண்டும் வராமலிருக்க மாத ஊசிகள் தேவைப்படும்.

உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், மிகு தைராய்டு, ரத்த சோகை போன்ற பிரச்னைகளை வளர விடக்கூடாது. உணவிலும் உப்பு சேர்ப்பதிலும் மருத்துவர் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.இதய நோயுள்ள கர்ப்பிணிகளை எல்லா மருத்துவ வசதிகளும் அடங்கிய, இதய நோய் மற்றும் மகப்பேறு உயர் சிறப்பு மருத்துவர்களும் உள்ள 24 மணி நேர மருத்துவமனையில் அனுமதித்து பிரசவம் பார்ப்பது நல்லது. அப்போதுதான் பிரசவத்தின்போது எதிர்பாராமல் ஏற்படுகிற பல சிக்கல்களைத் தவிர்க்க முடியும். அப்படியே சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவற்றுக்குத் தேவையான தகுந்த சிகிச்சைகளை உடனடியாகத் தர முடியும்.

பிரசவத்தில் சிக்கல் உண்டான நேரத்தில் கடைசி நேரத்தில் ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கர்ப்பிணியை அனுப்பும்போது கர்ப்பிணிக்கும் சரி, குழந்தைக்கும் சரி உயிர் ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை!வலிப்பு நோய்இது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடிய பிரச்னை.

இதற்குத் தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். திருமணத்தின்போது பலரும் இதை மறைக்கவே விரும்புகின்றனர். இன்னும் சிலர் மாத்திரை எடுத்தால் குடிபுகுந்த வீட்டாருக்குத் தெரிந்துவிடும் என பயந்து மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தி விடுகின்றனர். இதுதான் ஆபத்தை வரவழைக்கிறது. இதைத் தவிர்க்க, திருமணத்துக்கு முன்பே இருவீட்டாரும் இது குறித்துப் பேசி முடிவெடுப்பது நல்லது.

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் சரியான மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொண்டால், இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்புள்ள பெண்களும் இயல்பாக கர்ப்பம் தரித்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற முடியும்.

என்ன செய்யலாம்?

இவர்கள் திருமணம் ஆனதும் நரம்பியல் நிபுணரைச் சந்தித்து, வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளால், கர்ப்பம் ஆவதில் சிக்கல் உள்ளதா,
கர்ப்பமானதும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுமா போன்ற விபரங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால் அந்த மாத்திரைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். பல மாத்திரைகளுக்குப் பதிலாக ஒரே ஒரு மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது அல்லது ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் அளவைத் தற்காலிகமாகக் குறைத்துக் கொள்ளவும் முடியும்.

வலிப்பு நோய்க்கு இப்போது மிகவும் பாதுகாப்பான மாத்திரைகள் உள்ளன. எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை திடீரென நிறுத்தி விடக்கூடாது. பிரசவம் முடிந்து கருத்தடை ஆபரேஷன் செய்த பிறகு, மீண்டும் ஒரு முறை நரம்பியல் நிபுணரைச் சந்தித்து தேவைப்பட்டால் பழைய மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

என்னென்ன பாதிப்புகள்?

பொதுவாக, வலிப்பு நோயுள்ள கர்ப்பிணிக்குப் பிறக்கும் குழந்தைக்கு வாய்க்குள் மேல் அண்ணம் சரியாக வளராமல் இருக்கும். உதட்டில் பிளவு ஏற்படும். மூளை நரம்பு மண்டலத்திலும் முதுகிலும் வளர்ச்சிக் குறைபாடு காணப்படும். மிகச் சிலருக்கு இதயக் கோளாறுகளும் ஏற்படலாம். ரத்தம் உறைதல் சார்ந்த பிரச்னைகளும் வரலாம். ஆனால், இப்படி எல்லோருக்கும் ஏற்படும் என்பதில்லை. 100 கர்ப்பிணிகளில் அதிகபட்சமாக 8 பேருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம்.

தவிர்ப்பது எப்படி?

வலிப்பு நோய்க்கான மாத்திரைகளோடு, ஃபோலிக் அமில மாத்திரைகளைத் திருமணம் ஆனதுமே சாப்பிடத் தொடங்க வேண்டும். கர்ப்ப காலத்திலும் முக்கியமாக முதல் டிரைமெஸ்டரில் இதை அவசியம் சாப்பிட வேண்டும்.இதய நோய் உள்ள கர்ப்பிணிகளைப் போலவே இவர்களுக்கும் நெருக்கமான தொடர் கண்காணிப்புத் தேவை.

இரண்டாவது டிரைமெஸ்டரில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்து குழந்தைக்குப் பிறவிக் கோளாறு ஏதேனும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அப்படியே இருந்தாலும் குழந்தை பிறந்த பின்னர் சர்ஜரி செய்து அதைச் சரி செய்துவிட முடியும்.

வலிப்பு நோயுள்ள கர்ப்பிணிகளும் சுகப்பிரசவம் ஆகலாம். சிலருக்கு மட்டுமே சிசேரியன் தேவைப்படும். இவர்கள் தாய்ப்பால் தருவதிலும் பிரச்னை இல்லை. எனவே, வலிப்புக்குப் பயப்பட வேண்டாம்!

(
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#6
[h=1]ஆஸ்துமா வருது...அலர்ட் ப்ளீஸ்[/h]
சுகப்பிரசவம் இனி ஈஸி​

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானது ஆஸ்துமா. இந்தத் தொல்லை கர்ப்பிணிக்கு எந்நேரம் வரும், எப்போது விலகும், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று சரியாக சொல்ல முடியாது. பெண்ணுக்குப் பெண் இது வேறுபடும்.​

ஆஸ்துமாவை ஒரு நோய் என்று சொல்வதைவிட ‘நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு’ என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். மூச்சுக்குழல் சுருங்கி, சளி அடைத்து, இளைப்பு வருவது மூச்சுக்குழாய் ஆஸ்துமாவின்(Bronchial asthma) அடிப்படை செயல்பாடு. ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் இதற்கு முக்கியக் காரணங்கள். குறிப்பாக உணவு, உடை, தூசு, புகை, புகைப்பிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.

அப்பா, அம்மா இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாரிசுகளுக்கு ஆஸ்துமா வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்புள்ளது. பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் ஆஸ்துமா இருந்தால், 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. குளிரான சீதோஷ்ண நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும்.​

அடிக்கடி சளிபிடித்தால் ஆஸ்துமா நிரந்தரமாகிவிடும். அடுக்குத் தும்மல்கள், மூக்கொழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காத பட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.இவை தவிர, மனம் சார்ந்த பிரச்னைகளால்கூட ஆஸ்துமா வரலாம். கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனகுழப்பம், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வருவதுண்டு.​

ஆஸ்துமா எப்படி ஏற்படுகிறது?


இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல்(Bronchus) தசைகளைத் தாக்கும்போது அவை சுருங்கிவிடுகின்றன. அப்போது மூச்சு சிறுகுழல்கள்(Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்குகின்றன. அதேவேளையில் மூச்சுக் குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் மூச்சுக் குழல்களில் வீங்கிய சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கனவே சுருங்கிப்போன மூச்சுப் பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக்குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது விசில் போன்ற சத்தமும் கேட்கிறது. இதையே வீசிங் என்கிறோம்.​

அறிகுறிகள்​


மாசுபட்ட இடத்துக்குச் செல்கிறீர்கள். சற்று நேரத்தில் உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து இளைப்பு ஏற்படுகிறது. மூச்சுவிட சிரமப்படுகிறீர்கள். நுரையீரலில் இருந்து ‘விசில்’ சத்தம் கேட்கிறது. நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்த மாதிரி உணர்கிறீர்கள்,,, இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஆஸ்துமா உள்ளது என்று அர்த்தம்.​

பரிசோதனைகள்​


வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமைப் பரிசோதனை ஆகியவற்றுடன், ‘ஸ்பைரோமெட்ரி’(Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்
குழலின் சுருக்க அளவையும் நம்மால் எவ்வளவு காற்றை எவ்வளவு வேகமாக சுவாசிக்க முடிகிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிகிச்சை முறைகளை அமைத்துக் கொள்வது நடைமுறை. கர்ப்பிணிகள் எக்காரணத்தைக் கொண்டும் மார்பு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை முதல் டிரைமெஸ்டரில் செய்துகொள்ளக் கூடாது.​
கர்ப்ப காலத்தில் என்ன செய்யும்?


பெண்கள் தங்களுக்கு ஆஸ்துமா இருப்பதை வெளியில் சொல்ல வெட்கப்படுவார்கள். மருத்துவரிடமும் இதை மறைத்து விடுவார்கள். பலரும் செய்கிற தவறு இது. ஏற்கனவே ஆஸ்துமா உள்ள பெண்கள் கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே மகப்பேறு மருத்துவரிடம் தாங்கள் எடுத்துவரும் சிகிச்சை குறித்து சொல்லிவிட வேண்டும்.

அப்போதுதான் அந்த மாத்திரைகள் கர்ப்பத்தைப் பாதிக்காதவாறு மருத்துவர் கவனித்துக் கொள்ள முடியும். அல்லது பாதுகாப்பான மாத்திரைகளைத் தரமுடியும். மாத்திரைகளை நிறுத்துவதாக இருந்தால், மருத்துவரிடம் யோசனை கேட்டுக்கொள்ள வேண்டும்; கர்ப்பிணிகள் சுயமாக நிறுத்திவிடக் கூடாது.

பொதுவாக, ஆஸ்துமா உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு கர்ப்ப காலத்தில் ஆஸ்துமா தீவிரமடைகிறது. அதிலும் குறிப்பாக, கடைசி டிரைமெஸ்டரில் ஆஸ்துமாவின் பாதிப்பு அதிகரிப்பது வழக்கம். இதற்குக் காரணம், அதிகமாக விரிவடையும் கர்ப்பப்பை நுரையீரலை அழுத்துவதால் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.​

கர்ப்பத்தைப் பாதிக்குமா?


குறைந்த அளவில் ஆஸ்துமா பாதிப்புள்ள கர்ப்பிணிகளுக்குக் கர்ப்பத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அடிக்கடி தீவிரமாக ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் ரத்த அழுத்தம் அதிகரித்து, ‘பிரசவ முன்வலிப்பு’ (Pre-eclampsia) வரலாம். சிலருக்கு குறித்த பிரசவ நாளுக்கு முன்பே குழந்தை பிறப்பதற்கும், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எந்நேரமும் ஆஸ்துமா(Status asthmaticus) இருந்தால் மட்டுமே பிரசவத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம்.

என்ன செய்ய வே2ண்டும்?

ஏற்கனவே சொன்ன ஆஸ்துமாவைத் தூண்டுகிற காரணிகளை ஒதுக்க வேண்டும். கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே குழந்தையின் வளர்ச்சியை அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆஸ்துமாவுக்குக் கொடுக்கப்படுகிற ஸ்டீராய்டு மாத்திரைகளால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆகவே, ரத்தச் சர்க்கரை
அளவையும் அடிக்கடி கவனிக்க வேண்டும்.​

சிகிச்சை என்ன?​


*குறைவான பாதிப்பு அவ்வப்போது உள்ளவர்கள் மூச்சுக்குழாயை உடனடியாக விரிக்க உதவுகிற பிராங்கோடைலேட்டார்(Bronchodilators) மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, அல்பூட்டிரால்(Albuterol) மருந்து கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. இதை மாத்திரையாக எடுத்துக் கொள்வதைவிட இன்ஹேலரில் எடுத்துக்கொள்வது நல்லது.

*குறைவான பாதிப்பு அடிக்கடி உள்ளவர்கள் அல்பூட்டிரால் இன்ஹேலருடன், குறைந்த அளவில் புடிசோனைடு(Budesonide) ஸ்டீராய்டு இன்ஹேலரை பயன்படுத்தலாம்.

*மிதமான பாதிப்பு நிரந்தரமாக உள்ளவர்கள் மிதமான அளவில் புடிசோனைடு மற்றும் சால்மீட்ரால் கலந்த இன்ஹேலரைப் பயன்படுத்தவேண்டும்.

*தீவிர பாதிப்பு உள்ளவர்கள் மேற்சொன்ன மருந்துகளை சற்று அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்டீராய்டு மாத்திரைகளும் ஊசிகளும் தேவைப்படும். சிலருக்கு இந்த மருந்துகளை நெபுலைசர் மூலம் செலுத்த வேண்டியதும் வரலாம். இவர்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா என்பதை ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிலருக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டியதும் வரலாம். இச்சிகிச்சையை மருத்துவர் சொல்லும் காலம் வரை தொடர்ந்து எடுக்க வேண்டியதும் முக்கியம்.
ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்தலாமா?​


பெரும்பாலும் ஸ்டீராய்டு மாத்திரைகளால்தான் பக்கவிளைவு ஏற்படும். இந்த மருந்துகளை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி குறைக்க வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்று ஒருவரைமுறை இருக்கிறது. டாக்டர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் இது.

தற்போது கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான ஸ்டீராய்டு மருந்துகள் கிடைக்கின்றன. எனவே, மருத்துவர் பரிந்துரைப்படி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதாக இருந்தால், எந்த பக்கவிளைவும் ஏற்படாது. கர்ப்பிணிகள் பயப்படத் தேவையில்லை.
இன்ஹேலரே சிறந்தது!

கர்ப்பிணிகளுக்கு ‘இன்ஹேலர்’ ஒரு வரப்பிரசாதம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலை அடைந்த பின்புதான் பலன் தரும். அதற்குச் சிறிதுநேரம் ஆகலாம். இந்த மருந்தின் அளவுகளும் அதிகம். கைநடுக்கம் போன்ற சில பக்கவிளைவுகளும் இவற்றுக்கு உண்டு. ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று அங்குள்ள மூச்சுக்குழல் தசைகளை உடனடியாகத் தளர்த்திவிடும். இதன் பலனால் மூச்சுத்திணறல் உடனே கட்டுப்படும்.

இதில் பயன்படுத்தப்படும் மருந்தின் அளவு மிகவும் குறைவு. மைக்ரோ கிராம்களில்தான் இந்த மருந்து செலுத்தப்படுகிறது. உடலின் வேறு உறுப்புகளுக்கு இந்த மருந்து செல்வதில்லை. எனவே, இதற்கு அவ்வளவாக பக்கவிளைவுகள் இல்லை. பெக்ளோமித்தசோன்(Beclomethasone), டிரையாம்சினோலோன்(Triamcinolone), புடிசோனைடு ஆகியவை பாதுகாப்பான ஸ்டீராய்டு மருந்துகள்.​

ஒவ்வாமை மருந்துகள்​


ஆஸ்துமா வருவதற்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணமாகக் கருதப்படுவதால், அதைத் தடுக்கும் மாண்டிலூக்காஸ்ட்(Montelukast) மாத்திரையை மருத்துவர் யோசனைப்படி தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். மூக்கு ஒழுகலைக் கட்டுப்படுத்துகிற ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகளை அவ்வப்போது குறைந்த அளவில் சாப்பிட்டால் போதும். இந்த வழிகளால் கர்ப்ப காலத்தில் ஆஸ்துமாவின் பாதிப்பைக் குறைக்கவும் முடியும்; தடுக்கவும் முடியும்.

தவிர்க்க வேண்டிய மருந்துஇரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் பிரசவத்தின்போதும் மிசபுரஸ்டால்(Misoprostol) எனும் மருந்து கொடுக்கப்படுவது வழக்கம். ஆஸ்துமா உள்ள பெண்களுக்கு இந்த மருந்தைத் தரக்கூடாது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#7
கர்ப்ப கால ரத்த சோகை


ரத்த சோகை என்பது இந்தியாவில் இயல்பானது. அதிலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை இன்னும் இயல்பானதாகவே இருந்து வருகிறது.
‘ரத்தசோகை இல்லாத இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ், இளம் வயதுள்ள பெண்களிடம் பரிசோதித்தபோது, ஆய்வில் கலந்துகொண்ட பாதி பேருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தவறான உணவுப் பழக்கம், வறுமை காரணமாக சத்துள்ள உணவை சாப்பிடாதது, அடிக்கடியும் குறைந்த இடைவெளியிலும் கர்ப்பமாவது போன்ற பல காரணங்களால் ரத்தசோகை ஏற்படுவதாக அதில் தெரியவந்தது.


சாதாரணமாக ரத்தத்தில் சிவப்பணுக்கள் 50,000/கன மி.மீ. என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த அளவு குறையும்போது ஏற்படும் நிலைமையை ரத்தசோகை(Anaemia) என்கிறோம். உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் சுமந்து செல்வது சிவப்பணுக்கள்தான். இவற்றில் உள்ள ஹீமோகுளோபின்(Haemoglobin) எனும் இரும்பு சத்துப் பொருள்தான் இப்பணியைச் செய்கிறது. ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும்.

கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் 12 - 14.8 கிராம் இருக்க வேண்டும். 11 கிராமுக்குக் கீழ் இருந்தால், அது ரத்தசோகையைக் குறிக்கும்; 9 கிராமுக்குக் கீழ் இருந்தால் அந்த கர்ப்பிணிக்கு முழுமையான ரத்தப் பரிசோதனைகளும் முறையான சிகிச்சைகளும் உடனடியாகத் தேவைப்படும்.ரத்த சோகைக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவதாக இருப்பது சத்து குறைபாடு. சிவப்பணுக்கள் உற்பத்தியாவதற்கு இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்-பி12, வைட்டமின்-சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை தேவை. தினசரி உணவில் தேவையான அளவுக்கு இவை இல்லாதபோது ரத்தசோகை
ஏற்படுகிறது. மசக்கை காரணமாக முதல் டிரைமெஸ்டரில் பல கர்ப்பிணிகள் சரியாகச் சாப்பிட மாட்டார்கள்.

இது ஏற்கனவே உள்ள ரத்தசோகையை அதிகப்படுத்துகிறது.அதேபோல் நாள்பட்ட இரைப்பைப் புண், மூலநோய்(Piles), சீதபேதி போன்றவை காரணமாக மலத்தில் ரத்தம் வெளியேறுவதுண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு இருக்கும். இதுபோன்ற ரத்த இழப்புகளாலும் ரத்தசோகை ஏற்படுகிறது.

குடலில் கொக்கிப்புழு தொல்லை, பரம்பரை காரணமாக ஏற்படும் சிவப்பணுக் கோளாறு, தைராய்டு பிரச்னை, சிறுநீரகக் கோளாறு, மலேரியா, காசநோய், புற்றுநோய் போன்றவையாலும் ரத்தசோகை ஏற்படுத்துவதுண்டு.ரத்தசோகையின் பாதிப்புகள் பொதுவாக இரண்டுவகையில் வெளிப்படுவதுண்டு.சத்துக் குறைவு ரத்தசோகை இரும்புச்சத்து, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் குறைவதால் ஏற்படும் ரத்தசோகை முதல் வகை.

கர்ப்ப கால ரத்தசோகைபொதுவாகவே, கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தின் கன அளவு அதிகரிக்கும். அப்போது, ரத்தம் நீர்த்துப்போவதும், அதன் விளைவாக ஹீமோகுளோபின் குறைந்து ரத்தசோகை ஏற்படுவதும் நடைமுறை. கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ரத்தசோகை இல்லாதவர்களுக்கு, இரண்டாவது டிரைமெஸ்டரில் ஹீமோகுளோபின் 10 கிராமுக்குக் குறைவாகவும், சிவப்பணுக்கள் 30 ஆயிரத்துக்கும் குறைவாகவும், பிசிவி(PCV) 32%-க்கும் குறைவாகவும் இருந்தால், அது கர்ப்ப கால ரத்தசோகையைக் குறிக்கும். உணவு மற்றும் மாத்திரைகள் மூலம் இதை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலைமை பிரசவத்துக்குப் பிறகு 6 மாதங்கள் கழித்து சரியாகிவிடும்.

பொதுவான அறிகுறிகள் பசி குறையும். அஜீரணம் உண்டாகும். மிகுந்த சோர்வு ஏற்படும். அடிக்கடி தலைவலி, உடல்வலி, தூக்கமின்மை போன்றவை தொல்லை தரும். அடுத்த கட்டத்தில் மாடிப் படிகளில் ஏறினால் மூச்சு வாங்கும். படபடப்பாக வரும். நெஞ்சு வலிக்கும். தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படும். முகம், நகம், நாக்கு வெளுக்கும். முகம், கால் வீங்கும். அடிக்கடி தொண்டை, வாய், நாக்கு ஆகியவற்றில் புண் உண்டாகும்.
கர்ப்பிணிக்கு என்ன பிரச்னை?

கர்ப்பிணிக்கு ரத்தசோகை இருந்தால், நோய் எதிர்ப்புசக்தி குறைந்துவிடும். இதனால், அடிக்கடி ஏதாவது ஒரு நோய்த் தொற்று தொல்லை கொடுக்கும். உடலில் மறைந்திருக்கிற நோய்கள் வீரியமடைந்து பிரச்னை செய்யும் முன் பிரசவ வலிப்பு வரலாம். குறைப் பிரசவம் ஏற்படலாம். மூன்றாவது டிரைமெஸ்டரில் இதயம் செயலிழந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து நேரலாம். பிரசவத்தின்போதும், பிரசவித்த பின்பும் அதீத ரத்தப்போக்கு ஏற்படலாம். நுரையீரலில் ரத்தம் உறைந்து(Pulmonary embolism) கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்தைக் கொடுக்கலாம். தாய்ப்பால் குறைவாகச் சுரக்கலாம்.
குழந்தைக்கு என்ன பிரச்னை?

பொதுவாக, கருவில் வளரும் குழந்தை தனக்குத் தேவையான இரும்புச் சத்தைத் தாயின் ரத்தத்திலிருந்து உறிஞ்சிக் கொள்வதால், குழந்தைக்கு அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை. என்றாலும், கர்ப்பிணிக்கு ஏற்பட்ட ரத்தசோகை மிக மோசமான நிலைமையில் இருந்தால், குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்; எடை குறைவாக இருக்கும்.

குழந்தை உயிரிழக்கும் அபாயமும் உண்டு. ஃபோலிக் அமிலம் குறைவால் கர்ப்பிணிக்கு ரத்தசோகை ஏற்பட்டிருந்தால், குழந்தைக்கு பிளவுபட்ட மேல் உதடு, அண்ணப் பிளவு, முதுகுத் தண்டுவட நரம்பில் பிரச்னை போன்ற பிறவிக்
கோளாறுகள் தோன்றக்கூடும்.

என்ன சிகிச்சை?

ரத்தசோகையின் வகை மற்றும் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், நோய் விரைவில் குணமாகும். இந்தியாவில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்துக் குறைவால்தான் ரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பமானதும் கர்ப்பிணிகள் மருத்துவரைச் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதித்து ரத்தசோகை இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

ரத்தசோகை இருந்தால், இரும்புச் சத்து மாத்திரை ஒன்றை தினமும் 200 மி.கி. வீதமும், ஃபோலிக் அமிலம் மாத்திரை ஒன்றை தினமும் 1 மி.கி. வீதமும் பிரசவம் வரை சாப்பிட வேண்டும். ஏற்கனவே ஊனமுற்ற குழந்தை பிறந்திருந்தால், அந்தக் கர்ப்பிணிகள் மட்டும் ஃபோலிக் அமிலம் மாத்திரை ஒன்றை தினமும் 4 மி.கி. வீதம் முதல் டிரைமெஸ்டர் வரை சாப்பிட வேண்டும். அதற்குப் பிறகு இதன் அளவை 1 மி.கி. வீதம் குறைத்துக் கொள்ளலாம்.

அத்தோடு இரும்புச் சத்துள்ள உணவுகளையும் புரதம் நிறைந்த உணவுகளையும் தேவைக்கேற்ப சாப்பிட வேண்டும். குடற்புழு மாத்திரையையும் சாப்பிட வேண்டும். ரத்தசோகையை உண்டு பண்ணும் மலேரியா, மூலநோய், சிறுநீரகத் தொற்று, சீதபேதி போன்றவற்றுக்கு உடனுக்குடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். 30-வது, 36-வது கர்ப்ப வாரங்களில் மீண்டும் ஒருமுறை ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதித்து ரத்தசோகை சரியாகிவிட்டதா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இரும்புச்சத்து ஊசிகள் எப்போது தேவை?


மேற்சொன்ன சிகிச்சை எடுத்த பிறகும் ஹீமோகுளோபின் அளவு 9 கிராம்/100 மி.லி.க்கும் குறைவாகவே இருக்கிறது என்றால், இரும்புச்சத்து ஊசிகளைச் செலுத்த வேண்டும். இவை தசை ஊசிகளாகவும், சலைனில் கலக்கப்பட்டு ரத்தத்தில் நேரடியாக செலுத்தப்படும் சிரை ஊசி
களாகவும் கிடைக்கின்றன. கர்ப்பிணிக்குத் தேவையான மொத்த இரும்புச்சத்தை அளவிட்டு(Total dose infusion), ஒரே ஊசியில் ரத்தத்தில் செலுத்திவிடுவது சிறந்தது.

ஏனென்றால், இரும்புச்சத்து தசை ஊசிகளைத் தொடர்ந்து பலமுறை போட வேண்டும். இதற்கு சோம்பல்பட்டு பலரும் சிகிச்சையை நிறைவு செய்வதில்லை. மேலும், ஊசிபோட்ட இடத்தில் வலி, வீக்கம், தொற்று, தோல் நிறம் மாறுவது போன்ற சிரமங்களும் ஏற்படலாம்.
ரத்தம் செலுத்த வேண்டுமா?

கர்ப்பிணிக்கு ரத்தசோகை மிகவும் மோசமாக இருந்தாலோ, கர்ப்பத்தின் கடைசி டிரைமெஸ்டரில்தான் கர்ப்பிணிக்கு ரத்தசோகை இருக்கிற விஷயமே தெரியவந்தது என்றாலோ ரத்தம் செலுத்த வேண்டியது வரலாம் அப்போதுகூட ரத்தசெல்களை(Packed cells) மட்டும் தேவைக்கேற்ப செலுத்திக் கொள்வது நல்லது.


டாக்டர் கு.கணேசன்
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.